Sunday, October 4, 2009

உலக அமைதிக்கு உண்மை வழி

இன்று உலகத்திற்குத் தேவையானது எது.?

அமைதி .

மனிதர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் பொது அமைதிதேவை. ஆமைதி நிலவாவிட்டால் எவ்வளவு பணம் பொருள் இருந்தும் நிம்மதி இருக்காது.

உலகம் அமைதியாக இருக்க என்ன வழி.?

மக்களுடைய மனதில் ஆழமாக பதித்து கிடக்கும் வேற்றுமை உணர்வுகள் அனைத்தும் மனதில் இருந்து நீங்கினால்தான் ஒற்றுமைக்கு வழிபிறக்கும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் அமைதி தானாகவே வந்து விடும். ஆனால் காலகாலமாக இருக்கும் வேற்றுமை உணர்வுகளை நீக்க முடியுமா.?

நிச்சயமாக முடியும்.

அதற்கான வழிகள் என்ன.?
இந்த வேற்றுமை உணர்வுகளை மக்கள் மனதில் இருந்து பிடுங்கி எறியவது எப்படி.? அல்லது இதற்கு என்ன வழி.?

ஆருயிர் செய்கு நாயகம் ஆன்மீக குருநாதர் சங்கைமிகு மகான் ஜமாலிய்யா கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் சீரிய வழியைக் காட்டுகிறார்கள். இவர்களின் ஞானக் கருத்துக்களை மக்கள் உணர்ந்தார்களேயானால் தங்களது மனதில் மிகமிக ஆழமாக பதிந்து பரவிக்கிடக்கும் வேற்றுமை உணர்வுகள் சூரியனைக் கண்ட பனிப்போல உருகி மறைந்துவிடும்.
அவர்ளுடைய இறையருட்பா எனும் ஞானக்கவிதை நூலில் இருந்து சில உதாரணங்களைக் காண்போம்.

வேரொடு தண்டு கோடு
வேறிலை பூவுங் காயும்
பூரண மாக நின்ற
போதினில் மரம தாகும்
ஓரிலை யேனு நீங்கின்
உருபெயர் மரமும் நீங்கி
சீரிலை யென்ற நாமம்
சீர்த்திடு முண்மை யாலே.

வேர், தண்டு, இலை, பூ, காய், கனி இவைகள் அனைத்தும் பூரணமாக மரத்தில் இருக்கும்போது அதனைத் தனித்தனியாக நாம் பார்க்க மாட்டோம். அதை மரம் என்று சொல்வோம். அந்த மரத்தில் இருந்து இலையை மட்டும் பிரித்து மரத்திலிருந்து நீக்கிவிட்டால் மரம் என்ற சொல் நீங்கி இலை என்ற நாமத்தை அது பெறுகிறது. அதைப் போலவே

அவ்வகைத் தேயும் கொம்பும்
அருவேர் தண்டு மெல்லாம்
அவ்வுரு மரத்தினின்று
அற்றிடுங் காலை யாவும்
இவ்விகை யாவும் தத்தம்
இடுபெயர் மரமு நீங்கி
ஓவ்வொரு பெயரி னாலே
உணர்த்திடும் தம்மை யாமே.

கோம்பு, இலை, வேர், தண்டு ஆகியவைகளை அம்மரத்திலிருந்து நீக்கும்போது மரம் என்ற பெயர் நீங்கி கொம்பு வேர் தண்டு என்ற தனிப் பெயரையடைகிறது. அதைப்போலவே

சினைபல கொண்ட தாக்கை
சீரதற் குண்டு நாமம்
நினைவினற் கொள்ளு தற்கு
நிறுத்துக மனித னையே
சினைபல யாவுங் கொண்ட
சீருட லுயிரி னோடு
அனையது தானே மாந்தன்
ஆவது காண்க நீரே.!

மனிதனுடைய உடல் பல உறுப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மொத்தத்தில் மனிதன்தான் உடல் என்று சொல்கிறோம்.

பல உறுப்புகளைக் கொண்ட மனிதனுடைய உடலுடன் உயிரும் சேரும்போது மனிதன் என்று சொல்கிறோம் அது போல

தன்னுட னின்று கையைத்
தானே நீக்கி வேறே
பின்னிடம் வைப்ப தாகில்
பிரிந்த வென் கையு மென்றன்
இன்பெயர் கொண்ட தாமோ
இவ்வகை உலகி னிற்கும்
மண்பொருள் யாவு மென்க
மாண்பிணி னான தானேன்.

விளக்கம்.
மனிதனுடைய உடம்பில் இருந்து கையை தனியாக நீக்கி (வெட்டி) தனியாக வைத்து விட்டாலும் அந்தக் கை மனிதனுடைய கை தானே.
இது என்னுடைய கை என்று தான் சொல்வேன். இதைப்போலவே இவ்வுலகத்திலுள்ள சிருஷ்டிப் பொருள்கள் அனைத்தும் தனித்தனியாப் பெயரைக் கொண்டு நிலைத்து நின்றாலும் அவை அனைத்தும் மாபெரும் சக்தியாகிய இறையிலிருந்து வந்தது தான் என்பதை உணரவேண்டும்.

