Saturday, March 13, 2010

மெய்யொளி பதில்கள்


மெய்யொளி பதில்கள் நூலைப்பற்றிய கருத்துரையும் அதை உருவாக்கிய கலீபா அட்வகேட் ஏ.என்.எம்.லியாகத்அலி ஹக்கிய்யுல்காதரிய் அவர்களுக்கு சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் வழங்கிய வாழ்த்துரையும்.


மெய்யென்பது உண்மை உடல் முதலாம் கருத்துக்களைக் கொண்டது.மெய்யாகிய உடலைப் பொய்யெனவும் கூறுவர்.அதனால் சிலர் மெய்யைப் பொய்யாக்குவோரும் அதனைப் பற்பல வகையாக திரிப்போரும் மக்கள் சமுதாயத்திலே உளர் என்பதை எவரும் அறிவர்.தான் நல்லவன் என்பதைக் காட்டுவதற்காகவும் தன்னைப் பெருமைப்படுத்துவதற்காகவும் மெய்யைப் பொய்யாக்குவோரும் உளர்.அவர்கள் தாம் வெற்றியுடைத்தோர் எனத் தம்பட்டம் அடிப்பர்.ஆயினும் அவர்கள் தம் பெற்றியையும் வெற்றியையும் உடைத்துக் கொண்டோராவர்.

ஓளி யெங்கணும் பிரகாசிப்பது.மெய்யைப் பொய்யாக்குவோரின் தன்மையை மற்றோருக்கு வெட்ட வெளிச்சமாய் எடுத்துக் காட்டுவது.இருளிலுள்ளோரை வெட்டவெளிக்குக் கொண்டு வருவது.இத்தகைய மெய்யொளியின் உள்ளமைகளும் தெளிவுகளும் விவரணங்களும் இதில் வெளியாகின்றன காண்க.

சந்தேகமென்பது உளத்தையும் கெடுத்து உடலையும் கெடுத்துவிடும்.
நல்லவனையும் (நீசனெனக்)கருத இடம் கொடுப்பது.வாழ்நாள் முழுவதையும் கைப்பாக்குவது.நல்ல உள்ளம் படைத்தவனுக்கு இது வருவதில்லை.அவன் உள்ளத்தில் நம்பிக்கை புகுத இடங்கொடுக்காது.மெய்யொளியிடம் கேட்கப்பட்ட ஒருவினா “மனிதன் ஒருவனின் பலம் என்ன?” பலவீனமென்ன என்பது அதற்கு மெய்யொளியின் அழகிய பதில்

பலம் நம்பிக்கை
பலவீனம் சந்தேகம்
இது சிந்திப்போருக்கு நிறைந்த விளக்கத்தைக் கொடுக்கும்.

மெய்யொளி ஸாஹிப் அவர்களிடம் பால் தயிர் பற்றியெல்லாம் கேட்கிறார்கள்.அதில் ஆன்மீகம் பற்றி விளக்கம் கேட்கிறார்கள். உடனே ஸாஹிப் அவர்கள்

“ஒன்றினுள் எல்லாம் அடங்கும்”
என இலகுவாகக் கூறிவிட்டார். இவ்வாறு கூறியது அதனுடன் இன்னொன்றிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் என்பது போலில்லையா? தேங்காய்க்குள் தேவையான பொருட்கள் எல்லாம் உள்ளமையாற்றான் அதனைத் தேங்காய் என்கின்றோம். ஓன்றில் எல்லாம் அடங்கியுள்ளனபோல் அந்த ஒன்றே எல்லாமாகவும் வெளியாகியுள்ளது காண்க. அந்த எல்லாம் ஒன்றுதான் என்பதில் ஐயம் இல்லை.

“மனிதனுக்கு நான் என்னும் எண்ணம் இருக்க வேண்டுமா?” என ஒரு வினா வினவப்பட்டது.
அதற்கு நம் மெய்யொளி “நான் என்பது பூரணத்தில் மூழ்கியிருக்க வேண்டும்” என்கிறார்.
இது கேள்விக்கேற்ற பொருத்தமான மிக இனிய சுருக்க விடையாகும். நான் என்னும் செருக்கு எப்போதும் இருக்கக்கூடாது. இது படுகுழியில் அவனைக் கொண்டு போய்ப்போடும். நான் என்பதைப் பரிபூரணத்தில் வைத்து எண்ணுவது உயர்வையும் மேன்மையையும் அருளும்.

