Sunday, May 30, 2010

தாகிபிரபம் ஒரு ஆய்வு


ஞானவெட்டியான்
சங்கைமிகு இமாம் அஸ்சையிது கலீல்அவுன் மௌலானா அவர்கள் எழுதிய ஞாக்கிரந்தமான தாகி பிரபம் நூலை ஞானவெட்டியான் எனும் புனைப்பெயருடைய செயச்சந்திரன் அவர்கள் ஆய்வுச் செய்து தனது சித்தன்.காம் - ல் சென்ற ஆண்டு ஞான வேட்கை உள்ளவர்களுக்காக பதிவிட்டுள்ளார்.
அவருடைய நூலின் ஆய்வை அவரின் அனுமதியின்றி இங்கு இந்த வலையில் மறுபதிவிடுவதால் அவர்கள் மன்னிக்க.
ஆர்வமுள்ளவர்கள் இதுபோன்ற ஞான நூற்களின் ஆய்வுகளையும் விளக்கங்களையும் கற்பதற்கு பெருமுதவியாக இருக்குமென நல்லெண்ணத்தில் இங்கு பதிவிடுகிறேன்.


ஞானவெட்டியான்
என்னைப் பற்றிச் சில வார்த்தைகள் :

தமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டையில் பிறப்பு.

இயற்பெயர் – அ.நட. செயச்சந்திரன் B.Sc., A.M.I.E.R.E.(LOND).,C.A., I.C.W.A., M.B.A.,

தந்தை – திரு.அ.நடராசன். B.A (Hons). ஓய்வுபெற்ற மாவட்டத் தண்டல் நாயகம்

தாய் – திருமதி.சீதை அம்மாள்

எளிமையான வாழ்க்கையிலும், சைவத்தைத் தந்தையூட்ட, திருச்சி சமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம்
(பவுதீகம்) பெற்று, விமானியாக 5 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் பணிமுடித்துப் பின்னர் State Bank of India ல் எழுத்தராகச் சேர்ந்து, படிப்படியாக முதுநிலை மேலாளராகப் பதவி உயர்ந்து 2001ம் ஆண்டு ஓய்வு.

1960லேயே ஆன்மீகத் தேட்டம் மிகுந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபாடு. பல பொய்க் குரு பிரான்களிடம் ஏமாந்து 1966ல் ஞானகுரு கிட்டி, ஞானவினைச் செயலாரம்பம்.

விருப்பம் – பல வழக்கிழந்த நூல்களில் சிறிதேனும் வழக்கிற்கு கொண்டுவந்து இளைய தலைமுறைக்குத் தரவேண்டும்.


ஞானவெட்டியான்

திண்டுக்கல்

தமிழகம்

தாகி பிரபம்*************


ஆக்கியோர்:


பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹசனிய்யுல் ஹாஷிமிய் – இலங்கை

இவ்வறிய கருவூலத்தைப் பற்றி சகோதரர் எனக்குத் தனிமின்னஞ்சலில் முன்னர் எழுதியுள்ளார். அவர் எனக்கு அனுப்பியிருப்பதாகச்சொல்லப்படும் நூல் என் கைக்குக் கிடைப்பதற்கு முன்னரே அந்நூல், எனக்குஅறிவூட்ட, என்னைத் தேடி வந்தது இறையாணையோ? என் கொடுப்பினையோ? அறியேன்.
இவ்வரிய நூலைப்பற்றி சகோதரர் என் கருத்துக்களையும்
கேட்டிருந்தார். ஆனால், படிக்கும்பொழுது, ஒவ்வொரு சொல்லும் சொல்லும்கருத்துக்களும், மனுவுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள உறவைப் பற்றியும்,எப்படி இருந்தோம்? எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கப் போகிறோம்?என்னும் வினாக்களுக்கு விடைகளும் பொதிந்து கிடக்கும் இந்நூலுக்குக்கருத்துக் கூற எனக்கு அருகதையுள்ளதா? என எண்ணிப் பார்த்தேன்.

