Tuesday, September 21, 2010

நாணயமே எங்கள் நாயகமே.!

பூரண இறையுடனே பூவுலகில் வாழ்ந்திடுவோம்
புனிதமாம் பெருமானாரின் ஷரிஅத்தை பேணிடுவோம்.!

தவ்ஹீது தோட்டத்தினை சரகு வேலி காத்திடுமே
நம் உடபென்னும் வெளித்தோற்றம் நீண்டு வாழ செய்திடுமே.!

கலிமாவின் உண்மையிலே ஹக்கனும் மறைந்துள்ளான்
காட்டித் தந்த நபிநாதர் அவன் தூதர் ஆனாரே.!

இறைவனை கண்டிட்ட நிறைவான மிஃராஜை
தொழுகையில் ஆக்கித் தந்த உயர் குருவே நாயகமே.!

இறைவனும் உயிரினில் கூலியாக வந்திடவே – அருள் நோன்பை
ஆக்கி வைத்த உயர் மதியே நாயகமே.!

பணத்தாசை அழிந்திடவும் ஏழைகள் உயர்வடைந்திடவும்
பொருளாதார உயர்வாம் ஜக்காத் வகுத்த நன்மதியே நாயகமே.!

ஹஜ்யெனும் உயர் பயணத்தில் உம்மத்தினரை ஒருங்கினைத்து
வல்லோனின் கருணையை வாங்கி தந்த மாமதியே நாயகமே.!

உம்மத்தினரின் உயர்வேதான் தன்வாழ்வாய் நினைத்து வாழ்ந்து
உம்மத்தினரை உயர்த்தியவரே உண்மை நாயகமே.!

எத்தனை தூதர்கள் இவ்வுலகில் வந்தாலும் வல்லோனின் கருணை
என்றும் என் சபாஅத் மீதுதான் என்றுரைத்த எம்தலைவர் நாயகமே.!

இறைவனை அறிவதுதான் மார்க்கத்தின் முதல்கடமை என்று
உலகினர்க்கு எடுத்துரைத்த நல்லறிவாம் நாயகமே.!

உங்கள் போல் பொறுமையுடன் எங்கள் துன்பம் சகித்திடும்
எங்கள் குரு கலீல்நாதர் நீடூழி வாழ அருள்வீரே நாயகமே.!

உங்கள் போல் எளிமையுடன் எங்களுடன் வாழ்ந்திடும்
மாமேதை எம்குரு திருக்குடும்பம் சிறந்துவாழ உதவுவீரே நாயகமே.!

தங்களைப்போல் தங்கமதாய் தரணியில் வாழ்ந்து வரும்
மங்கா புகழ் அஃலேபைத்துகள் தலைசிறக்க நாடுவீரே நாயகமே.!

உங்கள் வழிநடந்திடும் உங்கள் உயிர் பேரராம்
எம்குருநாதர் வழிநடக்கும் எங்களையும் காப்பீரே நாயகமே.!

நீங்கள் உரைத்த உண்மைபடி இறைவனை அறிந்திடவே
உயிர்குருவை கைப்பிடித்த எங்கள் வாழ்வை உயர்த்துவீரே நாயகமே.!

உங்கள் புகழ்பாடிவரும் உயர் நன்மக்கள் புகழ் என்றும்
புவிமீதில் சிறந்திடவே அருள்வீரே நாயகமே.!

எங்களுக்காய் வாழ்ந்து இங்கு சொல்லொன்னா துன்பம் பெற்ற
உங்கள் புகழ் பாடிடவே அருள்வீரே நாயகமே.!

இறையோனை அறியாது உங்கள் மேல் கர்வம் கொண்டு
சீரழியும் தீயார் திருந்திட அருள்வீரே நாயகமே.!

இக்கவி எழுதிய உங்கள் திருப்பேரரின் அடிமை முஹம்மது யூசுப்
குடும்பத்துடன் நலவளங்கள் பெற்றிடவே அருள்வீரே நாயகமே.!

ஏகத்துவக் கல்வியினில் ஏற்றம்பெற எம்குருவிடம் தீட்சைபெற்ற
ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையோர்களுக்கு அருள்வீரே நாயகமே.!


-மதுக்கூர் A.N.M.முஹம்மது யூசுப் M.A. ஹக்கியுல்காதிரி