Saturday, May 15, 2010
பேராசிரியர் அப்துல்லாஹ்வின் அல்லாஹ் பிரச்சாரம்
பேராசிரியர் பெரியார்தாசன் என்ற அப்துல்லாஹ் துபாயில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அறிமுகவிழாவிற்கு அழைப்பட்டிருந்தார்.இந்த அமைப்பில் ஆட்சிமன்றக் குழுவில் நானும் இருப்பதினால் அவரைப்பற்றி தெரிந்துக் கொள்வதற்கு ஆவலுற்றேன்.
பேராசிரியர் அப்துல்லாஹ்வைப் பற்றி ஊடகங்கள் சில அமைப்புகள் பலவித கருத்துக்களை அவர்கூறியதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.அவற்றை மையமாக வைத்து அவரிடம் கேட்கப்பட்ட போது சில கேள்விகளுக்கு விளக்கமளித்தார் சில கேள்விகளுக்கு அப்படியெல்லாம் நான் கூறவில்லை என்று மறுக்கவும் செய்தார்.
தன்னைப்பற்றி அவர் கூறியபோது
இந்துவாக பிறந்து தனது 17வது வயதில் பெரியாரைப்பற்றி ஒரு கவிதை எழுதினேன் அந்த கவிதையை பெரியார் பாராட்டினார் அதனால் எனக்கு அவரின்மேல் பற்று ஏற்பட்டது.அந்தப்பற்று அவரின்மேல் நேசத்தைக் கொடுத்தது.அந்த தருணங்களில் அவரின் கொள்கையைப்பற்றி எனக்கு அவ்வளவு தூரம் தெரியாது.நாளடைவில் அதைத் தெரிந்துக் கொண்டு இந்து மதத்திலிருந்து நாத்தீக கொள்கைக்கு என்னை மாற்றிக் கொண்டேன்.பல மேடைகளில் முழங்கினேன்.தர்க்க சாஸ்திரம் பயின்றேன்.சில காலத்திற்கு பிறகு பெரியாரின் கொள்கையிலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன், பௌத்தத்தையும் படித்தேன் அந்த தருணங்களில் இஸ்லாமியர்களின் மீலாதுவிழாக்களில் கலந்து உரையாற்றியும் உள்ளேன் என்றார்.
இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், பெரியபுராணம், தேவாரம், கம்பஇராமாயணம் போன்ற இலக்கியப் பாடல்களை படித்து மனனம் செய்திருப்பவர்.
தற்போது அப்துல்லாஹ்வாக இருக்கும் தாங்கள் மீலாதுவிழாவில் கலந்துக் கொள்வீர்களா? என்று கேட்டதற்கு
பெரியார்தாசனாக இருந்தபோது முஹம்மது நபியை ஒரு சமயத்தின் தூதர் என்றளவில் தெரிந்திருந்தேன் இன்று அப்துல்லாஹ்வாக ஆனப்பின் முஹம்மது நபி என்று மொட்டையாக கூறமுடியவில்லை அலைஹி வஸல்லாம் என்று கூறுகிறேன் அந்த அலைஹி வஸல்லாம் அவர்களை
முழுமையாக தெரிந்துக் கொண்டு அவர்களின் பிறந்ததின விழாவில் கலந்துக் கொள்வேன். ஆனால் சிலர் மீலாதுவிழாக்களில் கலந்துக் கொள்ளாதீர்கள் என்று என்னை கட்டுப்பாடு இடுகிறார்கள் நான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் அல்ல எந்த அமைப்புக்கும் கட்டுப்பட்டவன் அல்ல.இஸ்லாத்திற்கு புதிதாக வந்தவன் இஸ்லாத்தை முழுமையாக தெரிந்துக் கொள்ளவேண்டும் அதைவைத்து வியாபாரம் செய்யவரவில்லை என்று கூறினார்.
