பலவிதமான துன்பங்களுக்குள்ளாகியும் மனம் தளராது, கொண்ட கொள்கையில் உறுதியாக செயலாற்றி வரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பார்க்கும்போது குறைஷிக் காபிர்களுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. அதுமட்டுமின்றி பல கோத்திரத்தாரும் தாமாகவே வந்து இஸ்லாத்தில் இணைந்து வருவதும் அவர்களுக்கு மிகப் பெரிய மன வருத்தத்தைத் தந்தது.
இப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் அயராது பாடுபட்டு வருவதற்கு என்ன காரணமாக இருக்கும்என்று உண்மையை உணர முடியாத மூடர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். ஒருவேளைஉலக ஆசையே காரணமாக இருக்கக்கூடும் என்று தங்களைப் போலவே அவர்களையும் எடை போட்டனர். நாம் ஒரு தூதுவரை முஹம்மது (ஸல்) அவர்களிடம் அனுப்பி அவரின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்துவரச் செய்யலாம். அதன்பின் அதற்கான பரிகாரத்தைச்செய்து அவரின் செயல்பாட்டைத் தடுத்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.
அதற்காக மக்காவிலுள்ள பெரிய செல்வந்தர்களில் ஒருவனும் பிறரைக் கவரக்கூடியவகையில்பேசக்கூடியவனும் குறைஷிக் குலத் தலைவர்களில் ஒருவனுமாகிய உத்பா என்பவனைத் தேர்வு செய்தனர். அவனிடம் சில விஷயங்களைச் சொல்லி பெருமானார் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். ஒரு பெரிய மகத்தான காரியத்தைச் சாதித்துவிட்டது போன்ற பெருமிதம் அவர்களிடையே காணப்பட்டது. இந்தச் சாதுர்யமான முயற்சியில் முஹம்மது (ஸல்) அவர்களை எப்படியும் மடக்கி விடலாம் என்று இறுமாந்திருந்தனர்.
உத்பா பெருமானார் (ஸல்) அவர்கள் சமூகத்தில் வந்து பல்லை இளித்தவாறு பேசலானான். "தாங்கள் மிக உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நம்முடைய கூட்டத்தாரில் மிகுந்த கண்ணியமுள்ளவர்கள். அப்படியிருந்தும் தாங்கள் நம் தெய்வங்களையே நிந்திப்பதும் தூஷிப்பதும் முறையா? இதுநாள் வரை நம் கூட்டத்தார் அனைவரும் புரிந்து வரும் வழிபாட்டைக்
கைவிடச் சொல்வதும் சரியா? இதனால்தான் நாங்கள் தங்கள் மீது கோபம் கொள்ள நேரிட்டது வேறு தனிப்பட்ட முறையில் தங்கள் மீது எங்களுக்கு எந்த விதமான வருத்தமும் இலலை.
தாங்கள் திடீரென இப்படிச் செய்வதன் உள்நோக்கம் தான் என்ன? ஒருவேளை அதிக செல்வங்களைப் பெற்று பெரிய செல்வந்தர் ஆக ஆசையா? அப்படி ஏதும் எண்ணமிருந்தால்
தாங்கள் தயங்காமல் என்னிடம் சொல்லலாம். நாங்கள் அனைவரும் கூடி தங்களுக்கு நிகரான
செல்வந்தரே அரேபியாவில் இலலை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான செல்வத்தைத் தருகிறோம்.
"அப்படியில்லாமல் எங்கள் அனைவருக்கும் தலைவராக வேண்டும் என்று விரும்பினால் அதையும் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லலாம். எங்களுக்கு மட்டுமல்ல, இந்த அரேபியா தேசம் முழுவதற்குமே தங்களைத் தலைவராக்கி விடுகிறோம். இவ்விரண்டுமே இல்லாது வேறு ஏதாவது பெண் சம்பந்தமான ஆசை இருந்தால் அரபு நாட்டு அழகிகளில் ஒருவரை அல்ல ஒன்பது பேரைத் தங்களுக்கு உரிமையாக்கித் தருகிறோம்." என்றெல்லாம் கேட்டுப் பார்த்தான்.
இதனைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த பெருமானார் (ஸல்) அவர்களிடம் எந்த விதமான சபலமும், மாற்றமும் தெரியாததால், அவன் ஆச்சர்யப்பட்டு, "நான் குறிப்பிட்ட
மூன்று விஷயங்களுமே தங்களுடைய குறிக்கோள் இல்லையென்றால் தங்களுக்கு ஏதாவது மனக்கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அது பற்றியும் தாங்கள் கவலைப் படவேண்டாம். அதற்கும் நாங்களே எவ்வளவு செலவு ஆனாலும் சரி, வைத்தியம் செய்யவும்
தயாராகவுள்ளோம்." என்று பைத்தியம் பிடித்தவன்போல் பிதற்றித் தள்ளினான்.
மனிதன் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டிருக்கிறான் என்பதை உணராமல், மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கம் செல்வந்தர் ஆவதும், ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதும் சிற்றின்பத்தை அனுபவிப்பதும்தான் என்று சாதாரணமாக மக்களில் பெரும்பாலோர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நாம் எதற்காகத் தோன்றியுள்ளோம் என்பதையே அறியாத முட்டாள்களுக்கா பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றிய நோக்கம் புரியப் போகிறது? முஹம்மது (ஸல்) அவர்களின் மகா உன்னத நிலையை அவர்களின் அந்தரங்கத்தை அவர்களது ம்காமை அறிய முடியாத உத்பாவும் முஹம்மது (ஸல்) அவர்களை நம்மைப்போன்ற சாதாரண மனிதர்தான் என்று நினைத்து இவ்வாறெல்லாம் அவர்களிடம் கேட்டுவிட்டான்.
