Sunday, May 13, 2012

வணக்கம் புரிய இன்னுமேன் சுணக்கம்?

நின்று மரங்களும் நீள்வணக்கம் செய்யுமே
கன்றும் பசுவும் கனிவாய்க் குனியுமே
தின்று குடித்துத் தினமு முறங்குகின்ற
உன்றன் நிலையை உணர்

பறக்கு மினங்கள்  பறந்தே வணங்கும்
பிறக்கு முயிர்கள் பிறப்பில் வணங்குமே
மார்க்க மிருந்தும்இம்  மானிட வர்க்கத்தால்
யார்க்கும் உளபயன் யாது?

நலம்பெற வைத்திடும் நல்வணக்கம் நம்மைப்
பலம்பெற வைத்திடும் பக்குவம் நல்கும்
விடைதரும் நாளை விசாரணை நேரம்
தடைகளைப் போக்கும் தரம்


மனிதனும்   ஜின்னும்     மறையோனை வாழ்த்தி
புனிதமாய் மின்ன புலமையோன் நாட
இனிவரும் காலம் இழக்காது கையில்
கனியென மார்க்கத்தைக் காண்

பயிர்க்குச் செலுத்தும் பலந்தரும் நீர்போல்
உயிர்க்குச் செலுத்தும் உயிரே வணக்கமாம்
இம்மை மறுமை இரண்டிலு மிவ்வணக்கம்
நம்மை உயர்த்தும் நலம்.
  
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)