Monday, May 2, 2011

நுண்மைமிக்க நூரே முஹம்மதிய்யா!- கவிதைகள்

முக்கனியாய் மூன்று கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன ஆர்வத்துடன் எழுதிய அன்பு சகோதரர்களுக்கு மிக்க நன்றி

------------------------------------------------------------------------
என்னதவம் செய்தேனோ!

என்ன தவம் செய்தேனோ –நான்
என்ன தவம் செய்தேனோ
எனை ஆளும் மன்னவரை
எங்குமாய் நிறைந்தவரை
முழுமையாய் நிற்பவரை
முழுமதியின் பேரழகை
குருவாக நான் அடைய
என்னதவம் செய்தேனோ!

முத்தமிழின் சீர்அழகை
முக்கால பேரறிவை
முத்தான முக்கனியை
முகம்மதிய பேரொளியை
சத்தான சன்மார்க்க
சத்தியத்தின் சற்குருவை
குருவாக நான் அடைய
என்னதவம் செய்தேனோ!

அன்பின் உருவமாய்
அவ்னாக அவதரித்து
அறிவென்னும் வாளால் -என்
அகந்தையை அறுத்தெடுத்து
ஒன்றெனும் ஓரறிவை - என்
உள்ளத்தில் இருத்தி வைத்தீர்
இல்வாழ்வை அழகாக்கி
என்வாழ்வை புதுப்பித்தீர்!

அற்புதத்தின் அற்புதமாய்
அவனியிலே அவதரித்து
உண்மையை விளக்கிவைத்தீர்
உன் மெய்யால் உணர்த்திவைத்தீர்
உறுதியுடன் உன்மெய்யை
உணர்ந்தவரை உயர்த்தி வைத்தீர்
உள்ளத்தால் உவப்பவரை
உம்மளவில் உயர்த்திக் கொண்டீர்!

ஆழ்கடலின் அமைதி தந்தீர்
ஒளியறிவு நுண்மை தந்தீர்
இருள் வாழ்வை ஒளிரச் செய்து
நித்தியத்தில் நிலைக்கச் செய்தீர்!

தித்திக்கும் திருமறையை
திருநாவால் விளங்க வைத்தீர்
தித்திப்பாய் திகட்டாமல்
அருவுருவை விளக்கிவைத்தீர்
உம்பாதம் சரணடைந்தே
சலனமில்லா பெருவாழ்வு
பெற்றிடவே அருள்புரிவீர்
சற்குருவே நாயகமே!

-ஷேக்தாவூது ஹக்கியுல்காதிரி மன்னார்குடி

---------------------------------------------------------------------------------
மாநபி புகழ்

மாநபி மான்புகழ் பாடிட - அவர்களின்
திருநாமம் ஒன்றே போதாதோ
மாமறை கூறிடும் நல்வேந்தர் - நம்
மஹ்மூது பண்பின் உயர்சீலர்!

வல்லவன் தன் ஒளியிலிருந்து படைத்தான் - அது
நூரே முஹம்மதிய்யா எனும் திருநாமம்!
அகிலங்கள் அனைத்தையும் படைக்க எண்ணி
அருள்நபி – நூரினால் அனைத்தையுமே படைத்திட்டான்!

ஆதிதொடக்கமே தாங்களன்றோ – அன்று
அகிலங்கள் என்ற சொல் இருக்கவில்லை
நீதிதவறாத இறைவனும் – நபியை
அனைத்துலகிற்கும் அருளென ஆக்கிவைத்தான்

ஆதிபிதா ஆதம்தோன்றும் முன்னே – தாங்கள்
சுடமிகுந்தாரகையாய் இருந்தீர்கள்
அறியாத ஜிப்ரீலும் திகைப்படைந்தே – பின்
அற்புதம் தாங்களின் புகழே என்றார்

ஜோதி நிறை தங்கள் பொன்முகம் – வெண்
நிலவினும் அழகிய திருவதனம்
தேகம் கமழும் நன்கஸ்தூரியும் – உயர்
சாந்த சொருபியெம் நாயகமே.

ஹு அவன் கூறிடும் இனிய ஸலவாத்தும் – அவன்
அமர்கள் கூறிடும் நல் ஸலவாத்தும்
அகிலத்தார் கூறிடும் நபி ஸலவாத்தும் – நல்ல
பண்பாளர் யாரேனும் மறுப்பார் உண்டோ?