அப்படியே கூறினும் அது: “பாம்பைப் பார்த்து மண்புழுதானும் ஆடமுயன்றது”போல்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இருப்பினும்:

“கல்லாத மூடன் கவிதை மொழியறியேன்
சொல்லால் தொடங்குகிறேன்…..”(தொழுகைநாமா)

“சிற்றடியானும் சொற்ற கவிகளின்
முற்றும் பிழை களிருந் திடினும்
கற்றவர்க ளிதை குற்ற மகற்றியே
பற்றுதலாகப் படிப்பீரே”(சுகிர்த மெய்ஞான சங்கீர்த்தனம்)

இக்கருவூலத்தை நான் மட்டிலும் அநுபவிக்க மனமில்லாமையாலும், பிரபம்
என்னும் ஞானத் தண்ணீர் வாய்க்கால் வழியோடி ஆங்கிருக்கும் புல்லுக்கும்பொசிய வேண்டும் என்னும் தாளாத ஆசையாலும், பெரியவர்(இந்நூலாசிரியர்)அவர்களிடமிருந்தும், சகோதரரிடமிருந்தும் முன் அநுமதி பெறாமல்இதைத் இணைய தளத்தின் குழுக்களிலுள்ள நண்பர்களுடன் பங்கிட்டுக்கொண்டமைக்கு அவர்கள் இருவரும் மன்னிப்பார்களாக.

“நம்மை மதிப்பதற்காக நாம் ஞானத்தை மக்களுக்கு கூறவில்லை” என்று
அடக்கத்தோடு ஆரம்பமாகும் இந்நூல் பல அரிய கருத்துக்களக் கூறுகிறது.

மார்க்கங்கள்(வழிகள்) நான்கு:

ஷரீஅத் – சரியை – தோல் – வித்து
தறீக்கத் – கிரியை – தசை – மரம்
ஹக்கீகத் – யோகம் – எலும்பு – பூ
ம்·றிபா – ஞானம் – மூளை – கனி
(முரீதுப் படலம் – 854)

ஞானம் என்றால் என்னவென அறிந்துகொள்ளத் துடிப்பவர்களுக்கும், சூபித்துவம்என்றால் என்ன என்றறியத் துடிப்போர்க்கும் இந்நூலில் (ற)சூல்
விடையிறுக்கும்.

சூபித்துவம்:

“லா இன்ன வலா அன்த”

“நானுமில்லை;நீயுமில்லை;இருப்பது இறைவன் ஒருவனே.”

இக்கருத்தை வலியுறுத்துகிறது இந்நூல்.

“தம்மைத் தாமே அறிவது பூரணத்துவம்.”

அதற்கு வழி:

‘மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
நினைவையொரு அம்பாக்கி நினைவேவ லெந்நாளோ”
(ஈரடி கொச்சகப் படலம் 451)

முகக்கண் மூடி அகக்கண் திறக்கக் குரு அவசியம்:

குருவின் முக்கியத்துவம்: பிசுமில் குறம்(பீர்முகமது அப்பா)

“வழியான குருவில்லாத வணக்கம் முழுதெல்லாம்
வையகத்தில் புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும்
தெரியாத குருமாரின் திருமொழி கேட்பதுதான்
தெரிவையர்கள் குசறாவைச் சேர்ந்திருந்த துவமை
சரியான குருவில்லா வணக்கமுள தெல்லாம்
சாவலில்லாக் கோழி முட்டையிட்டது போலுவமை”

ஆகவே பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானாஅல் ஹசனிய்யுல் ஹாஷிமிய் அவர்களை (காணாதிருந்தும்) மானசீகக் குருவாகஏற்றுக்கொண்டு, அவர்களின் புனிதத் தாள் பணிந்து, இக்கருவூலத்தைஇணையத்தில் ஏற்றுகிறேன்.

“ஆரு மடிக்க வந்தால் அன்னைமுந்தி மீதில் மக்கள்
சேரு மதுபோற் புகுந்தேன் செய்யிதத்தே பாத்திமத்தே”

என்னும் ஞானத் தாலாட்டின் படி குருபிரான் அவர்கள் தாள் தஞ்சம் புகுந்தேன்.

குற்றங்குறை இருப்பின், எல்லோரும் என்னை சிறுபயலென நினந்து மன்னிக்க.

