Monday, May 24, 2010

சபைச் செய்திகள்

“காமூஸ்” நூல் வெளியீட்டு விழா !

இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மவ்லானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களால் தொகுத்து வடிவமைக்கப்பட்ட “ காமூஸ் “ எனும் அறபு – தமிழ் அகராதி நூல், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு – திருமுல்லைவாசல் சங்கைக்குரிய யாஸீன் மவ்லானா (ரலி) அவர்களின் தர்கா ஷரீஃபில் வைத்து வெளியிடப்பட்டது.

மதியம் ஜுமுஆத் தொழுகைக்குப் பின்னர், மதிய உணவு பறிமாறப்பட்டது. சரியாக 4 மணிக்கு, திருச்சியிலுள்ள நமது மதுரஸா மாணவர் ஹாபிழ்.V.M. ஜகரிய்யா அவர்களின் கிராஅத்துடன் விழா கோலாகலமாகத் தொடங்கியது.

கலீஃபா. அட்வகேட்.பீர் முஹம்மத் அவர்கள் “வஹ்ததுல் உஜூத்” பாடலைப் பாட, அதனைத் தொடர்ந்து, கலீஃபா. ஆலிம்புலவர். ஹுஸைன் முஹம்மது அவர்கள் நபிப்புகழ் ஒன்றை இசைத்தார்கள்.

பின்னர், நூலை கலீஃபா.ஆலிம்புலவர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து சிறிது நேரம் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து, நூல் வெளியிடும் சிறப்பான நிகழ்ச்சி தொடங்கியது.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திருச்சி – தஞ்சை மாவட்டங்களுக்கான அரசு டவுன் காழியார் அல்ஹாஜ். மவ்லவி. ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ அவர்கள் முதல் பிரதியை வெளியிட, சங்கைக்குரிய ஸய்யித் மஸ்ஊத் மவ்லானா அவர்கள், முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

இரண்டாம் பிரதியை சங்கைக்குரிய ஸய்யித் நூருல் அமீன் மவ்லானா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மூன்றாம் பிரதியை தலைமை கலீஃபா. H.M. ஹபீபுல்லாஹ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

விழாவின் நிறைவாக சங்கைக்குரிய மஸ்வூத் மவ்லானா அவர்கள் துஆ ஓதி துஆச் செய்தார்கள். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாயகமவர்களின் கலீஃபாக்களும் முரீதீன்களும் மற்றும் உள்ளூர் ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
------------------------------------------------------------------------
கீழக்கரை ஹள்ரத் மஹானந்த பாபா (என்ற)
முஹம்மது அப்துல் காதிர் (ரலி) அவர்களின்

52 – ஆவது புனித கந்தூரி தின விழா!

கீழக்கரையில் மறைந்து வாழும் சங்கைக்குரிய மஹானந்த பாபா (ரலி) அவர்களின் இந்த வருட நினைவு தினம் கடந்த 10-05-2010 – திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.

சென்ற மாதம் 30 – ஆம் தேதியன்று கொடியேற்றப்பட்டு, பத்து நாட்கள் தொடர்ந்து அவர்களின் இராத்திபு மஜ்லிஸ் ஓதப்பட்டு வந்தது.

இம்மாதம் 10 – ஆம் தேதியன்று காலை 7 மணிக்கு திருக்குர்ஆன் ஷரீஃப் முழுமையாக ஓதப்பட்டு கத்தம் செய்யப்பட்டது. அதில் நானும் கலந்து கொண்டு 18 – ஆம் ஜுஸ்வை ஓதி பரக்கத்தான 10 ரூபாய் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

பின்னர், மாலை மஃரிபுத் தொழுகை முடிந்தவுடன் “மகானந்த கீதம்”, “அத்வைத கானம்” மற்றும் “இனாயதுர் ரஹ்மானிய்யா” போன்ற கிதாபுகள் ஓதப்பட்டு, சங்கை செய்யப்பட்டது.

திண்டுக்கல், திருச்சி, மதுக்கூர், எமனேஸ்வரம், பாளையம் போன்ற ஊர்களிலிருந்தும் ஏனைய மற்ற ஊர்களிலிருந்தும் ஏராளமான அஹ்பாபுகள் வந்து, கந்தூரி தின விழாவைச் சிறப்பித்தனர்.

மதியமும் இரவும் சுவையான கந்தூரி உணவு பறிமாறப்பட்டு, தப்ரூக்கும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கந்தூரிக்கான நன்கொடைகள் திண்டுக்கல் ஜனாப்.J. முஹம்மது ரஹ்மதுல்லாஹ் B.A., அவர்கள் மூலமாக வசூல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது.

சங்கைக்குரிய பாபா நாயகம் அவர்களின் ரவ்ளா மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, பரவசமாகக் காட்சியளித்தது.

NEWS - JAHFAR SATHIK