Tuesday, February 4, 2014

“உஜுது'' “மவுஜுது''...?

“உஜுது” என்ற அறபுச் சொல்லையும் “மவுஜுது” என்ற அறபுச் சொல்லையும் கடினமாய் ஆராய்ந்து விளங்கினால் அவை ஒன்றுக்கொன்று பேதம்போல வெளிப்படையில் தென்பட்டாலும் உண்மையாகவே அவ்விரு சொற்களுக்குமிடையில் பேதமில்லை. “றப்பு” “அப்து” என்ற அறபுச் சொற்களும் இதேபோல் எவ்வித பேதமுமில்லாத சொற்களேதான். ஆனால் இதை முறையாய்ச் சிந்தனை செய்து தெளிவு பெறாத வஹ்முடைய மக்கள் இவ்வுண்மையை ஒப்புக்கொள்வதே இல்லை. ஆகவே மனிதரில் பெரும்பாலார் எவ்வித ஆதாரமும் கண்டறியாமலே இவ்வுண்மையை மறுக்கமுற்படுகிறார்கள். இதற்குரிய காரணம் என்னவென்றால். றப்பை ஓர் தனிமூலப் பொருளாகவும் அப்தை அல்லாஹ் அல்லாத ஓர் தனிப்பொருளாகவும் அவர்களுடைய உள்ளம் பதிவுசெய்து கொண்டிருப்பதுதான். ஆனால் உண்மை என்னவென்றால் உள்ள ஒரேயொரு மூலப்பொருளின் இரு நிலைமைகளுக் கமைவாய் இடப்பட்ட இரு பெயர்தான் றப்பு, அப்து என்ற சொற்களாகும். ஆனால் வஹ்முடைய மக்கள் இவ்விரு சொற்களும் இரண்டு தனித்தனிப் பொருட்களை உணர்த்துவதாக நம்புகிறார்கள்.

ஆகவே அப்து றப்பாகாது. றப்பு அப்து ஆகாது என்கிறார்கள். எப்படி ஆகும்? உள்ளது ஒரேபொருள் நிலைமைக்கேற்ற பெயரைப் பெறும்போது ஒன்று மற்றொன்றாக மாற இரண்டு பொருட்கள் ஏது? (நுட்பமாய் உணர்க). இதை இலகுவாக மனிதன் உணரக்கூடியதாய் இருந்திருந்தால் இத்தனை நபிமார்கள் வரவேண்டியதில்லை. 

ஆகவே சிருஷ்டி என்பது என்ன? என்ற விபரத்தைப் பொறுமையோடு விளங்கியறிவோம். 

“அப்து” என்ற அறபுச்சொல்லுக்கு அடிமை என்பதே அர்த்தம். றப்பு என்றால் எஜமான் என்பது அர்த்தமாகும். அதாவது அப்து என்பதற்கு எதிர்ச்சொல்தான் றப்பு என்பது. அப்து அடிமையென்றால் எவ்விதமான சுதந்திரமும், நான் என்ற தன்னுணர்வும்கூட இல்லாதது என்பதே அதன் கருத்தாகும. நான் என்ற உணர்கிற உணர்வானது இருந்தால். இது “அப்து” அடிமையென்ற பெயரைப்பெறாது. இதே போல் “றப்பு” என்பது சர்வசுதந்திரமும் எதன் தேவையுமற்ற ஒன்றாகும். மற்றெல்லாவற்றுக்கும் வேண்டிய எல்லாத் தேவைகளையும் (அடிமைக்கு வேண்டிய அத்தனையையும்) தன்னிடத்தே வைத்துக் கொண்டிருப்பதானால்தான் அது “றப்பு” எஜமான் என்ற பெயர் பெறுகிறது. இப்போது சிந்தனை செய்துபார். றப்பு (எஜமான் என்பது (அப்து) அடிமைக்கு ஆதாரமாய் இருக்கிறது. அப்து (அடிமை) என்பது ஆதாரத்தில் வேண்டுதலுள்ள (தேவையுள்ள) ஆதேயமாய் இருக்கிறது. ஆதேயம் என்பது தோன்றி மறைந்தொழியும் வெறும் நாமமும் நிறமும் தோற்றமுமாகவே இருக்கிறது. இப்படி தோன்றி மறையும் பொருள் குணமேயல்லாமல் குணியல்ல. அதாவது ஆதாரமும் (குணி) றப்பாகவும் ஆதேயம் (குணம்) அப்துவாகவும் இருக்கிறது. இன்னும் கூறினால் எஜமான் என்னும் றப்பு பூரண சுதந்திரமுள்ள ஆதாரமாகவும் அடிமை என்னும் அப்து சுதந்திரமற்ற ஆதேயமாயும் இருக்கிறது. இது மனிதனை மட்டும் பொறுத்த விஷயமல்ல. சர்வசிருஷ்டிகளுமே அப்துவாக (அடிமைகளாக)த்தான் இருக்கின்றன. இதை இன்னும் தெளிவாய்ப் புரிந்து கொள்வதற்காக நீ காணும் கனவைச் சிந்தனை செய்துபார். உன்னுடைய உள்ளத்தை அல்லது ஆத்மாவை றப்பினுடைய இஸ்தானத்தில் வைத்துக்கொள். உன் கனவில் தென்படுகிற சிருஷ்டியை அப்துடைய இஸ்தானத்தில் வைத்துக்கொள். இப்போது சிந்தனை செய்துபார். உன் உள்ளம் அல்லது ஆத்மா பூரண சுதந்திரமுடையதாகவும் கனவில் தென்பட்ட சிருஷ்டி எவ்வித சுதந்திரமுமில்லாமல் உள்ளத்தின் (ஆத்மாவின்) தேவையுள்ள அடிமையாகவும்தான் இருக்கிறது. 

