Monday, October 5, 2009

காலத்தின் வசந்தங்கள்...ஷவ்வால் பிறை 16

மகான்கள்-மாமனிதர்கள்-புனிதர்கள்-இறைவனின் அருளைச்சுமந்த வண்ணம் இந்த வுலகில் எல்லாப் பகுதிகளிலும் உதயமாகிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் மனிதர்களுக்கும் இறைவனுக்குமிடையே உள்ள தொடர்பை மக்களுக்கு விளக்கி தங்கள் பிறந்த லட்சியத்தை நிறைவேற்றிச் செல்வார்கள்.

மற்ற உபதேசிகளைப் போல – பிரசங்கிகளைப் போல – வாய் வார்த்தை மட்டும் பேசாமல் வாழ்ந்து காட்டுவார்கள்.

மற்ற மனிதர்களோடு மனிதர்களாகக் கலந்து வாழ்ந்தாலும் அவர்களின் செயல்களில் தனித்தன்மை மிளிரும் அவர்களின் குணங்களில் அன்பும் அருளும் ததும்பி வழியும்.

அவர்களைச் சேர்ந்தவர்களின் துன்பங்களை அகற்றுவார்கள். மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிகாட்டுவார்கள். தாங்கள் எப்படி அரிய பொருளாக – அருமையான மனிதராக இருக்கிறார்களோ அதைப் போலவே அவர்களைப் பின்பற்றுவோரையும் மாற்றிக் காட்டுவார்கள்.

அவர்கள் பூமியில் வாழ்ந்தாலும் வானத்தோடு தொடர்புடையவர்கள் அவர்கள் சொல்வது நடக்கும். அவர்களிடம் கேட்டது கிடைக்கும்.

இயற்கை அவர்களோடு ஒத்துழைக்கும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அந்தரங்கமாக விளங்கும் அவர்களே அந்தஅந்தக் காலத்தின் வசந்தமாக உயிர்களுக்கு இறைவனால் அமைக்கப்பட்டவர்கள்.

அத்தைகய மாபெரும் ஞானியை நம்காலத்தில் சையிதுனா கலீல் அவ்ன் நாயகமாக நாம் பெற்றிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்…அவர்களை எமக்களித்த அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செய்து அவர்களின் இலட்சிய நோக்கங்களில் பங்கு பெறுவோம் ஈருலக வெற்றிகளை அடைவோம்…!
நன்றி - மறைஞானப் பேழை தலையங்கம்


ஷவ்வால் பிறை 16 அன்று இஷாத் தொழுகைக்கு பின் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கஸிதத்துலட அவுனியா ஒதப்பட்டது. பின் ஆன்மீக சகோதரர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
தலைவர் சஹாபுதீன் இமாம் அஸ்சையிது கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் சிறப்புகளைப்பற்றி பேசினார்.

அதிரை சர்புதீன் அவர்களின் இலங்கை பயணத்தை பகிர்ந்துக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து அதிரை அப்துல்ரஹ்மான் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறையும் மகான்களின் வரலாறையும் ஒப்பிட்டு பேசினார்.
மதுக்கூர் தாவுது சிராஜ் சாகுல்ஹமீது ஞானப்பாடல்கள் பாடினார்கள்.
இவ்விழாவிற்கு அனைத்து ஆன்மீக சகோதரர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.