எல்லாம் படைத்தாளும் ஏகபெரியவனை எண்ணி மனதில் தொழுதுகொள்ளும்,

அன்புடன்,
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)
*********************

“மானுட உண்மையை அறிவதே ஞானத்தின் நோக்கம். மனிதனை மனிதனாக வாழவைப்பதேஷரியத். சாந்தியும் சமாதானமும் எங்கும் நிலவ, மனிதன் மனிதனாக, மனித நேயம்பேணி வாழ்ந்து, மானுட உண்மையை அறியவேண்டும்” என்று கூறி அவைகளையே
தமது குறிக்கோளாக வைத்துள்ளார் ஞானாசிரியர்.

ஞானாசிரியர் கருத்து:

இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து,
தாகமுடையோருக்கான நீர்ப் பந்தர் என்பதாம்.

எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம்(பிரியம்) உள்ளதோ, அவருக்கிந்நூல் ஒருநீர்ப் பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையைஇந்நூல் நீக்கிவிடும் என்பதாம் என்க.

இந்நூல் இறைஞான உதிப்பேயாம். எண்ணத்திற் கிளர்ந்தவை ஏகபேட்டியாகிஉதித்ததே இ·தெனின் மிகையாகாது. கருத்தா வினா வகுக்கச் சிருட்டி விடைவிடுத்ததே இஃதாம்.

குரோதம் விடுத்துக் குறை தடுத்து நிறையுளமெய்திக் கற்றிடின் இறைத்
திருவருளிசையுமென்பதில் ஐயமின்று.

இவ்வழியில் செல்ல விரும்புவோருக்கே இ·து அமைக்கப்பட்டுள்ளது. ஞானசூனியங்களுக்கன்று.

வாழ்க மெய்ப்பொருள்!
வாழ்க மெய்ஞானம்!!
வாழ்க ஞானிகள்!!!

- அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய்

விளக்கம்:

இங்கு கருத்தா என்பது சிருட்டி கருத்தா (கருத்தாகிய நினைவு). சிருட்டி என்பது சிருட்டிக்கப்பட்ட ஆன்மா தங்கியுள்ள உடல் (நினைவால் சிருட்டிக்கப்பட்ட எண்ணங்கள்).

இறை கேட்டது: முதன் முதலில் நீர் எங்கிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து, நான், நீ யென்றன்றி இல்லாதிருந்த நிலையிலிருந்தபோது, நான் உன்னுடன் கலந்திருந்தேன்.

இறை கேட்டது: அப்போது நீர் உம்மைக் கண்டீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். என்னை யான் கண்டேன்.

இறை கேட்டது: எப்படிக் கண்டீர்?

யான் விடுத்தது : இறைவா, உன்னில் என்னைக் கண்டேன். அப்போது என்னில் உன்னைக் கண்டேன்.

இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, உன்னில் யான் கலந்திருந்தேன்.

இறை கேட்டது: என்னில் நீர் எப்படிக் கலந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, இடைவெளியின்றிக் கலந்தேன்.

இறை கேட்டது: இடைவெளியற்றிருந்தது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல்.

இறை கேட்டது: அப்போது உமது நிலை யெப்படியிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.

இறை கேட்டது: ஏகாந்த நிலையென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.

இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி நிலையான சூனிய நிலையிலிருந்தேன்.

இறை கேட்டது: அப்போது உமக்குப் பார்வையிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம் என்றேன்.

இறை கேட்டது: அது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று பரிபூரணத்தைப் பரிபூரணத்தால் பரிபூரணமாய்ப் பார்த்தேன்.

இறை கேட்டது: எப்படிக் கேட்டீர்?

யான் விடுத்தது : இறைவா, மேற் சொன்னவாறே கேட்டேன்.

இறை கேட்டது: எவ்வாறு சுவாசித்தீர்?

யான் விடுத்தது : இறைவா, மேற்சொன்னவாறேதான்.

இறை கேட்டது: நீர், எவ்வாறு ருசித்தீர்?

யான் விடுத்தது : இறைவா, அவ்வாறேதான்.

இறை கேட்டது: எவ்வாறு உணர்ந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, அதுவும் அவ்வாறே.

