சங்கைமிகு ஷெய்குநாயகம் ஜமாலிய்யா அஸ்சையது கலீல் அவ்ன் மௌலானா
அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் அருளிய புனித மிஉராஜ் இரவு சிறப்பு துஆ.
அல்லாஹ்வே! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவரை எம்பெருமானார்(ஸல்)
அவர்களை நீ நடத்தினாயே அவர்கள் பொருட்டால் எம் அனைவருக்கும் தைரியத்தையும் உடல் சக்தியையும்
மனோ நிம்மதியையும் தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! எம்பெருமானார்(ஸல்) முதல் வானத்திற் சென்ற போது சிறப்பும்
மேன்மை தங்கிநின்ற ஆதம் (அலை) அவர்களை கண்டார்கள். அவர்கள் இருவர் பொருட்டாலும் சிறப்பையும்
மேன்மையையும் எங்களுக்கு தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! இரண்டாவது வானிலே ஈஸா(அலை) அவர்களை எம்பெருமானார்(ஸல்)
கண்டார்கள் இவர்கள் இருவர் பொருட்டாலும் எமக்கு நிறைந்த ஈமானையும் பூரண தௌஹீத் ஞானத்தையும்
உண்மைக்கு முரணானவர்களுடன் எதிர்த்துப் பேசி எதிரிகளை வெற்றி கொள்ளும் தன்மையையும்
தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! எம்பெருமானார்(ஸல்) மூன்றாம் வானத்திலே யூசுப்(அலை)
அவர்களை கண்டார்கள். இவர்கள் இருவர் பொருட்டாலும் மாட்சிமையையும் உடல் அழகையும் உள்
அழகையும் நிறைந்த செல்வத்தையும் நோயற்ற வாழ்வையும் பாபமற்ற நற்கிரியைகளையும் எமக்குத்
தந்து சந்தோசமான வாழ்வையும் நீடிய ஆயுளையும் தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! நான்காம் வானத்திலே எம்பெருமானார்(ஸல்) இத்ரீஸ்(அலை)
அவர்களை கண்டார்கள். இவர்கள் இருவர் பொருட்டாலும் தௌஹீதிலே எம் தரங்களை உயர்த்தி உலக
வாழ்விலே எம் தொழில்களில் உயர்ச்சியைத் தந்து எம் தொழில்களில் நிறைந்த லாபத்தையும்
உணவில் விஸ்தீரணத்தையும் தந்து எம் வாழ்வில் இன்பம் கொழிக்கச் செய்வாயாக.
அல்லாஹ்வே! ஐந்தாம் வானிலே எம்பெருமானார்(ஸல்) ஹாரூன்(அலை) அவர்களைக்
கண்டார்கள். இவர்கள் இருவர் பொருட்டாலும் எம் குடும்பம் எம் உடமைகள் எம்மைச் சேர்ந்தவர்கள்
அனைவருக்கும் அனைத்துப் பொருள்களுக்கும் பாதுகாப்பை என்றென்றும் அருள்வாயாக. எம் அனைவருக்கும்
வெற்றியை மேல் வெற்றியைத் தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! எம்பெருமானார்(ஸல்) ஆறாவது வானிலே மூஸா(அலை) அவர்களைக்
கண்டார்கள். அவர்கள் இருவர் பொருட்டாலும் எம் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றியருள்வாயாக.
துன்பம் துயர்களை நீக்கியருள்வாயாக. இறைவனை அறியும் பாக்கியத்தையும் எம்பெருமானாரின்
ஷபாஅத்தையும் எமக்கு தந்தருள்வாயாக. நாயகத்தின் எதிரிகளை செயல் இழக்கச் செய்வாயாக.
தௌஹீதைச் சேர்ந்த கூட்டத்தினருக்கு பெருமதிப்பையும் பேரருளையும் பேருதவியையும் தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! எம்பெருமானார்(ஸல்) அவர்கள் ஏழாவது வானிலே இபுராஹீம்(அலை)
அவர்களைக் கண்டார்கள். எனவே இவர்கள் இருவர் பொருட்டாலும் கொடிய நமரூதின் நெருப்பிலிருந்து
இப்ராஹீம்(அலை) அவர்களைக் காப்பாற்றியது போல் எம் கொடிய நோய்களிலிருந்தும் கொடிய சத்துருக்களிலிருந்தும்
அவர்கள் உண்டு பண்ணும் கொடுமையிலிருந்தும் மனக்குழப்பங்களிலிருந்தும் அழிவிலிருந்தும்
எம்மைக் காப்பாற்றி எமக்குச் சந்தோச வாழ்வையும் நீடிய ஆயுளையும் தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! எம்பெருமானார்(ஸல்) அதற்கு மேலும் சென்று அல்லாஹ்வை
அறிவுக் கண்ணால் பூரணமாய்க் கண்டு இரண்டறக் கலந்து இன்பம் பெற்றார்களே அந்த இன்பத்தை
எல்லாவற்றிலும் உன்னைக் கண்டு லயிக்கும் இன்பத்தை எமக்கு தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! எம்பெருமானார்(ஸல்) அவர்கள் பொருட்டால் எமக்குப்
பேரின்பத்தைத் தந்தருள்வாயாக. இந்த ஊரையும் ஏனைய மற்ற ஊர்களையும் காப்பாற்றி அருள்வாயாக.
எம்பாபங்களை மன்னித்து எமக்கு பூரண வெற்றியைத் தந்தருள்வாயாக. உன் எதிரிகள் எங்கிருந்தாலும்
தோற்றோட வைப்பாயாக. கபடம் சூதற்ற உண்மையான வாழ்க்கையை எமக்குத் தந்தருள்வாயாக. உன்னில்
கலந்து வாழும் வாழ்க்கையையே எம் வாழ்க்கையாக்குவாயாக ஆமீன் யாரப்பில் ஆலமீன்.