மேகங்கள் குடையென தொடர்ந்தென்ன – நம்
கோமான் நபிக்கே சோபனங்கள்
எத்ரீபை மதினா என்றழைப்பது மேன் –எம்மான்
அறிவின் பட்டணம் அதனாலே!

புகழுக்கே புகழ்மாலை சூட்டுவதேன்-பலர்
அறிந்து நபிகளை வாழ்த்திடத்தான்
முஹம்மது நாமத்தின் கருத்தென்ன –இறையால்
புகழப்பட்டவர் என்பதாகும்!

திருநபியை விரும்பாத அறிவிளிகள் –இந்த
பூமிக்கே தாளாத பாரமன்றோ
நரகதும் இவர்களை விரும்பிடுமோ –அன்றி
அதனினும் கொடியது தேவையுண்டோ!

அருள் நபியின் பண்புகளை உணர்ந்துக் கொள்வீர்
சாந்தநபிமீது ஸலவாத் கடலலைபோல் ஓயாம் உரைத்துவாரீர்
ஈமானில் மலையைப்போல் நிமிர்ந்து நிற்பீர்-பண்பில்
நபிகளின் உம்மத்தாய் சிறந்திடுவீர்!

இறையிடம் இருகரம் ஏந்தும்போதும்-அவன்
ஏந்தலின் ஸலவாத்து ஓதுகின்றோம்
தொழுகையில் முறையுடன் அத்தஹியாத்-நன்றாய்
இடம்பெரும் ஸலவாத்தும் கடமையன்றோ!

இறைவனும் விரும்புவது நபிபுகழை-இதை
ஷிர்க்கென்று சொன்னால் முறையாகுமோ
அறியாத காலங்கள் மாய்ந்ததுவே
அல்லாஹ்வே எங்களுக்கு அருள்புரிவாய்

ஆமின்!ஆமின்!யாரப்பல் ஆலமீன்.

-கோட்டக்குப்பம் ஜே.முஹைதீன் ஹக்கியுல்காதிரி

--------------------------------------------------------------
மீலாதுவிழா

நீதத்தின் தலைவருக்கோர்
திருவிழா
நீதம் தவறாவர்களால்
நடத்தப்படும் ஓர்விழா
இறைவனின்
அனைத்துக் குணங்களையும்
பண்புகளையும்
வெளிப்படுத்தியர்வளுக்கோர்
விழா
பண்பாளர்களால்
நடத்தப்படும் அற்புதவிழா
அனைத்து மனிதர்களையும்
ஓர்வழியில் அணிதிரளச்
செய்வர்களுக்கு ஆனந்தவிழா
அன்பான மனிதர்களால்
நடத்தப்படும்
ஆனந்த பெருவிழா
மாபெரும்
இறைவன் மகத்தான
வஹியை இதயத்தில்
பெற்று
மக்களை மக்களாக
பண்படுத்தி வாழச் செய்தவருக்கோர் விழா
நல்ல மனிதர்கள்
எல்லாம் நாடும் கூடும்
ஓர்விழா
நபிமார்களின்
தலைவருக்கு
புகழாரம் சூட்டும் புனிதவிழா
நம்பிக்கையாளர்கள்
நிதம்நாடும் விழா

அவனியின் அறிவார்ந்த
மாபெரும் தலைவர்கள்
இவர்களின் வாழ்க்கை வரலாற்றை
படித்து செயல்படுத்தி
வாழ்க்கையில் வெற்றிகண்டார்கள்
அறிவற்ற சில சொற்ப
மனிதக் கூட்டங்கள்
அண்ணலாரை துவேசித்து
வாழ்க்கையின் அழிவை நோக்கி
செல்கிறார்கள்
உண்மையாளர்களுக்கும்
நல்லவர்களுக்கும்
இறைவனே
உண்மையான சாட்சி
எப்பொழுதும்
தொடரட்டும் இதுபோன்ற
நல்ல விழாக்கள்
அது பெருமானாரின்
புகழ்பாடும்
மீலாதுவிழாக்கள்.!

-K.M.M.A.சாகுல்ஹமீது ஹக்கியுல்காதிரி
மதுக்கூர்

-------------------------------------------------------------------------------