யாரைக்கண்டால் உங்களுக்கு அநுதாபம் ஏற்படுகிறது எனவொரு கேள்விக்கு மெய்யொளி (அப்) பாவிகளைக் கண்டால் என விடையிறுக்கப்படுகிறது. (அ) + பாவிகள் பெரியவர்களோடு தொடர்பு கொள்ளாது தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பவர்களுடன் தொடர்புக் கொண்டு ஞானத்தைத் தனக்குப் பாணமாக்கிக் கொள்கிறவர்கள். இவர்கள் கூறுவார்கள் அல்லாஹ்வும் ரசூலும் வெறுமனே சோடனைகள் என இவர்கள் நாத்திகர்கள்.

இல்லாத ஒன்று அது என்ன? எனக்கேட்டு சில அரை ஞானிகள் அங்கலாய்ப்பதும் உண்டு. உள்ளதென்பது எது? எனக்கேட்டு இழிப்பதும் உண்டு. உள்ளத் தெளிவற்றோரே இவர்கள். பத்து முத்தான எழுத்துக் கொண்ட ஒரு தத்துவம் எது என்ன எனக் கேட்டதற்கு இயற்கையாகவே அமைந்த ஒன்றாகத் தானே தன்னில் தானானான் என்பது அமைந்துள்ளது இரசிக்கத்தக்கது.

நாயகம் அவர்கள் ஆதி நபியாகவும் இறுதி நபியாகவும் இருக்கின்றமையை வட்ட ஓரத்திலுள்ள புள்ளிக்கு உதாரணம் காட்டியமை மிகப் பொருத்தமுடைத்து. சில தேவையற்ற கேள்விகளுக்கும் அதே முறையில் ஒளிவிடை வகுத்துள்ளார் காண்க. தத்துவார்தமான கேள்விகளுக்குத் தத்துவார்த்தமான பதிலும் கொடுத்துள்ளமை மேலும் வியக்கத்தக்கது. பூரணம் எனின் என்ன? இதற்கு பதில் இல்லாமை இல்லாமை நன்கு சிந்திப்பவர்களுக்கு இதிலழகிய கருத்துண்டு.இவ்வாறே இறைத்தூதுக்கும் பொருத்தமான விடை பகர்ந்துள்ளார்.

இன்னும் சில கேள்விகளுக்குப் பொருத்தமான அழகிய விடைகள் பகர்ந்துள்ளார் மெய்யொளியாளர். மூளையற்ற மரமண்டைகள் கேட்கும் கேள்விகளுக்கு அவை மிகவும் பொருத்தமானவையென்க. அவை

நாயகம் அவர்கள் ஒரு சாதாரண மனிதர் எனச் சில முஸ்லிம்கள் கூறுகிறார்களே?

பதில் - முஸ்லிம்கள் கூறமாட்டார்கள். அப்படியாயின் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் கூறுவார்கள் என்பது தானே. அழகான செம்மையான மெய்யடி. சரிதானே.

வலிமார்களைத் துவேசமாக விமர்சனம் செய்பவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன? பாருங்கள் மெய் ஒளியின் சூடான பதிலை. பிறப்பிழந்தவன் - தாயை மதிக்காதவன்.

ஆன்மிகம் லௌகிகம் என்றால் என்ன? என்பதைப் “பற்றி சுற்றி” என்று முடித்துவிட்டார். ப உம் சு உம் தான் வித்தியாசம்.

ஆன்மிகம் - உயிரைப் பற்றி
லௌகிகம் - உயிரைச் சுற்றி.

மெய்யொளி கலங்கரை விளக்கம்போல் மாறிவிடுகிறார்.என்ன அது என்பார்கள். அது தான் இது.
கேள்வி – மனிதன் இறப்புக்கும் மருந்து கண்டுபிடித்து விட்டால் என்ன ஆகும்?
பதில் - இறக்க மாட்டான்.

