Wednesday, May 12, 2010

இலக்கிய நிகழ்வில் அகராதி அறிமுகம்


துபாயில் மே 7ம்தேதி பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அறிமுகவிழா நடைப்பெற்றது.அவ்விழாவில் அறபு-தமிழ் அகராதி நூலை அறிமுகம் செய்து கிளியனூர் இஸ்மத் பேசினார்.அச்சயமயம் ஈடியே அஸ்கான் நிறுவனத்தின் தலைவர் ஜனாப் சையது சலாவுதீன் அவர்களுக்கு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் அப்துல்கதீம் அறபு-தமிழ் அகராதியின் பிரதியை வழங்கினார்.

அரங்கில் அகராதி அறிமுக உரை

குத்துபுல்பரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்களால் தமிழ் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பல நூற்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது.
புகாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதியவர்களும் இன்ஸானுல் காமில் என்ற ஆத்மஞான நூலுக்கு விரிவுரை எழுதியவர்களும் ஆவார்கள்.அதுமட்டுமின்றி
அரபு மொழியில் நிகரில்லாப் புலமை பெற்று அது போன்றே பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நடமாடும் பல்கலைக் கழகமாக விளங்கியவர்கள்.
இவர்களால் தூய தமிழில் எழுதப்பட்ட அரபு-தமிழ் அகராதி சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.

இவ்வகராதி அவர்கள் மகனார் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹ_ஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்களின் அயராத முயற்சியின் பேரில் பல நவீன கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டு கண்மணிநாயகம் ரசூலே கரீம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லாம் அவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாக இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாது பெருவிழாவில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளரும் அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹித்தீன் எம்.ஏ அவர்கள் இவ்விழாவில் கலந்து அறபு-தமிழ் அகராதியை வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இத்தனைகாலமாகவும் அறபு-தமிழ் அகராதி வெளியிடப்படவில்லை.திருச்சியில் சுல்தான் ஹள்ரத் அவர்கள் ஓர் அகராதியை செய்தார்கள் அது முழுமையாக வெளியிடப்படவில்லை.

அறபு-தமிழ் அகராதி வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இவ்வளவு காலம் இருந்த இஸ்லாமிய தமிழ் சமுதாயத்தின் பெரும்குறையை சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹ_ஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்கள் நிவர்த்தி செய்திருக்கிறார்கள் என்பதை உணரும்போது தமிழ்மொழியும்இ தமிழ்பேசும் மக்களும் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள்.
என்று மௌலானாவைப் பற்றி பேராசிரியர் காதர்மைதீன் அவர்கள் தனதுரையில் கூறினார்கள்.

அதுப்போன்று இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற அரிய நூற்களை இச் சமுதாயத்திற்கு தந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்ககாலப் புலமையை இவர்களின் தமிழ் ஆக்கங்களில் காணமுடியும்.
இவர்களிடம் யாப்புத்திறனையும், ஆழமான கவிதையாற்றலையும் இவர்களின் நூற்களில் காணமுடியும்.

தமிழுக்கு ஒரு புதிய பிரபந்தத்தையே தோற்றுவித்துத் தந்தது இவர்கள் எழுதிய
நாயக பன்னிருபாடல் என்ற கவிதை நூலாகும்.
அத்துடன்
மகானந்தாலங்கார மாலை எனம் சித்திரக்கவியும் தமிழுக்கு தந்துள்ளார்கள்.

இன்னும் ஆன்மீக ஞானத்தேட்டமுள்ளவர்களுக்கு அறபு நூலைகளை தமிழாக்கம் செய்த துஹ்ஃபதுல் முர்ஸலா, ஹகாயிகுஸ்ஸபா, ரிஸாலதுல் கௌதிய்யா, மற்றும் பேரின்பப்பாதை, தாகிபிரபம், பதுறு சஹாபாக்கள், அற்புத அகிலநாதர், அருள்மொழிக்கோவை, ஈழவளநாட்டில் பயிர் பெருக்க வாரீர், இறைவலிய் செய்யிது மௌலானா, மருள் நீக்கிய மாநபி, ஒளியை மறைக்கத் துணியும் தூசி, உண்மை விளக்கம் போன்ற பல நூற்களை தந்துள்ளார்கள்.

கண்மணி நாயகம் ஸல்லாலாஹ் அலைஹி வஸல்லாம் அவர்களின் உற்றத்தோழரான சையதுனா உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை காவியமாக உமர்புராணம் என்ற தலைப்பில் மறைஞானப்பேழை என்ற மாதாந்திர பத்திரிக்கையில் எழுதிவருகிறார்கள்.
இன்னும் திருகுர்ஆனுக்கு விளக்கவுரையும் எழுதிவருகிறார்கள்.

இவர்களின் அளப்பெரிய தமிழ் இஸ்லாமிய இலக்கிய சேவையை போற்றி பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் இவர்களின் அறபு-தமிழ் அகராதியை இந்த அறிமுகவிழாவில் அறிமுகம் செய்வதில் பெருமிதமும் புளகாங்கிதமும் அடைகிறது என்று கூறி விடைபெறுகிறேன்.