அறிவே அது அனைத்தையும்
அறிவதும் அது
ஆதியும் அது அனைத்திலும்
மீதியே இல்லாதது
இருப்பே அது இன்னொன்றுக்கு
இணை இல்லாதது
கருவே அது கற்றுத்தரும்
உயிர் குருவே அது
உறவே அது-உள்ளவற்றின்
உள்ளீடும் அது
பிரிவு இல்லாதது – எதிலும்
நீக்கமற நிறைந்ததுவே அது
முடிவே அது எனினும்
முடிவில்லாததுவே அது
காலமும் அது காலத்தின்
காட்சிகளும் அது
உருவும் அது-எனினும்
குருவின்றி உணரமுடியாதது அது
பேதமே அது எனினும்
பேதங்களுக்குள் அடங்காதது அது
விரிவே அது எனினும்
வித்தில்லாதது அது
வித்தே அது
விரிந்துரைக்க முடியாதது அது
மறைவே அது எனினும்
மறைக்க முடியாதது அது
காலத்தின் சத்தியம் அது
எக்காலத்திலும் நித்தியம் அது
குறைவில்லா நிறைவே அது என்றும்
குணக்குன்றாய் வாழுது
கழிவு இல்லா சத்து அது என்றும்
கேட்போருக்கு வழங்கும் அது
குறையில்லா நிறைவே அது
கொடுத்தால் குறையாதது
நேர்மையாய் வாழும் அது
நீர்மையாய் நீதியை காக்கும் அது
தோற்றமும் அது
சர்வத்தின் தோன்றலும் அது
காக்கும் உண்மையது கலீல்
நாதர் குருவாகவும் அது
நீயும் அது என்னில்
உன்னைக் காண்பதும் அது
சர்வமும் அது
அதுவே சர்வமயமானது அது
நிறைவே அது நீத்தலில்லா
இறையே அது.!
A.N.M.முஹம்மது யூசுப் M.A
துபாய்