இறை கேட்ட கேள்வி
மனித இனத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்…?
மகானின் பதில்
இறைவா…! குழந்தை பிறந்தபோது அது பரிபூரணத்திலிருந்து ( உன்னிலிருந்து) பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் நீயாகவே யிருந்தது . அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்புமிருக்கவில்லை. தெய்வீக கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை.
அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினை புரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும் நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று.
தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது.
தன் முன்னைய நிலையை மறந்து நான்வேறு நீவேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தூன் மனம் போன போக்கில் போகவும் அழிவு வேலைகள் செய்யவும் உண்மைக்கு மாறாக நடக்கவும் மானிட நேயம் ஐக்கியம் இரக்கம் முதலானவைகளை உதறித்தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான்.
உன்னிலிருந்து வேறுபட்டுவிட்டான். இதனால் தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்து விடாது தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன் இந்நிலையடைந்தமையால் தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டவன். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன் பூரணமனிதனானான். இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.
-மகான் இமாம் கலீல்அவுன் மௌலானா
No comments:
Post a Comment