ஒரு திரைக்கதை ஆசிரியர் ஒரு கதாநாயகரை மையமாக வைத்து ஒரு நீதியை உலகிற்கு தர நினைக்கும்போது முதலில் தன் கதாநாயகனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் சில எதிர்பார்ப்புகளை கொடுப்பது வழக்கம்.
மேலும் அவருக்கு துணையாகவும் எதிராகவும் கதாபாத்திரங்களை அமைத்து எல்லாவற்றையும் மீறி கதாநாயகருக்கு வெற்றி கிடைப்பது போலவும் அதன் மூலம் தான் நிலை நிறுத்த வந்த நீதியை நிலை நிறுத்தி வெற்ற பெறுவது போலவும் சுவாரஸ்யமான வெற்றிக்கதையை வழங்குவது வழக்கம்.
இங்கும் அப்படித்தான் தன் கதாநாயகரை அறிமுகப் படுத்துமுன் இதே நீதியைநிலை நிறுத்த வந்தவர்கள் முழுமையாக வெற்றி பெறாத நிலையில் அவர்களின் மூலமேதான் எதிர் நோக்கி இருக்கும் தன் கதாநாயகரின் வரவை எடுத்துக்கூறுகிறான் அவருடைய முழுமையும் வெளிப்படுத்த வேண்டி அவருக்கு துணைகளையும், ஆதரவாளர்களையும் அதே சமயத்தில் மிக பலமான எதிரிகளையும் இன்னும் பல கதாபாத்திரங்களையும் இணைத்துக்கொண்டு கதையை வெற்றியாக்கி, அதன் மூலம்தான் நிலை நிறுத்த வேண்டிய நீதியை நிலை நிறுத்தி வெற்றிக் கதை ஆக்குகிறார் நம் கதாசிரியர்.
கதாசிரியரான ரப்புல் ஆலமீனான அல்லாஹ், தன் கதாநாயகரான நாயகம் (ஸல்) அவர்கள்வருவதற்கு முன்பே அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு அவசியமான அண்ட சராசரங்களையும் அவர்களுக்காக தயார் செய்து வைக்கிறான். இதையே இறைவனும் ஹதீஸ் குதுஸியில் "நபியே உங்களைப படைக்காவிடில் இந்த அகில உலகத்தையும் படைத்திருக்க மாட்டேன்" என்று கூறுகிறான். தன்னுடைய நாயன் சொல்ல வரும் நீதியை அவர்களுக்கு முன்பே எடுத்துக் கூற வந்து அதில் முழு வெற்றி பெறாத நிலையில் அவர்கள் மூலம் வந்த வேதங்களின் மூலம் நாயகம் (ஸல்) அவர்களின் நல்வரவை எடுத்துக் கூறுகிறான்.
பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த அவனியில் பிறந்தவுடன் பல தீமைகள் அழிந்து ஒழிகின்ற நிலையையும் காண முடிகிறது. இதற்குப் பிறகு உலகம் முழுமையுமே ரசூல் (ஸல்) அவர்களின் பொறுப்பில் விடப்பட்டு ரஹ்மத்துன்லில் ஆலமீனாக அடையாளம் காட்டுவதுடன்அவர்களை பின்பற்றுவதையே தன்னை பின்பற்றுவதாக உலக மக்களுக்கு எடுத்துக்கூறுகிறான். உலக இறுதி நாள் வரை உள்ள விசயங்களை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எடுத்துக்காட்டி மக்கள் நல் வழி பெற தன் வேதமாகிய குர்ஆனையும் தருகிறான்.
இப்படிப்பட்ட நிலைகளை ஏன் இறைவன் எடுத்து நடத்தி உள்ளான் என்பதையும் தன் வேதத்தில் "இறைவன் தன்னை அறிய நாடியே தன்னிடமுள்ள அனைத்தையும் வெளியாக்கி உள்ளான்" மேலும் மனு ஜின்கள் தன்னை வணங்குவதற்காகவே உண்டாக்கினதையும்" கூறி தன்னுடைய இந்த தேவையை இறைவனை அறிந்து நிறைவேற்றவே பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே வந்தார்கள் என்பதால் அவர்களையே இந்த உலக மக்கள் அனைவரின் உத்தம தலைவராக பிரகடனபடுத்தினான் என்பதே உண்மை.
