உள்ளாகி வெளியாகி
உண்மைக்கே ஒளியாகி
கொள்ளாமல் கொள்ளுமொரு கூட்டம்!-அது
குதுகலிக்கும் ஜமாலிய்யாத் தோட்டம்!
தேட்டமுண்டு நாட்டமுண்டு
திட்டமுண்டு வட்டமுண்டு
கூட்டமுண்டு கலீல்அவ்ன்தம் பின்னே!-அங்கு
குண்டூசிகூட ஆகும் பொன்னே!
பொருளறிந்து புலனறிந்து
பொய்க்காத நலனறிந்து
அருளறிந்து துய்த்திடுமோர் திருப்பம்!-காண
ஆசையுளோர் வைப்பீர் அவ்ன் விருப்பம்!
குருவாகி இருப்பவரைக்
கொள்ளாமல் இறைஞானம்
உருவாகி வந்திடுமோ ஊரில்?-இதை
உணர்ந்து அவ்னைக் கண்டிடுவீர் நேரில்!
திறவுகோலை எடுக்காமல்
திண்டாட்டம் கொடுக்காமல்
உறவுகோலும் மறைஞானப் பேழை!-அதை
உற்றறியார் காசிருந்தும் ஏழை!
- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்