Monday, May 7, 2012

இறைபணி செய்பவர் யார்!


சுவர்க்கத்தில் அது இருக்கிறது இது இருக்கிறது பாலாறு ஓடும் மதுக் கிண்ணங்கள் உண்டு,மிக மிக அழகியர்களான அரம்பையர் என்னும்  ஹூருல்ஈன்கள் மனைவிகளாவார்கள்.
காணாத பழவர்க்கங்கள் எல்லாம் உண்டு, ருசித்து ருசித்து இன்பம் அடையலாம். நீண்ட தாடியிலே ஹூருல்ஈன்கள் தூங்கிக் (தொங்கிக்) கொண்டிருப்பார்கள். 
பவளக் கட்டிலிலே இந்த இன்பங்களை அடைந்து அமைதியாக புது மாப்பிள்ளையாக உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்பதைக் கேட்ட மோகிகளும் இச்சையின் அடிமைகளும் இதற்காகவே தங்கள் வணக்கங்களைச் செய்து சுவர்க்கத்துக்கு இப்படியிருந்தால் செல்லலாம் அப்படியிருந்தால் செல்லாலாம் எனவெல்லாம் மதிமயங்கி அல்லாஹுவுக்காகவன்றி ஹூருல்ஈன் பெண்களுக்காகவும் மதுக்காகவும் புதுப் புது பழவர்கங்களைச் சாப்பிடுவதற்காகவும் பவளக் கட்டிலுக்காகவும் மிகவும் பிரயாசைப் படுகிறார்கள். 
உண்மையை அறியாமல் மருண்டு மதி மயங்கி உலகிலேயே அவர்களை சுவர்கவாதிகள் எனக்கருதி உல்லாசமாய் ஊர் ஊராய் அலைகிறார்கள். தங்களை சகாபாக்கள் எனவும் கூறிக்கொள்கிறார்கள்.

நபிமார்களும் வலிமார்களும் மலக்குகளும் செய்து வந்த செய்து வரும் இறைவனுடைய வேலைகளை அவர்கள் செய்துவருகிறார்கள் எனக் கூறி சுவர்கத்தை நினைத்து கனவின்பங்களை அடைந்து வருகிறார்கள். 


உண்மையை அறிவதற்கு உயர்ந்த அறிவானஞான விளக்கங்களை அறிதலே மிக முக்கியமானது. இன்பம் நிறைந்த இதில் மறைந்த ஞானக் கருத்துக்கள் பல உள. அதிக இன்பத்தையும் சுபிட்சத்தையும் அடைவோர் இறைவனை மறந்து விடுவார்கள். 
இவர்கள் அல்லாஹ், அல்லாஹ் எனக் கூறிக்கொண்டிருப்பதும் அவனுக்கெனவே நினைக்காமல் சுவர்க்க இன்பங்களுக்காகவும் ஹூருல்ஈன்களுக்காகவும் பள்ளிக்கு அனுதினமும் நேரம் தவறாது போட்டா போட்டியாக முந்திச் சென்று தலையைக் குத்தி நெற்றியை காயப்படுத்துவதும் அல்லாஹ்வுக்காகவல்ல.

ஞானிகள் கீழ்வருமாறு கூறுகின்றனர்; "எங்கள் விருப்பம் நரகமும் சுவர்க்கமுமன்றுஎங்கள் விருப்பமே பிரிவின்றி இறையில் இரண்டறக் கலத்தலாகும் என்பதே.

                        ---சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.

Thanks - Sirajudeen Dubai 
----------------------------------------------------------------------------------
றைபணி செய்பவர் யார்

சுவனத்திற்  கிட்டும்  சுகபோகம் மட்டும்
கவனத்திற் கொண்டுக் கடுந்தவஞ் செய்வார்
நிறையுடை அல்லாஹ்வை நித்தம் உணரா
இறைபணி செய்தல் இது?
 
மெய்யை அறியாமல் மேனியெங்கும் வேடமாம்
பொய்யைத் தரித்துப் புலம்பும் இவர்கள்
குறைகளைக் காணாது குற்றம் பிடித்தால்
இறைபணி செய்தல் இது?

நபிமார்கள்  நேசர்கள்  நாதாக்கள்  செய்த பணியாய்
அபிமானம் கொண்டிங்கு அங்கலாய்த் தின்பம்
குறையிலா வாழ்விலே கொட்ட நினைத்தால்
இறைபணி செய்தல் இது?

பேரின்பக் காதலில் பெற்றிடுக இன்பமென
யாரிங்குச் சொன்னாலும் யாதொன்றும் கேளார்;
முறையிலாச் சிற்றின்பம் மூழ்குபவர் மார்க்கம்
இறைபணி செய்தல் இது?

இறையின்பம் கூடி இரண்டறச் சேர்ந்து
நிறைவுடை ஞானிகள் நித்தம் இறைவனின்
காதலிலே இன்பத்தைக் காண்பதே நோக்கமாம்
ஆதலினால் வேண்டுக அஃது.

--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)