கையது பிரிந்த போது
கொண்டதோர் நாம(ம்)நீங்கி
கையென வான போலும்
கருத்தினி றைந்த வொன்றாம்
மெய்யிறை நின்று வந்த
மேன்மிகு சிருட்டி யெல்லாம்
பெய்ம்முதற் பெயரு நீங்கிப்
பெற்றது வேறு பெயரே.

மனிதனுடைய உடம்பிலிருந்து கையைத் தனியாகப் பிரித்தவுடன் மனிதன் என்ற பெயர் நீங்கி கையென்ற பெயர் பெற்றாலும் கருத்தினில் எங்கும் நிறைந்து ஒன்றாய் விளங்கும் இறையிடமிருந்து வந்த மேன்மைமிக்க சிருஷ்டிகள் எல்லாம் இறை என்ற பெயர் நீங்கி தனித்தனிப் பெயர்களைப் பெற்று நிற்கின்றன.

கரமது பிரிந்த போதும்
மனிதறன் கரம தாகும்
அருமிறை தன்னி னின்று
அற்புத சிருட்டி யெல்லாம்
உருவதிற் பிரிந்த போதும்
உத்தம வொன்றி னின்றாம்
அருவமு முருவ மெல்லாம்
ஆதிய தாகு மம்மே.

மனிதனுடைய உடலிலிருந்து கரத்தைப் பிரிந்த போதும் அது மனிதனின் கரமதாகும். அதைப்போல இறைவனிடமிருந்து தோன்றிய சிருட்டிகளெல்லாம் உருவத்தில் தனித்தனி பெயரைக் கொண்டாலும் அதுஇறையின் அங்கங்களாகும்.
மனிதனின் அருவமான உயிரும் வெளியில் கண்களுக்குத் தோன்றக்கூடிய உடலும் இறைவனின் பகுதிகளாகும்.
மேலே கூறப்பட்டுள்ள கருத்துகளிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? சிருட்டிப் பொருள்கள் அனைத்தும் இறையிலிருந்து வந்த இறைவனின் பகுதிகள் அங்கங்கள் என்று வைத்துக் கொள்வோமே.!
இக்கருத்தினை உணர்ந்தால் ஜாதி மதம் இனம் மொழி பணக்காரன் ஏழை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றும்.?
வேற்றுமை உணர்வுகள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்படும். அப்போது ஒருவருக்கொருவர் உண்மையிலேயே பாசம் நேசம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். ஒருவருக்கு கஷ்டம் வந்தால் தனக்கு வந்தது போல நினைத்து உதவிகள் செய்வார்கள்.

ரசூல் (ஸல்)அவர்கள் அப்படித்தானே வாழ்ந்து காட்டினார்கள். ஏன்.? இன்றைக்கு நமது சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களும் தங்களின் முரீதுப் பிள்ளைகளோ அல்லது பொது மனிதரோ தங்களது கஷ்டத்தைக் கூறும்போது அதை உளமார பொறுமையாக இருந்து கேட்டு மனமுருகி அல்லாஹ்விடம் துஆச் செய்து அவர்களது துன்பத்தை நீக்குகிறார்கள்.
புத்தர் ஓர் ஆட்டுக்குட்டி நொண்டிச் செல்வதைக் கண்டு மனமுருகி அதைத்தன் தோளில் சுமர்ந்தார்.
சிபிச் சக்கரவர்த்தி புறாவை வேடனிடமிருந்து காப்பாற்ற தன் தொடையை அறுத்துக் கொடுத்தார்.
வள்ளல் பாரி பரிதவித்துக் கொண்டிருந்த முல்லைக் கொடிக்கு தன் தேரை நிறுத்திச் சென்றார்.
ஒரு பெரியார் தங்களது சட்டையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பூனையை விரட்டாமல் அது விழிக்கும்வரை பொறுமையாக இருந்தார்.
வள்ளலார் இராமலிங்க சுவாமி அவர்கள் வாடிய பயிரைக் கண்டபோது தானும் வாடினார். இவைகளெல்லாம் உதாரணங்கள். இதை நாம் கருத்தற்ற செயலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிந்தித்தால்தான் அதன் தாற்பரியம் புரியும்.

இத்தகையசர்கள் மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்க மாட்டார்கள். தானாகவே எங்கும் இன்பம் பொங்கும். மக்கள் சந்தோசமாகவும் வாழ்வார்கள். அதன் பயனாக உலகமே அமைதியடையும். ஆகவே உண்மையான இறைத் தத்துவத்தை
அறிந்துக் கொண்டால்தான் தான் யார் மற்றவைகளும் எது ?
இறைவனுக்கும் நமக்கும்முள்ள தொடர்பு என்ன வென்பது விளங்கும். இதுதான் உண்மையான ஆன்மீகம். ஆகையால் சங்கைமிகு நாயகம் அவர்களின் உபதேசங்கள் ஞானப் பாக்களை ஆராய்ந்து பயனடைவோமாக…!

நன்றி – எஸ். காஜா நஜ்முத்தீன் ஹக்கியுல் காதிரிய் திண்டுக்கல்

நன்றி – மறைஞானப் பேழை