அடுத்தகேள்வி – உலகத்திலேயே மிக மோசமான நன்றி கெட்டவர் என எவரைக் கூறலாம்?

பதில் - செய்ந்நன்றி கொன்றவர் (பெருமானார் அவர்களை மறந்த பெயர் தாங்கி முஸ்லிம்) இதன் கருத்து ஆழச் சிந்திக்கத்தக்க தென்பாம். பெயரை மட்டும் தாங்கிய உருவத்தில் உள்ள முஸ்லிம் எனக் கூறப்படுபவர். எப்போதும்உண்மையான முஸ்லிம் ஒருவன் ரசூல் நாயகம் அவர்களை இறந்தும் மறவான். இருந்தும் மறவான்.

இறைவனைப்பற்றிச் சிந்திக்கக் கூடாது இறை படைப்புகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறதே – சரியா?

இறைவனைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்போர். தஸவ்வுபை அறியாதவர்கள். அவர்கள் எதைப் பற்றியும் சிந்திக்கமாட்டார்கள். மற்றவனையும் கெடுப்பவர்கள். இதற்கு மெய்யொளி என்ன சொல்கிறார் பாருங்கள்.

இறைப்படைப்புகளைச் சிந்திப்பது – விஞ்ஞானம்
இறைவனைப் பற்றிச் சிந்திப்பது மெய்ஞ்ஞானம்.

ஆகவே இதனுள் மெய்யொளியின் அழகான விடைகளைக் காண்பீர்கள். எல்லாம் மிக அழகாகவுள்ளன. மெய்யொளி சிறந்த ஓர் அறிஞர்.நிறையப்படித்தவர். ஞான விளக்கம் மிக உடையவர். சிலர் சில எழுத்துக்களைப் பின்னால் வால்போல் மாட்டிக் கொண்டு ஆங்கிலம் முதலான மற்ற நூல்களில் வருவனவற்றைப் பிரதியெடுத்துத் தான் எழுதியதுபோல் தன்னைப் பிரபலபடுத்திக் கொள்வது போல் தன்னைப் பிரபலப்படுத்துபவரல்லர்.தற்பெருமைக்காரரல்லர்.கொடுத்தவற்றைச் சொல்லிக் காட்டுபவரல்லர்.நிறைய ஏழைகளுக்கு உதவியவர். மற்றவர்களை இழிவு படுத்திப் பேசுபவரல்லர். கொடுத்தப்பின் சொல்லிக் காட்டுபவரல்லர்.

அல்லாஹ்வும் ரசூலும் வெறும் ஜோடிப்பு எனக் கூறும் கொடிய மிருகத்தனமுள்ளவர்கள் வாழும் இக்காலத்தில் உண்மை எது என்பதை எடுத்துக்காட்டுபவர். அல்லாஹ் ரசூலுக்கு அஞ்சுபவர் பயபக்கியுடையவர்.மிக்க விஞ்ஞான அறிவுடையவர். வழக்குரைஞர் இவர் தாம் எம் கலீபாவும் உயிர்ப்பிள்ளையுமான ஏ.என்.எம்.லியாகத்அலி பி எஸ்சி பி எல். இவர் இன்னும் நிறைய நிறைய நூல்கள் எழுதித் தம்பட்டம் அடிப்போர்க்கு சாட்டையடி கொடுப்பாராக வெனக் கேட்டு இறையை வழுத்தி வேண்டுகிறேன்.

பொறாமையும் தற்பெருமையும் பொய்யும் அடாவடித்தனமும் அழிக ஒழிக.
அல்லாஹ்வை இழிவுபடுத்துபவனும் நபியை நையாண்டி செய்பவனும் நலிந்து இழிந்து நாசமாகுக.

உண்மை மிளிர்க. ஒளிர்க. வாழ்க. தமிழ் வாழ்க.!

- ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா



(சிறப்பானதொரு நூலை வெளியீட்டுள்ள அகமது பதிப்பகத்தின் உரிமையாளர்கள் சகோதரர் ஷேக்தாவுது அவர்களுக்கும் சகோதரர் ஷேக்மைதீன் அவர்களுக்கும் அனைத்து சபையின் சார்பாக வாழ்த்துகின்றோம்.)