உன்னை மறந்துவிட்டேன்
உண்மை தெரியும்வரை
தன்னில் தனையழிக்கும்
தாகம் எழும்பும்வரை
தத்தளிக்கும் தளமேல்
தாவி திளைத்திருந்தேன்
தாங்கி எனை நடத்தும்
தன்மை மறந்துவிட்டேன்
விட்டெரிந்த புவிமேல்
வீறு நடைபயின்றேன்
விண்ணில் பிரிந்தவைகள்
எண்ணில் நிறையக்கண்டேன்
காணும் பரம்பொருளை
காண விழைந்திருந்தேன்
கண்டும் மறந்தவனாய்
காணும் விழியிழந்தேன்
தேட்டம் நிறைந்தவனாய்
தேடி அலைந்திருந்தேன்
தேம்பி அழுதவனாய்
தேகம் அணிந்திருந்தேன்
விட்டில் வெளிச்சத்திலே
மட்டில்லா இன்பங்கொண்டேன்
முட்டும் கதிரவனை
முற்றும் மறந்துவிட்டேன்
வேத விளக்கத்தில்வீண்
வாதம்பல புரிந்தேன்
வாட்டம் வலுத்தமையால்
வாடி உனைதொழுதேன்
சூலும் நிறைதிரையால்
மேலும் மருண்டுவிட்டேன்
நாளும் நடைபிணமாய்
வாழும் நிலையணிந்தேன்
வேதி பொருளனைத்தும்
சோதி வடிவமென்றேன்
ஆவி விடுத்தவனாய்
ஆதி நிலையடைவேன்
காட்சி பலவதுமாய்
ஆட்சி புரிந்திருந்தேன்
மீட்சி பெருவதற்க்கே
சாட்சியென பிறந்தேன்
ஏகம் அணிநதுகொள்ள
தேகம் துறந்துவிட்டேன்
மேகம் திரண்டதுப்போல்
பாகம்பல மறந்தேன்
ஆற்றல் நிறைந்தயுனை
ஆறில் அணைத்துக்கொண்டேன்
ஏட்டை துறந்தமையால்
ஏற்றம் அடைந்துவிட்டேன்
ஐந்தில் திரிந்தயுனை
ஆறில் இனமறிந்தேன்
ஏழின் மகத்துவத்தை
எட்டும் கலையறிந்தேன்
சொர்க்க தலைவரின்மேல்
சோபனம் கூறிவிட்டேன்
கோத்திரத்தார் அவர்தம்
ஆசியை அண்டிவிட்டேன்
வேதம் தந்த தூதர்
போதும் என்றுரைத்தேன்
பாவம் தனியும்வரை
பாதம் விழிந்தெழுவேன்
அங்கம் உடுத்தவரின்
அங்கை பிடித்துவிட்டேன்
அஞ்சி தொழுதயுனை
அன்றி தொழுதுவிட்டேன்
எழில்கொஞ்சும் உனதருவை
கலீல்(உள்)தஞ்சம் அடையக்கண்டேன்
இன்பத் தமிழ்மொழியே
என்றும் உனைத்தொழுவேன்.!
- அமீர் அலி ஹக்கியுல் காதிரி