தனக்கு முன்பு வந்தவர்கள் ஏற்படுத்த முடியாத நல்வழியான இன பேத மற்ற, நிற பேத மற்ற,ஏழை பணக்கார பேத மற்ற, படித்த பாமர பேத மற்ற நிலையில் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து வாழ வைத்த மார்க்கமாகிய இஸ்லாமிய வாழும் வழியை கொண்டுவந்து, மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் வாழ்ந்து காட்டி ஆனால் நித்தியமாக இலங்கி நிற்கும் இறைவன்தான் அனைத்தும் என்ற நிலையில் 'லாஇலாஹ இல்லல்லாஹு' இறைவன் அல்லாது இவ்வுலகில் வேறு ஏதும் இல்லை எனும் இறைவனின் உண்மையை முழு இருப்பை அறிவித்து அதனுடன் உலகத்தின் இரகசியங்களை அறிந்த இறைவனின் பரிபூரண வெளிப்பாடாம்
நூரே முஹம்மதியாவாகிய தங்களை அந்த ஏக இறைவனின் தூதர் என்ற பொருளை உணர்த்தி முஹம்மது ரசூலுல்லாஹ் என்று உலகிற்கு கூறி, தன்னை பின்பற்றுவதே உலக மக்களுக்குத் தீர்வு என்பதையும் இதன் மூலமே இறைவனின் திருப் பொருத்தத்தை
பெற முடியும் என்பதையும் நமக்கு விளக்குகிறார்கள்.
இறைவனின் கதாநாயகர் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் உணர்த்த வந்த உண்மைதான் "லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹ் " என்ற உயர் உண்மை இனி இந்த உலகம் உள்ளவரை இந்த உண்மை மட்டுமே தீர்வு யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இந்த உலகம் ஏற்படக் காரணம் என்று இறைவன் கூறிய பெருமானார் (ஸல்) அவர்கள் மூலம் இறை தந்த நீதியே இனி என்றும் தீர்வு என்பதே உண்மை.இதை அறிந்தவர்கள் இவ்வுலகிலும் மறு உலகிலும் பேறு பெற்றார்கள் அறியாதவர்கள் அறியும் வரை அல்லலுறுவார்கள் என்பதே மாற்றமுடியாத உண்மை.
இறைவனுடைய கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்களுக்காகவே படைக்கப்பட்ட இவ்வுலகத்தில் நாமும் வந்து வாழ்வது அவர்களை போற்றி புகழ்ந்து அவர்களின் உன்மையை அறிந்து உலக மக்களுக்கு எடுத்துரைப்பதே அல்லாமல் அவர்களுக்கு எந்த சக்தியும் இல்லை அவர்கள் ஓர் சாதாரண போஸ்ட்மேன் (நவூது பில்லாஹ்) என்று நன்றி கெட்டு கூறுவதற்கு இல்லை.
இந்த உலகங்களை அவர்களுக்காகவே படைத்தோம் என்று கூறுவதின் மூலமே நாம் பெருமானார் (ஸல்) அவர்களின் புகழை சக்தியை புரிந்து கொள்ள முடியும்.நாம் உண்டு உறங்கி வாழ்வது எல்லாமே அவர்களின் பொருட்டால் என்பதை உணர்ந்தாலே அவர்களின் முன்பு இந்த உலகத்தில் நமக்குத்தான் எந்த உரிமையும் சக்தியும் இல்லை என்பதை உணரலாம். உரிமையற்றவர்கள் உரிமைக்காரரை குறை சொல்ல என்னதகுதி உண்டு என்று சிந்திப்போருக்கு நன்கு விளங்கும்.நாம் என்றுமே பெருமானார் (ஸல்) அவர்களின் அடிமைகள் தான் என்பதே இறை தீர்ப்பு. இதை புரிந்து நடந்து கொண்டவர்கள் இறைவனின் அன்பை பெற்ற "இறை காதலர்கள்" ஆனார்கள். தூற்றியவர்கள் இறைவனின் எதிரியானார்கள் இந்த உலகம் உள்ளவரை இதுதான் நீதி.
இறைவன் தன்னுடைய முழுமையாகவே தன் தூதரின் மூலம் வெளிப்பட்டு தன்னுடைய உண்மையை நிலை நிறுத்தி சக மனிதர்களுக்கும் வழிகாட்டியாய், முன்மாதிரியாய் வாழ்ந்ததே மாபெரும் சிறப்பு. அழியக்கூடிய உலகத்தின் எல்லாவற்றையும் விட பெருமானார் (ஸல்) அவர்களை நேசிப்பதன் மூலம் ஒரு மனிதன் உண்மையை உணரச் செய்து என்றும் நிலை பெற்று இருக்கும் இறைவனோடு இணைந்து நித்திய ஜீவனாய் நிலை பெறச் செய்யும் என்பதாலே பெருமானார் (ஸல்)அவர்களின் நேசம் மட்டுமே நமக்கு நல்வழி காட்டும் என்பதை உணர முடிகிறது.
