Thursday, March 24, 2011

மஹ்பூபே சுபுஹானி, மஉசூகே ரஹ்மானி, முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் புனித கந்தூரி விழா

எல்லாம் இருந்ததொரு காலம். தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்னும் வெளிரங்க வணக்கங்கள் விமர்சையாக கடைபிடிக்கப்பட்ட காலம். கட்டாய கடமை என்பதால் கடமைக்காக கலிமா சொல்லப்பட்ட காலம்.உள்ரங்கம் உருக்குலைய வெளிரங்கத்தில் இஸ்லாமியர் என்னும் அடையாளத்தில் அமோக வரவேற்பை பெற்ற பொய்யர்கள் நிறைந்ததொரு காலம். பற்பல பட்டங்களால் பட்டைதீட்டப்பெற்று பட்டப் பெற்றவர்கள் பசிக்காத பட்டினியாய் படைதிரண்டு நின்றதொரு காலம். மொத்தத்தில் அறியாமையை அறியாத அறிவாளிகள் நிறைந்த அந்த காலக்கட்டத்தில், பிரபஞ்ச சக்கரவர்த்தி, அறிவின் பட்டணம் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் தலைவாயிலாம், எங்கள் அலிபுலியாரின் (ரலி)வழியில் வெளிப்பட்ட ஏனைய கதிரவனில் அதியொளிர் கதிராய், அகமிய சுடராய், அற்புத உருவாய் தோன்றிய முஹையுத்தீன் ஆண்டகை அவர்களின் புனித மவ்லீது மஜ்லிஸ் கடந்த 05-03-2011 முதல் 15-03-2011 வரை 11 நாட்கள் சிறப்பான முறையில் துபை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக ஓதப்பட்டது.

ஒளி அதிகரிக்க இருள் விலகும் என்பதுபோல் அகமிய இறை அறிவை நிறைவாய் தந்து, தம் பாட்டனாரால் விரிக்கப்பட்ட ரத்தினக் கம்பளத்தில் இம்மானிட வர்கத்தை மீண்டும் நடைகொள்ள செய்த மஹ்பூபே சுபுஹானி, மஉசூகே ரஹ்மானி, முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் புனித கந்தூரி விழா கடந்த வியாழன் 17-03-2011 அன்று மஹ்ரிப்பிக்கு பின் புனித மிகு இராத்திப்பத்துல் ஹக்கிகத்துல் காதிரிய்யா ஓதப்பட்டு அதை தொடர்ந்து விழா சிறப்பான முறையில் நிகழ்ந்தது.





இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வ‌கித்தார்க‌ள்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக அருள்மறையாம் திருமறையிலிருந்து அப்துல் பாஸித் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
கொடிக்காள்பாளையம் ஹாஜா அலாவுதீன் வஹ்தத்துல் வுஜூது பாடலினை ஓத‌ அத‌ன் த‌மிழாக்க‌த்தை மன்னார்குடி ஷேக்தாவுது அவர்கள் வாசித்தார்கள்.
மதுக்கூர் சாஹுல் ஹமீது ஞானப்பாடலைப் பாடினார்கள்.
நபிப்புகழ் பாடலினை மதுக்கூர் தாவூது பாடினார்கள்.

இவ்விழாவில் பேசியவர்கள்:

நிர்வாகத்தலைவர் கலீபா ஏபி.சஹாபுதீன் - தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
A.N.M.முஹம்மது யூசுப் M.A
மௌலவி அப்துல்ஹமீது நூரி
சுல்தான், ம‌துக்கூர்
ஹிதாய‌த்துல்லா, ம‌துக்கூர்

தவ்பா பைத் ம‌ற்றும் ச‌லவாத்துட‌ன் விழா சிறப்புட‌ன் நிறைவேறிய‌து. வ‌ருகை த‌ந்த‌ அனைவ‌ருக்கும் இரவு உணவு வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌து.
இப்புனித மவ்லீதுக்கும், விழாவிற்க்கும் தொடர்ந்து வருகை தந்து சிறப்பித்த சிறப்பை பெற்றுச்சென்ற அனைத்தவருக்கும் துபை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்.

தொகுப்பு .மதுக்கூர் அமீர்அலி
புகைப்படம். அதிரை ஷர்புத்தீன்