Friday, October 28, 2011

அன்பே வடிவாம் அருங்குணமே !!!

அழகுக்கழகே யரும் பொருளே
அன்பே வடிவாம் அருங்குணமே
எழிலுக் கொப்பில் லாதவரே
இறையீதென் றுரை பகன்றவரே




அழிவுப் பாதையிற் சென்றவரை
அறமே அறியா மறத்தாரை
பொலிவுடன் வாழ வழிவகுத்தார்
பொன்னார் மேனிப் பெருந்தகையே


பூரண நபியே சந்திரரே
பூவுலோர் போற்றும் பெருமானே
காரண நபியே கனியுளமே
கதியே பதியே கரு உருவே


தாரணி போற்றும் சூரியரே
தனி நிகரில்லா தவக்கொழுந்தே
ஆரணமாம் குரு ஆன்தனிலே
ஆறிரை போற்றும் புகழோரே


ஒளியினுமிக்க ஒளியுருவே
உயிரினும் மிக்க உயிர்க்கருவே
வெளியாயுள்ளாய் கரந்துரைந்து
வேதம் விளக்கும் வல்லோரே


துளிரு மெழிலார் நகையழகே
தூய்மை துலங்கும் தேன்மொழியே
ஒளிர்ந்தே காரிரு ளகற்றியதார்
உயிரே குருவே புகழுருவே


கருணைக் கடலே காரிருளை
கலைத்தே யொளியை பரப்பியவெம்
முரணை நீத்தே மறனீக்கி
முழுமுதற் மறையை மாந்தர்க்கு


தருணம் பார்த்தே ஈந்தளித்த
தலைவரெம் பெருமான் நபியே
வருணம் நீக்கி வாழ்வளித்தார்
மாந்த ரொன்ரென பகர்ந்த்தவரே


இயற்றரு மெழிலே இசைமொழியே
இறையவ நிறைகுண குணக்குன்றே
மயர்க்கொள் மாந்தர்க் கருமருந்தே
மறமது னீக்கி யறங்காத்த


செயற்ப் பெருவீரர் விரற்றீரர்
சீரிய பெர்மார் அருஞ்சீலர்
வயிற்றறு கல்லை பசிபோக்க
வரித்து நின்ற பெருமாரே

-------------நபிகள் நாயகம் ஸல் அவர்களின் திருப்பேரர் சங்கை மிகுஇமாம் குத்புஸ்ஸமான் ஷம்ஷுல்வுஜூத் ஜமாலியா செய்யித் கலீல்அவன் மௌலானா அல்ஹசனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்