ஏனென்றால் விழிப்பைப் பெற்றபின் அந்தக் கனவில் தோன்றிய சிருஷ்டி நிச்சயமாக மறைந்தே போய்விடும். ஏன் அப்படி மறைந்து விடுகிறது? அந்தச் சிருஷ்டி உண்மையில் பொருளே அல்ல. வெறும் நாமமும் தோற்றமும் நிறமுமேயல்லாமல் பொருளல்ல. பொருளாய், ஆதாரமாய்க், குணியாய், றப்பாய் இருந்தது மனமேதான். அதேபோல் ஆதேயமாய், குணமாய், அப்தாய் இருந்தது கனவில் வெளியான சிருஷ்டிதான். ஆகவே மனம் அல்லது ஆத்மாவென்ற பொருள் அதன் உண்மையான நிலையில் எஜமானாகவும் (றப்பு ஆகவும்) அதனால் உருவாக்கப்பட்ட சிருஷ்டி என்ற நிலைமையில் அல்லது ஆதேயம் அல்லது குணம் அல்லது ஷிபத் என்ற நிலைமையில் அடிமையாகவும் (அப்துவாகவும்) தென்பட்டது. ஆகவே உள்ள ஒரே பொருள்தான் நிலைமைக்கேற்றபடி றப்பு என்றும் அப்து என்றும் பெயர் பெற்றதல்லாமல் இரண்டு பொருள் இல்லவே இல்லை. நுட்பமாய் உணர்க. 

ஆதியில் இனம் காணமுடியாமல் அறிவுக்கு எட்டாமல் (நின்ற) இருந்த, இருக்கிற, இருக்கப்போகிற, “உஜுது” என்ற உண்மைப் பொருள் இருந்த அதேநிலைமையில் இருந்துகொண்டு தன்னிடத்தே தனக்காக “மவுஜுது” என்ற உடையில் காலமாய், இடமாய், ஏதோவெல்லாமாய் வெளியாகித் தனக்கே காட்சியளிக்கின்றது. ஆகவே, உஜூது என்ற சொல்லுக்கும் மவுஜூது என்ற சொல்லுக்கும் தொனியில், சொல்லில் பேதமேயன்றிப் பொருளில் பேதமே இல்லை. பொருள் ஒன்றேயன்றி இரண்டேயல்ல. சிருஷ்டி என்பதன் பொதுப்படையான விளக்கம் உஜுதில் தோன்றி மறைந்தழியும் அவ்வுஜுதின் கற்பனைகளேயன்றி, உஜுதைப்போன்ற தனித்தனி உஜுதுகளேயல்ல. இது பொறுமையாய்த் தெளிவாய் விளங்கிக் கொள்ளவேண்டிய ஓர் விஷயம். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் எவ்விதமான ஆராய்வும் தர்க்கரீதியான ஆதாரமும் இல்லாமல் திடீரென மறுப்பதும் உண்மையைக் கண்டறிய முற்படாமல் இருப்பதும்தான். ஏனென்றால் றப்பு என்பதை ஓர் பொருளாகவும் அப்து என்பதை வேறோர் பொருளாகவும் நம்பி உள்ளத்தில் உறுதியாக அமைத்துக் கொண்டிருப்பதுதான். இது நூற்கேள்வியினால் ஏற்பட்ட விளைவாகும். 

றப்பை ஓர் பொருளாகவும் அப்தை றப்பல்லாத இன்னோர் பொருளாகவும் கணிக்கிற மக்கள், சாரக்கண்ணன் ஒரேபொருளை இரண்டாகப் பார்ப்பதுபோல ஒரே உண்மைப் பொருளை இரண்டாய் அல்லது பலவாய்க் காண்கிறார்கள். அவர்களுடைய அகத்தில் இவ்விதமான ஆக்குதலை அறியாமையினால் உருவாக்கிக் கொண்டிருப்பதால் அப்து றப்பாகவோ றப்பு அப்தாகவே முடியாது என்று பிடிவாதம் கொள்கிறார்கள். இந்த வஹ்மில் மிகப்பல பட்டதாரிகளான அறிஞர்களும்கூட சிக்குண்டிருக்கிறர்கள். இந்த விதமான உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் தவறான கொள்கைதான் ஷிர்க்கு என்பதன் உண்மை. இந்தத்தவறான எண்ணத்தை நீக்கி ஒன்றைத் தவிர ஒன்றுமே இல்லையென்று உறுதிகொள்வதுதான் ஈமான் என்பதன் உண்மை. இந்த ஈமானுக்குத்தான் தௌஹீது என்று கூறப்படுவது. இதை விளக்கும் மூலமந்திரம் தான் தௌஹீதுக் கலிமா என்பது.

Thanks - masura