அந்த மூடனுக்கு விடையாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "புன்முறுவலுடன்" எனக்குப் பெரிய செல்வந்தன் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் அனுவத்தனையும் இலலை.
தலைமைத்தனமும் எனக்கு வேண்டாம். சிற்றின்ப சுகங்களும் எனது நோக்கமல்ல. மேலும் எனக்கு எந்தவித மனக் கோளாறும் இலலை. நான் ஏக இறையின் தூதுவன். அவன் எப்படி இருக்கிறான்? அவன் வல்லமை என்ன? என்பதை எண்பித்துக் காட்டும்தூதுவரே நான். அந்த ஏக இறையோனின் கிருபையாகிய நற்செய்தியை உங்களுக்கு எடுத்துக் கூறவும் அதனைக் கேட்காமல் தான்தோன்றித் தனமாக திரிபவர்களுக்கு அவனைப் பற்றிய அச்சத்தை ஊட்டி எச்சரிக்கை செய்யவுமே நான் வந்துள்ளேன்.
"நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இவ்வுலகத்திலும் நலமுடன் வாழ்வீர்கள்.
மறுமையிலும் இன்ப வாழ்வடைவீர்கள். நீங்கள் என்னுடைய நற்செய்தியை புறக்கணித்து என்னைப் பொய்யன், மனக்கோளாறு பிடித்தவன் என்றெல்லாம் சொன்னால், உங்கள்
நிந்தனைகளை நான் பொறுத்துக் கொண்டு உங்களுடைய காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவேன். அவனே உங்களுக்கும் எனக்கும் மத்தியில் தீர்ப்பு வழங்கட்டும். ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும். நான் உங்களுக்கு எடுத்துரைக்கும் வேதமானது கிருபையுள்ள இறைவனால் அருளப்பட்ட பரிபூரணமான வேதமாகும். மேலும் நீங்கள் விளங்கிக்கொள்ள ஏதுவாக உங்கள் மொழியிலேயே வந்துள்ளது. அதனை ஏற்று நடப்பவர்களுக்கு நன்மாராயமும் புறக்கனிப்பவர்களுக்கு அச்சமூடுவதும் அதில் அடங்கியுள்ளது.
"இவ்வளவு தெளிவாக நான் எடுத்துரைத்தும் ஏற்றுக் கொள்ளாமல் சிலை வணக்கத்தையே பெரிதாகக் கொண்டு திரிவது எவ்வளவு மதயீனம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் சொல்லியதைக் கேட்பவர்கள் ஜெயம் பெறுவார்கள். இனி உம்முடைய விருப்பம்போல்
செய்து கொள்ளுங்கள்." என்று சொல்லி அத்தூதுவனை அனுப்பிவிட்டார்கள்.
உத்பா முகமெல்லாம் கருத்து சுருங்கிப்போய் குறைஷிக் காபிர்களிடம் வந்து சேர்ந்தான். அவன் போகும்போது இருந்த உற்சாகம் இப்போது அவனிடம் தென்படவில்லை. இதைக் கண்ட குறைஷிக் காபிர்களுக்குப் பெரிய கலக்கம், ஏமாற்றம் ஏற்பட்டது. அனைவரும் ஓடி வந்து
உத்பவை சுற்றி வளைத்துக்கொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று வினவினார்கள்.
அப்போது உத்பா, "என்னிடம் ஒன்றும் கேட்கவேண்டாம். நான் என் காதில் கேட்டவை கவியுமல்ல, மந்திர தந்திர வார்த்தயுமல்ல. சோதிடமுமல்ல. குறைஷிகளே! நான் சொல்வதை
கவனமாகக் கேளுங்கள். நீங்கள் இனிமேல் முஹம்மது (ஸல்) அவர்களுடய காரியத்தில் தலையிட வேண்டாம். அல்லாஹ்வின்மீது சத்தியமாக அவர் வார்த்தைகள் வீண்பேச்சு அல்ல.நமக்கு நேர்வழியைத்தான் அவர் கட்டுகிறார். அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு நன்மையைத்தான் கூறுகிறேன். மேலும் அவரை உங்களால் ஒருபோதும்வெற்றிகொள்ள முடியாது. என்று சொன்னான்.
சற்றும் எதிர்பாராத இந்த பதிலைக் கேட்ட குறைஷிக் காபிர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து "ஓ அபுல் வலிதே! (உத்பாவின் மறுபெயர்) அவர் உம்மையும் தம்முடைய மந்திர சக்தியினால் வசப்படுத்தி விட்டார் போலிருக்கிறது" என்று கத்தினார்கள். ஏமாற்றமும் ஆத்திரமும் அவர்களின்கண்களை மறைத்தன. "இனியும் நாம் இப்படியே சும்மா இருந்துவிடக்கூடாது. முஹம்மது (ஸல்) அவர்களை உலக ஆசையை காட்டி வசப்படுத்த முடியாது. முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எவ்வளவு துன்பங்களைச் செய்யமுடியுமோ அவ்வளவு துன்பங்களைச் செய்வதே நமது அடுத்தக்கட்ட நடவடிக்கை" என்று முடிவெடுத்தார்கள்.
ஆவேசத்துடன், ஆர்ப்பாட்டத்துடன் ஆடிக்கொண்டு போன தூதுவன் அடங்கி வந்ததும் அண்ணலாரின் அற்புதமே!
நன்றி:மறை ஞானப்பேழை (அற்புத வரலாற்றிலிருந்து......)
தகவல்: M.A. சிராஜுதீன். துபை.