இறை கேட்டது: உமக்குக் கண்ணிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் கண்ணாக விருந்தது.

இறை கேட்டது: உமக்குச் செவியிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் செவியாயிருந்தது.

தாகி பிரபம்-2

இறை கேட்டது: உமக்கு நாசியிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் நாசியாயிருந்தது.

இறை கேட்டது: உமக்கு வாயிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் வாயாயிருந்தது.

இறை கேட்டது: உமக்கு ஆக்கையிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் எனதாக்கையாயிருந்தது.

இறை கேட்டது: இப்படியே பரிபூரணமாயிருந்தபோது, உமக்கு ஆரம்பமும் முடிவுமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். ஆரம்பமும் முடிவுமிருந்தன.

இறை கேட்டது: அது என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானே பரிபூரணமானபோது பரிபூரணமான எனக்கு நானே ஆரம்பமும் முடிவுமானேன்.

இறை கேட்டது: நான் எனும் பரிபூரணத்திற்கு உள்ளும் புறமுமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தனவே.

இறை கேட்டது: அஃது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, அதுவே (பரிபூரணம்) தானே அதற்கு உள்ளூம் புறமும்.

இறை கேட்டது: அதற்குத் திக்குத் திசைகளிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தன. அதற்குத் திக்குத் திசைகளும் அதுவே தானே.

இறை கேட்டது: அதற்கு மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாம் அதற்கு அதுவே யாயிருந்தன.

இறை கேட்டது: பரிபூரணத்திற்கு இவ்வளவுதான் என்னும் மட்டும் அளவும் கனமுமுண்டா?

யான் விடுத்தது : இறைவா, பரிபூரணம்(நான்) அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை.

இறை கேட்டது: அதற்கு(பரிபூரணத்திற்கு)க் கால எல்லையுண்டா? முடிவு உண்டா?

யான் விடுத்தது : இறைவா, இல்லையே.

இறை கேட்டது: அப்படியானால் அதன் நிலை என்ன?

யான் விடுத்தது : இறைவா, அது நான் நீயாகவே நிலை பெற்றிருக்கும்.

இறை கேட்டது: அவ்வாறு நிலைபெறும் எனக்கும் உமக்குமிடையே வித்தியாசங்களுண்டா? வேறுபாடுகளுண்டா?

யான் விடுத்தது : இறைவா, அது நான், நீ, அது, இது, அவள், அவன், அவர்கள், இவர்கள், நீங்கள், நாங்கள் எனும் வேறுபாடின்றி நிலை பெற்றிருக்கும்.

இறை கேட்டது: வானம், பூமி, சூரியன், சந்திரன் முதலியனவை எல்லாம் பூரணமாய் என்னிலிருந்துதானே வெளியாயின?

யான் விடுத்தது : இறைவா, ஆம். அது, நீ, நான், எனது, உனது, என், உன், என்றில்லாத உன்னிலிருந்துதான் வெளியாயின.

இறை கேட்டது: என்னிலிருந்து என்று யான் கூறியதன் தாற்பரியத்தைக் கூறுவீரா?

யான் விடுத்தது : ஆம், இறைவா. நீயாகவே வெளியானாய் என்பதை நீ மறைத்துக் கூறுகிறாய்.

இறை கேட்டது: சிருஷ்டிப் பொருட்கள் எனக் கூறப்படுவன எவை?

யான் விடுத்தது : இறைவா, யார் சிருஷ்டித்தார்? நீயிருந்து நீயல்லா வேறு பொருள்களச் சிருஷ்டிப்பின், உனக்கும் பொருள்களுக்கும் இடையே வேறுபாடுண்டல்லவா? அதுதானே இணையென்பது? ஆதலால் நீயாகவேயிருந்து உன்னிலிருந்து வெளியானவற்றைத்தான்
சிருஷ்டிகள் என்கிறோம்.

இறை கேட்டது: அப்படியாயின் எனக்கும், என்னிலிருந்து வெளியானவைகளுக்குமிடையே வேற்றுமையுண்டா?

யான் விடுத்தது : இறைவா, உனக்கும் உன்னிலிருந்து வெளியான சிருஷ்டிகளுக்குமிடையே எவ்வேறுபாடுமில்லை. நீ முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கிறாய்.