இந்த உலகத்தில் பெருமானார் (ஸல்) அவர்களைவிட உயர்வானவர்கள் எவரும் இலலை. அதனால் நாம் அவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் என்பதுதான் இறை வகுத்த நீதி. இந்த உலகம் உள்ளளவும் இறைவன் வகுத்த நீதியை யாராலும் மாற்ற முடியாது. அபூஜஹீல் போன்ற எந்தனை பேர்கள் வந்தாலும் அவர்களைக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்களின் புகழை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் நிலைதான் தருமே அன்றி வேறில்லை. எனவே பெருமானார் (ஸல்) அவர்களை உணர்ந்து புரிந்து வாழ்ந்தால் அவர்களோடு வாழ்ந்த கலீபாக்கள் சஹாபாக்கள் போல் பெருமைப் பெறலாம். இல்லை இகழ நினைத்தால் மலைமேல் தலையால் மோதி தலை உடைந்த நிலைதான் ஏற்படும்.
இனி இறைவன் தன் கதாநாயகரின் உடல் மறைவிற்கு பிறகு இந்த உண்மையை இவ்வுலகத்தில் எப்படி நடத்துகிறான் என்பதை அறிவது அவசியமே!
இரண்டை விட்டுச்செல்கிறேன் அதனை பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழி தவறமாட்டீர்கள் என்றும் அது ஒன்று அல்குர்ஆன் என்றும் இரண்டு தங்களின் குடும்பத்தார்கள் என்றும் கூறி உலகிற்கு வழிகாட்டுகிறார்கள்.
குர்ஆனிலே இறைவனின் உண்மைகள், இப்பிரபஞ்ச ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதை விளக்கித்தர தங்கள் திருக்குடும்பத்தினரே உரித்தானவர்கள் என்பதால் அவர்கள் மூலம் தன்னுடைய வாழ்க்கை முறை அப்படியே தொடரப்பட்டு, கலிமாவின் உண்மையை மக்கள் உணர்ந்து என்றும் தங்களுடைய வழியிலே வாழ்ந்து இம்மை மறுமை நற்பேறுகளை தொடர்ந்து பெறவேண்டும் என்பதுதான் பெருமானார் (ஸல்) அவர்களுடைய விருப்பமாக இருந்தது.இதைத்தான் தன்னுடய விருப்பமாக இறைவன் தனது திருமறையில் "நபியே நீங்கள் இந்தமார்க்கத்தை தந்ததற்கு எனக்கு பகரமாக நீங்கள் ஏதும் தரவேண்டாம் எனது குடும்பத்தினரை நேசிப்பதைத தவிர" என்று மக்களைப் பார்த்து கூறும்படி நாயகம் (ஸல்) அவர்களுக்குகட்டளையிடுகிறான். இதை நாம் பார்க்கும்போது இறைவனுடைய விருப்பத்தைத் தவிர தனக்கென்று தன் விருப்பம் ஏதும் இல்லாமலே நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்ததை உணரமுடிகிறது.
இதன் மூலம் இந்த உலகம் சிறக்க தனி மனிதனின் வாழ்வு சிறக்க ஒவ்வொருவரும் பெருமானார் (ஸல்) அவர்களின் திருக்குடும்பத்தாரை நேசித்து, அவர்கள் மூலமே இறைவனை அறிந்து வாழவேண்டும் என்பதே நமக்குத் தீர்வு என்பதை எவரும் எளிதில் அறிந்து கொல்லற்பாலதே!
எப்படி இறைவன் பெருமானார் (ஸல்) அவர்களின் திருப்புகழை உயர்த்தி வைத்துவிட்டானோ அதேபோல் அன்னவர்களின் வழி நடக்கும் திருக்குடும்பத்தார்களின் புகழையும் உயர்த்தி வைத்து விட்டான் என்பதே நாம் அறிய வேண்டிய அவசியமாகும். அவர்களிடம்தான் கலிமாவின் உட்பொருள் ஓங்கி நிற்பதை நாம் உணர முடியும். எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை எளிமைப்படுத்தி வாழ்ந்து காட்டினார்களோ அதே
வழியில் அவர்களின் திருகுடும்பத்தார்களும் தங்களை எளிமைப்படுத்தி இறைவனின் பரிபூரண அடிமைகளாக தங்கள் வாழ்வை வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் மணி மகுடமாக திகழ்கிறார்கள் என்பதையே நாமும் அறிய முடிகிறது.
