Friday, October 23, 2026

கொம்புடன் காய்க்கும் தேங்காய்



                                                  கொம்புடன் காய்க்கும் தேங்காய்

தமிழகத்தில் ஒரு ஊரில் கொம்புடன் காய்க்கும் தேங்காய்

பல ஆண்டுகளாக தொடர்ந்து இன்று வரை காய்த்து கொண்டிருக்கும்

அதிசயம் பற்றி யாரும் கேள்விப்பட்டதுண்டா?

ஆம் அதுதான் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் அருகில் சேதுபாவசத்திரம் என்ற ஊருக்கு சமீபமாக இருக்க கூடிய சம்பைபட்டிணம் என்ற ஊரிலே இந்த அதிசயம் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

இந்த அதிசயத்திற்கு பிண்ணணியில் ஒரு வரலாற்று சம்பவம் உண்டு. 

இந்த ஊருக்கு சுமார் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரபு நாடான ஈராக்கிய தேசத்தின் புண்ணியதலமான பக்தாது நகரிலிருந்து புனித அஹ்லுல் பைத் குடும்பத்தைச் சார்ந்த

அந்நாட்டின் இராணுவ தளபதியாக திகழ்ந்த  ஜமாலிய்யா மௌலானா(ரழி) அவர்கள் இறைஞானத்தை பரப்பும் பொருட்டு பக்தாதுலிருந்து துவங்கி பல தேசங்களுக்கு சென்று இறுதியில் நமது இந்தியாவின் தமிழகம் வந்தடைந்தார்கள். தமிழகத்தின் பற்பல ஊர்களுக்கு சென்று இறைஞானத்தை உயிர்ப்பித்தும், மார்க்க சேவைகளை செய்து வந்தார்கள். 

இறுதியாக மேற்படி சம்பைபட்டிணம் என்ற சிற்றூரில் மறவன்வயல் என்ற பகுதியில்  தங்களுகென்று தைக்கியா அமைத்து தன்னுடைய

குடும்பத்துடன்  வாழ்ந்து, பல மார்க்க சேவைகளையும் சமூகத்திற்கு தந்து கொண்டிருந்தார்கள். அங்கேயே அவர்கள்இறையடி சேர்ந்தார்கள். 

அவர்களின் திருவுடல் ஆங்கேயே அடக்கம் செய்யப்பட்டு அழகிய தர்ஹா ஷரீப் ஒன்றும் எழுப்பபட்டுள்ளது. இந்த பகுதி ஜமாலிய்யா அப்பா தோட்டம் 

என்றும், மௌலானா தோட்டம் என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

காலங்கள் பல கழியும் அவ்வேளையில் அந்த ஊரில் வசித்த ஒருவர் மௌலானா தோட்டத்தில் காய்த்து குலுங்கும் தென்னை மரத்தில் அனுமதி இல்லாமல் தேங்காய் பறிப்பதை கண்ட ஒரு நல்லவர், யாருப்பா நீ? இது மௌலானா தோட்டத்தை சார்ந்த மரமல்லவா. அனுமதியின்றி

பறிக்கின்றாயே என்று கண்டித்தவுடன் அனுமதி இல்லாமல் தேங்காய் பறித்து கொண்டிருந்தவர், "மௌலானா  தோட்டத்தில் உள்ள தேங்காய்களுக்கு கொம்பா முளைத்துள்ளது என்று கேலியாக கூற, அந்த வினாடியே அந்த தேங்காய் மரத்தில் உள்ள தேங்காய்களில் கொம்பு முளைத்தது. 

இதை கண்ட அவன், பயந்து போய் பறித்த தேங்காய்களை அங்கயே போட்டு விட்டு ஓடிவிட்டான். அன்று முதல் இன்று வரை அந்த குறிப்பிட்ட மரத்திலிருந்து வெளியாகும் தேங்காய்களில் கொம்பு இருக்கும்.  அந்த மரத்திலிருந்து வெளியான கன்றுகள் பெரிய மரங்களாகி அந்த

மரங்களிலிருந்தும் இதை போன்றே கொம்புகளை உடைய தேங்காய்கள் காய்த்து கொண்டிருக்கும் அதிசயம் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இன்றும் கூட அந்த பகுதியில் இந்த தேங்காய் விழுந்து கிடந்தாலோ, பார்த்தாலோ அந்த பகுதி மக்கள் இது ஜமாலிய்யா அப்பா தோட்டத்துடைய காய் என்று தர்ஹாவில் வைத்து விட்டு சென்று விடுவார்கள்.

மிகுந்த கராமத்துகளை உடைய இந்த மஹானின் தர்ஹாவிற்கு பல ஊர்களிலிருந்தும் பலர் ஸியாரத் செய்து தங்களின் நேர்ச்சைகளை செய்து, அந்த நேர்ச்சைகள் நிறைவேறியும் வருகிறது. *மிகுந்த கராமாத்துகளை உடைய மஹான் ஆவார்கள்.

இவர்கள் பூர்வீகத்தில் அரபி என்பதால், பல அரபு நூற்களையும் இயற்றியுள்ளார்கள். மக்கள் ஓதி பலன் பெறுவான் வேண்டி திக்ரு மஜ்லிஸ் கிதாபையும் அளித்துள்ளார்கள். 

இவர்களுடைய சந்ததியினர் பக்தாதிலும், இலங்கையிலும், இந்தியாவிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

வலிய்யுல் அக்பர், கௌதுஸ்ஸமான் ஜமாலிய்யா அப்பா(ரழி) அவர்களின் கந்தூரி நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஹிஜ்ரி வருடம் ஜமாதுல் அவ்வல் பிறை 1 ல் நடைபெறும்.

இன்ஷா அல்லாஹ்  (13-10-2026 செவ்வாய் கிழமை)  சம்பைபட்டினத்தில் நடைபெற உள்ளது.

கந்தூரியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொண்டு

அப்பா நாயகம்(ரழி) அவர்களின் அருளாசிகளை அடைந்து கொள்வோம்.

மதுக்கூர்

ஜஉபர் ஸாதிக்   ஹக்கிய்யுல் காதிரிய்.