நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஒருவர் தன் உறவுகள் மற்றும் அனைவரையும் விட நேசம் வைக்காதவரை- உண்மை விசுவாசியாக முடியாது.
அதேபோல அவர்களின் வாரிசுகளான அஹ்லபைத்துகள் மீது உள்ளன்பு கொள்ள வேண்டும் என்பதை “நபியே! என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கூலியும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுங்கள்!”.என்ற இறைவசனம் உணர்த்துகிறது. ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்களுக்கு அஹ்லபைத்துகளைத் தெரியாது. அண்ணலாரின் வாரிசுகளைப் புரியாது.
அஹ்லபைத்துக்கள் மீது பிரியம் வைக்காமலிருப்பது கூட ஏதோ அறியாத நிலை என எடுத்துக் கொண்டால் கூட அவர்கள் மீது வெறுப்புக் கொண்டு முஸ்லிம் சமுதாயம் வாழ்கிறது என்றால் அது வியப்பான செய்தியாகத்தான் தெரியும்.
ஆனால் உண்மை அதுதான்! முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) . ஏர்வாடி இப்றாஹிம் பாதுஷா (ரலி) நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா (ரலி) திருச்சி தப்லே ஆலம் பாதுஷா (ரலி) இன்னும் இவர்கள் போன்ற இறைநேசர்களான அவ்லியாக்களை முஸ்லிம்களில் ஒரு சிலர் தூற்றுகின்றனர். பெரும்பாலானோர் அதை ஆமோதிப்பதுபோல அமைதியாக இருந்து அவ்லியாக்கள் மீது உள்@ர ஒரு வெறுப்பை புதைத்து வைத்திருக்கின்றனர்.
இந்த அவ்லியாக்களெல்லாம் யார் தெரியுமா? அஹ்லபைத்துகள் என்னும் நபிகுல வாரிசுகள்.
அவ்லியாக்களை ஏசுறோம் என்ற பெயரில் அஹ்லபைத்துகளை ஏசிக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்வோ அவர்களை நேசிப்பது கடமை என வலியுறுத்தி இருக்க அவர்கள் மீது கோபம் கொள்வது அவர்களை வெறுப்பது போன்ற நிலை முஸ்லிம்கள் செய்யக் கூடிய செயலா? ஆனால் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது? முன்பெல்லாம் அண்ணலாரின் அருமைப் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களை நினைக்காத-அவர்கள் புகழ்பாடாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா? என்ற பாடல் ஒலிப்பது கூட சிர்க் என்ற அநியாய நிலை. அன்று முஹர்ரம் வந்து விட்டால் கர்பலாவில் ஷஹீதான இமாம் உசேன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவு கூறாத நெஞ்சங்களே இருந்ததில்லை. ஆனால் இன்று இமாம் ஹஸன் உசேன் (ரலி) ஆகியோரின் கண்ணீர்க்கதை அநேக முஸ்லிம்களுக்கு அறிமுகமில்லை. இது போற்றப்பட வேண்டிய நிலைதானா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழுகையின் உள்ளும் அல்லாகும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலா ஆலி முஹம்மதின் இறiவா! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்-அவர்களின் கிளையார்களான வாரிசுகள் மீதும் நீ ஸலவாத்துச் சொல்வாயாக! ஏன தாம் சொல்வது இன்னதென அறியாமலே கூறும் சமுதாயம் தொழுகைக்கு உள்ளே அவர்களை நினைத்து புகழ்பாடுவதுபோல தொழுகைக்கு வெளியேயும் அவர்களை நினைப்பது-புகழ்வது அவர்களின் வாழ்க்கைமூலம் பாடம் பெறுவது சிர்க் அல்ல. தவறல்ல என்பதை அறிந்து விளங்கவேண்டும்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன் மற்றொன்று எனது அஹ்லபைத்துகளாகிய வாரிசுகள். இந்த இரண்டையும் பற்றி நிற்கும் வரை நீங்கள் வழிமாறிப்போக மாட்டிர்கள்!
-தலையங்கம் மறைஞானப் பேழை