எங்களுக்கு இறைவன் மட்டுமே போதும் என்றும்,திருக்குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறுபவர்கள் கூட தனக்கு ஒரு கூட்டம் சேர்க்க வேண்டும்.அதன் மூலம் தனக்கு ஒரு தலைமைப்பதவி கிட்ட வேண்டும் என்பதை விடுத்து, குர்ஆன் முழுமையையோ அல்லது இறைவனின் கூற்றுகள் (ஹதிஸ் குதுஸி உட்பட) முழுவதும் அறிய முற்பட்டால் அவர்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்களையும் அவர்களது உண்மையாகவே வாழும் அவர்களது திருக்குடும்பத்தினர்களையும் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
அன்றும் இன்றும் பலகோடி மக்களை இஸ்லாத்தில் இணைத்தவர்கள் எல்லோருமே பெருமானார் (ஸல்) அவர்களின் திரு பாரம்பரியத்தில் உதித்தவர்களே, அந்த வகையில் குத்புஸ்ஸமான் முஹைதீன் ஆண்டகை (ரலி) மேன்மைமிகு இமாம் ஜாபர் சாதிக் (ரலி) போன்றவர்கள் பலர். இந்தியாவில் அஜ்மீர் ஹாஜா நாயகம(ரலி),திருச்சி தப்ரே ஆலம் பாதுஷா (ரலி), ஏர்வாடி இப்ராஹீம்ஷா (ரலி), நாகூர் பாதுஷா நாயகம் (ரலி), சம்பைப்பட்டினம் ஜமாலிய்யா மௌலா னா(ரலி) போன்ற நாயகம் (ஸல்) அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் எனக் கூறலாம்.
ஆனால் இன்று இஸ்லாமிய பெயர்தாங்கி, உள்ளத்தில் பெருமானார் (ஸல்)அவர்களின் மீதும் அவர்களின் திருகுடும்பத்தின் மீதும் பொறாமை கொண்டு,ஈமான் இல்லாது வாழ்பவர்களின் உள்ளத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய கருவை பதித்து ஈமானுக்கு உயிரூட்டி உண்மை இஸ்லாமியனாக வாழ வைத்த திருமுல்லைவாசல் குத்புல் அக்தாப் யாஸீன் நாயகம் (ரலி) சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் செய்யிது கலீல் அவ்ன் மௌலானா ஆகியோர்களாகிய நாயகம் (ஸல்)அவர்களின் புனித பாரம்பரியத்தில் வந்தவர்களே !
இக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கே இஸ்லாத்தின் உண்மையை கூற வேண்டிய காலமாக இருப்பதினாலும் பெருமானர் (ஸல்) அவர்களுடைய எதிரிகள் இஸ்லாமிய பெயர் தாங்கி அலைவதாலும் இன்றைய இவர்களை போன்றவர்களின் திருப்பணி இஸ்லாமிய எதிரிகளிடம் இருந்து இஸ்லாமியர்களை காப்பாற்றுவதில்தான் பெரும்பகுதி அடங்கி உள்ளது. அத்தோடு "லாயிலாஹ இல்லலாஹு முஹம்மதுர்ரஸூல்லாஹ் என்ற கலிமாவின் உயர் தத்துவத்தையும் உலகிற்கு வழங்கி இஸ்லாத்திற்கு புத்துயிர் ஊட்டுவதாக அமைந்துள்ளது. ஒரு மனிதன் "அல்லாஹ்"என்று கூறும் வரை இவ்வுலகம் அழியாது என்பது இவர்களைப் போன்றவர்கள் இவ்வுலகில் இறைவனை அறிந்து "அல்லாஹ்"என்று கூறும் வரைதான் என்பதே உண்மை. எனவே இவ்வுலகத்தை அழியாமல் காப்பவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைப்போல இறைவனின் ஆசையை நிறைவேற்றுபவர்கள் இவர்களைப் போன்ற குத்புமார்களும்,வலிமார்களும் என்பதே. இல்லை எனில் அவர்களின் திருப்பணிக்கு இடையூறு இல்லாமல் வாழ்வதே நாம் நலமுடன் வாழ உகந்ததாகும்.
இறைவன் கூற்றுபடி தன் கதாநாயகர் நாயகம் (ஸல்) அவர்களுக்காகப் படைத்த உலகம் அந்த உண்மையை நிறைவேற்றும் இவர்களைப் போன்ற குத்புமார்கள்,வலிமார்களால் காக்கப்பட்டு இறைவனின் விருப்பம், இறைவனின் கதாநாயகர் பணி இவர்கள் மூலமும் தொடருகிறது.
இறைவனின் பரிபூரண அடிமைகளாக வாழும் இவர்களுக்கு ஊழியம் செய்து தெய்வக்காதலர்களாக வாழ்ந்து நித்திய ஜீவியம் பெறுவோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
வஸ்ஸலாம்.
ஆக்கம்: A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல் காதிரி M.A
Thanks - sirajudeen