துபாயில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செய்யதுசலாவுதீன் அவர்கள் தனது இல்லத்தில் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கு விருந்து உபசரிப்பு வழங்கினார் அதுசமயம் அப்துல்லாஹ் பேசுகையில்
நானே இஸ்லாத்துக்கு புதுசா வந்துள்ளேன்.என்னை பார்ப்பதற்கு பேசுவதற்கு பல அமைப்புகளிலிருந்து வருகிறார்கள் ஒவ்வொருவர்களும் இதை செய்யாதீங்க, அதை செய்யாதீங்க என்று சொல்கிறார்கள்.ஒருவர் நேற்று ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று நீங்கள் குர்ஆனை மட்டும் பின்பற்றுங்கள் ஹதீஸ் வேண்டாம் என்று கூறினார் என்று சொன்னார்.
அதற்கு செய்யது சலாவுதீன் அவர்கள் ஹதீஸ் இல்லாமல் மார்க்கத்தை பின்பற்ற இயலாது அது முழுமைப்பெறாது என்று கூறிவிட்டு
திருக்குர்ஆன் யாருடைய மொழிபெயர்ப்பை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்று கேட்க
மௌலானா மௌதூதியின் மொழிப் பெயர்ப்பை வாசிக்கிறேன் என்று கூறியதும் அதைவிட அப்துல்வஹாப் (பிறை ஆசிரியர்)அவர்களின் மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவாக இருக்கும் என்று கூறியதும்
என்னிடம் பிஜே மொழிப்பெயர்த்த குர்ஆனும் இருக்கிறது என்றார்.
இந்த உரையாடலில் நானும் இருந்ததினால் நான் குறுக்கிட்டு பிஜே மொழிப் பெயர்ப்பில் தவறுகள் இருப்பதாக ஆலிம்கள் அந்த குர்ஆனை தடை செய்துள்ளார்கள் என்றதும்
செய்யது சலாவுதீன் அவர்கள் அப்படியா என்று ஆச்சரியமாக கேட்டுவிட்டு அவருடைய கொள்கைகளை அதில் புகுத்தி இருப்பார்; அப்துல் வஹாப்பின் மொழிபெயர்ப்பை நீங்கள் வாசித்துப்பாருங்கள் என்று கூறியதும்
அது எங்கு கிடைக்கும் என்று அப்துல்லாஹ் கேட்டதும் தன்னிடம் உள்ள அந்த குர்ஆனை கொண்டுவரும்படி தன் பணியாளரிடம் கூறினார்.
உங்களைப்போன்ற விஞ்ஞானிகள் உண்மையறிந்து இஸ்லாத்திற்கு வந்திருப்பது சந்தோசமான விசயம் ஆனால் உங்கள் நேரத்தை அமைப்புகளுக்கு பிரச்சாரத்திற்காக சிலவளிக்க வேண்டாம் உங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு எத்திவையுங்கள் நம்மவர்களுக்கு ஆலிம்கள் இருக்கிறார்கள் என்றார்.
பேராசிரியர் அப்துல்லாஹ் பல இலக்கியதத்துவப் பாடல்களை படித்திருப்பவர் நாத்திகக் கொள்கையில் தீவிரமாக இருந்தவர் மனோதத்துவ நிபுணர் பல மேடைகளில் மனோதத்துவத்துடன் தான் தனதுரையை துவங்குகிறார்.
உளவியலையும், திருக்குர்ஆனையும் ஆய்வுசெய்தபின்னரே இஸ்லாத்தை ஏற்றுள்ளதாகக் கூறும் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை சில அமைப்பினர்கள் சூழ்ந்து மார்க்க உபதேசம் என்ற பெயரில் அவருக்கு மதம்பிடிக்க முயற்சிக்கின்றனர்.அதுபோன்ற கொள்கைகளில் அமைப்புகளில் அடைப்பட்டிடாமல் தன்னை தற்காத்துக் கொள்வார் என்று அவருடைய பேச்சில் தெளிகிறது.
தொலைபேசியில் பல மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதாக கூறினார்.
பேராசிரியர் அப்துல்லாஹ் பல கல்விக் கற்றிருந்தாலும் தன்னை அறியும் ஞானக்கல்வியையும் கற்று விஞ்ஞானியாகத் திகலும் பேராசிரியர் மெய்ஞ்ஞானியாக இஸ்லாத்தை முழுமையாக பேணுவார் என உங்களைப்போன்று நானும் நம்புகிறேன்.