Sunday, January 3, 2010

சங்கை மிகுந்த ஷைகு நாயகம் அவர்களின் 12 வது ஆண்டு சிங்கை விஜயம்


விஜயத்தின் முத்தான முதல் மூன்று நாட்கள்:

ஷைகு நாயகம் அவர்கள் 1-1-2010 அன்று காலை 10:20 மணியளவில் சிங்கை விமான நிலையத்தை வந்தடைந்தார்கள். சிங்கை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தலைவர் சகோதரர் நிஜாமுத்தீன் தலைமையில் சிங்கை வாழ் முரீதுகளும் மற்றும் இந்தியா, மலேசியா, துபாயிலிருந்து வருகை தந்திருந்த முரீதீன்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு அளித்தார்கள்.


அங்கிருந்து புறப்பட்டுச்சென்ற ஷைகு நாயகம் அவர்கள் சகோதரர் ஆஷிகுர் ரஹ்மான் அவர்களின் இல்லத்தை வந்தடைந்தார்கள். அங்கு அவர்களுக்கு சிங்கை முரீதீன்கள் சார்பாக சகோதரர் நிஜாமுத்தீன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இந்தியாவிலிருந்து வந்திருந்த மூத்த சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பொன்னாடை அணிவித்து சங்கை செய்தார்கள்.

அன்று மாலை முதலாவது மஜ்லீஸ் மஃரீபுக்குப் பிறகு மிக சிறப்பாக நடைபெற்றது. அனைத்து முரீதீன்களும் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்த அமர்வில், சபையின் நோக்கம் மற்றும் அதனின் பயன்களைப்பற்றி ஷைகு நாயகம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். அமர்வின் தொடக்கத்தில் ஞானப்பாடல்களை சகோதரர் ஜாஹிர் ஹுசைன் பாடினார்.

இரண்டாவது அமர்வு சனிக்கிழமை மாலை மஃரீபுக்குப் பிறகு இனிதே நடந்தேறியது. சகோதரர்கள் ஜாஹிர் ஹுசைன் மற்றும் ஜைன் அலி ஆகியோரது இனிய குரலில் ஞான கீதங்கள் அரங்கேறின. இந்த அமர்வில் இன்றைய முஸ்லீம் சமுதாயத்தின் நிலையையும் அதன் வருந்தத்தக்கப்போக்கு பற்றியும் ஷைகு நாயகம் அவர்கள் நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள். அதன் பின்பு முரீதீன்களின் பல கேள்விகளுக்கு ஷைகு நாயகம் அவர்களின் விரிவான பதிலுரைக்குப்பின் மஜ்லீஸ் நிறைவுற்றது.

மூன்றாவது நாள் மஜ்லீஸ் ஞாயிறு மாலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இறையருட்பாவிலிருந்து ஞானப்பாடல்களை சகோதரர்கள் ஜைன் அலி மற்றும் ஜாஹிர் ஹுசைன் பாடினார்கள். ஷைகு நாயகம் அவர்கள் பிரபஞ்சத்தின் நிலையை பற்றியும் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அறிவுப்பூர்வமான நுண்ணிய விளக்கங்களை அழகுற எடுத்துரைத்தார்கள். ஏகத்துவ விளக்கங்கள் பற்றி முரீதீன்கள் கேட்ட கேள்விகளுக்கு திரு குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஞான நூல்களை மேற்கோள்காட்டி அளித்த விளக்கவுரைக்குப்பின் மஜ்லீஸ் இனிதே நிறைவடைந்தது.

அமர்வுகளின் முழுமையான விளக்கவுரைகள் மற்றும் மற்றைய அமர்வுகளின் விவரங்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த இதழ்களில் தொடரும்.

நன்றி- அப்துல் சுhஹான் (சிங்கை)

அக்பர் ஷாஜகான் (துபாய்)