Wednesday, June 29, 2011

மிஉராஜ் இல்லாதவருக்கு தொழுகையில்லை

அல்லாஹ்த்தாஅலா சொன்னான்

மிஉராஜானது நானல்லாத சர்வ வஸ்துக்களையும் விட்டு அகன்று விடுதலாகும். மிஉராஜின் பூரணமானது பார்வை மழுங்கவில்லை இன்னம் அது மட்டைக் கடக்கவுமில்லை என்ற குர்ஆனிய திருவாக்கியத்தின் கருத்தாகும்.

விளக்கம்-

மிஉராஜ் என்பது இறைவனல்லாத மற்றெல்லாவற்றையும் விட்டு நீங்கியிருப்பது. இறைவனிலேயே தனது நாட்டத்தைச் செலுத்தி அவனல்லாது வேறில்லையென முழுமையாய் நினைத்து நானும் அதுவுமொன்றே அதற்கும் எனக்கும் பிரிவுமில்லை. நான் பூரணமாய் அதிலானேன் எனக்கருதித் தன்னையும் தன் எண்ணத்தையும் முழுமையாய் இறையில் அருப்பணிப்பதே மிஉராஜ் எனும் உயர்ச்சியாகும். இந்த மிஉராஜின் முழுமை இறைவனை முழுமையாய் பார்வை மழுங்காமற் காண்டலாகும்.

பார்வை மழுங்கலென்பது இறைவனைப் பிரிவு பிரிவாய் சிறிதுசிறிதாய் எண்ணி நானும் நீயும் வேறு எனும்நிலையில் எண்ணத்தைச் சின்னபின்னப்படுத்தி ஒரு பொருளைக் கூறுபடுத்துவது போல் இறைவனைக் கூறுபடுத்திச் சித்திரவதை செய்யும் நிலையாகும். இந்த உயர்ச்சியின் நிலை மட்டையும் கடக்காது. அனைத்தும் நானே எனும் மன்சூருல் ஹல்லாஜ்(ரலி) அவர்களின் உன்னத நிலையை அடைவதாகும்.

அனைத்தும் நானே நானே ஹக்கு எனும் நிலையை மட்டைக்கடக்காத உண்மை நிலையாகும்.
நானே இறைவன் என்று மமதையுடன் பிர்அவுன் கூறிவந்த நிலைமையே மட்டைக் கடந்த நிலையாகும். எனவே இதில் இரண்டு நிலையுண்டு ஒரு நிலை ஹக்கையே அறியாது மமதைக் கொண்டு தானே இறைவன் என்று கூறிக் கொண்டது.

இரண்டாவது நிலை அனைத்தும் நானே என்று இறைவனை அறிந்து பூரணமாய் இரண்டறக் கலந்து மாறா இன்பமடையும் நிலை. அறியாத மூடர்கள் இறைவனைக் கூறுபோட்ட இறை தண்டனையை அடையும் நிலையையும் இறையின்பத்தை அடையும் நிலையையும் இரண்டாகக் கலந்து காண்பதோடு உண்மைக்கு மாறாகவும் பேசித்திரிவது பித்துபிடித்த மந்த நிலையாகும்.

கௌதுல் அஉளமே! என்னிடத்தில் மிஉராஜ் இல்லாதவனுக்கு தொழுகையே இல்லை.
விளக்கம்- தொழுகை என்பது எது என்று முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அத்தகைய தொழுகையுடையோரின் தொழுகையே மிஉராஜாகும். அல்லாஹ் இடத்தில் மிஉராஜ் இல்லாதோருக்கு தொழுகையில்லை. எவன் மிஉராஜை மறுத்தானோ அவனுக்கு இறையிடத்துத் தொழுகையுமில்லை. எனவே எம் மூரீதுகள் மிஉராஜைவுடையவர்களாக வாழ்வார்களாக ஆமீன்.!

-மறைஞானப்பேழை (2011 சூன்)
ரிஸாலா கௌதிய்யா நூலிலிருந்து…