Saturday, October 17, 2009

ஐயமும் தெளிவும்...2

மனம் எப்பொழுதும் சந்தோசமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.?

எந்த ஒரு நேரத்திலேயும் மனம் சந்தோசமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான் அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறு விஷயத்திற்குக் கடைசிவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டுக் கஷ்டமே அவனை வந்தடைந்து கொண்டிருக்கும். ஆதலால் எந்த ஒரு கஷ்ட நிலையிலும் சந்தோசப்பட்டால் அவனுக்கு அந்தக் கஷ்டம் நீங்கி சந்தோச நிலை உண்டாகும். இது இயற்கை.
கவலை வருமாயின் அவற்றை மறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

(0)

ஏகமாகவே இருப்பதாக நினைத்துவிட்டால் ஏகமாகி விடுவோமா.?

எல்லாமே ஒன்றான பரிபூரண ஒன்றைப் பரிபூரணமாக நினைத்து எங்களுடைய உடலை அதில் அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டால் ஏகமெனும் நிலை உண்டாகிவிடும்.(அது எவ்வாறெனில்) குதம்பைச் சித்தர் வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயமேதுக்கடி, குதம்பாய் பட்டயமேதுக்கடி- என்று பாடினார்.
வெட்டவெளியை மெய்யாகவைத்துக் கொண்டால் அவனுக்கு எதைப்பற்றிய பிரச்சனையும் இருக்காது. வெட்டவெளியாகவே தன்னை நினைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு நினைத்து வருபவன் சில காலங்களில் இதில் சித்தமடைந்து மெய்மறக்கும் தன்மை உண்டாகிவிடும்.


- செய்குனா பதில்கள் - மறைஞானப்பேழை