மாநபியின் முகம் காணவே மனம் நாடி ஏங்குகிறேன்
நினைவாலே வாழுகிறேன் -அவர்
நினைவாலே வாடுகிறேன்.!
வானில் தவழ்ந்து செல்லும் முழு வெண்மதியே நீ
மனித நகர் சென்றாயோ
எங்கள் திருநபியின் முகஎழில் கண்டு நீ
மதிமயங்கி நின்றாயோ!
சோலைப் பூந்தென்றலே மலர்மணம் சுமந்து நீ
மதினத்திலே நுழைந்தாயோ
எங்கள் மாநபியின் மேனிமணம் கண்டு நீ
நாணித் தலை குனிந்தாயோ!
அன்புக் கடலலையே அண்ணல் முகம் தேடி நீ
ஓய்ந்திடவே மறந்தாயோ
வண்ணப்பூ மலரே அண்ணல் பாதம்பட நீ
பூமியெங்கும் மலர்ந்தாயோ!
எண்ணம் தோற்றிடவே நீயும் மனமுடைந்து
வாடிதினம் உதிர்ந்தாயோ
விந்தை முகிலினமே என்னைச் சுமந்துக் கொண்டு நீ
மதினம் வரை செல்வாயோ!
மன்னர் நபியுரங்கும் உயர்மாளிகை மேல்
நான் விழவேண்டும் நிழலாக
இனபப் பறவைகளே உங்கள் இறகுகளை
தாருங்களேன் எனக்காக
நானும் பறந்து சென்று அவர் திருவடியில்
எனைத்தரவேண்டும் இனிதாக.!
-ஆக்கம் மர்ஹும் ஹஜரத் எஸ்.ஏ.முஹம்மது யாசீன் மிஸ்பாஹி காதிரி
தகவல் - ஏ.அப்துல்மாலிக் ஹக்கியுல்காதிரி (வைத்தியர்)