இறை கேட்டது: என்னிலிருந்தே வெளியான மனித இனம், என்னை மறந்து விட்டதே?

யான் விடுத்தது : இறைவா, உண்மைதான். வெளியாகும்வரை நானும் நீயும் வேறில்லை. ஒன்றேயென்று கூறிக்கொண்டிருந்த மனித இனமெல்லாம், இப்போது நீயார்? நான்யார்? நீயும் நானும் ஒன்றல்லவே எனக்கூறிக் கொண்டிருக்கின்றன. தாய் தந்தையரை அறியா, தாய் தந்தையர் இல்லா மக்களைப் போன்றுதான் இவர்கள் உள்ளனர்.

இறை கேட்டது: மனித இனமல்லாத மற்ற இனங்களின் நிலையென்ன?

யான் விடுத்தது : இறைவா, அவையெல்லாம் உன்னில்தானே உள்ளன. அவை உன்னிடத்தே நீயாகி வணக்கம்செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இறை கேட்டது: என்னில்தான் அவையிருக்கின்றன என்பதற்கும் அவை என்னில் நானாய் வணக்கம் செலுத்துகின்றன என்பதற்கும் நீர் கண்ட முக்கியத் தத்துவம் யாது?

யான் விடுத்தது : இறைவா, அவை சிருஷ்டி என அறியாமல் முன்னிருந்த நிலையிலேயே உள்ளன. உன்னிலிருந்து நீயாகவே அவை வெளியாகியும், அவை வெளியாகிய தன்மையைஅறியவில்லை. அவற்றிற்கு புத்தியில்லையே! (மனிதனைப் போன்று) சிந்தனையுமில்லையே! அதற்கு நல்லது, கெட்டதும் தெரியவில்லையே! இது கூடும், இது கூடாது என்பனவும் தெரியவில்லையே. அவற்றிற்கு விதிவிலக்கள்களும் (விதிவிலக்கல்களும்) இல்லையே. கையால் அவைகளின் வணக்கம் தாமே தம்மையறியாத அவையே நீயான நிலையில் வணக்கம் செலுத்துகின்றன.

இறை கேட்டது: மனித இனத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்?

யான் விடுத்தது : இறைவா, குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (உன்னிலிருந்து) பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் நீயாகவே யிருந்தது. அதற்குச் சிந்தனை இருக்கவில்லை. எந்தப் பொறுப்பும் இருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப்பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, நீ வேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான். உன்னிலிருந்து வேறுபட்டு விட்டான். இதனால், தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலையடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான்.

இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.(காபிரானான்)

இறை கேட்டது: வந்த பாதை எது?

யான் விடுத்தது : இறைவா, உன்னிலிருந்து எவ்வாறு மாற்றமடைந்து வந்தானோ அதுதான் அந்தப் பாதை.

இறை கேட்டது: அவன் தன்னை யெப்படி அறிதல் வேண்டும்?

யான் விடுத்தது : இறைவா, அவன் தன்னைப்பற்றிச் சிறிதேனும் சிந்திக்கவேண்டும். தான் வயோதிபனானமையும் அதற்கு முன்னிருந்த குழந்தைப் பருவம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும்.

இறை கேட்டது: அதன் முன் அவனது நிலையென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது சிசுவாகத் தன் தாயின் கற்பவறையிலிருந்தது. அதற்கு முன் தாயின் கற்பவறையில் சிறு கருவாய்த் தங்கிற்று.

இறை கேட்டது: இஃது எவ்வாறு உண்டாயது?

யான் விடுத்தது : இறைவா, இஃது தாயினதும், தந்தையினதும் சத்துப் பொருளில் இருந்து உண்டாயது.

இறை கேட்டது: இதற்கு முன் அது எங்கிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, தாயினதும் தந்தையினதும் முதுகந்தண்டிலிருந்தது.

இறை கேட்டது: அது எப்படி இவ்வாறாயது?

யான் விடுத்தது : இறைவா, தாயும் தந்தையும் கூடினமையால் இவ்வாறுண்டாயது.

இறை கேட்டது: அது அங்கே எப்படியிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அது சத்துப்பொருளாயிருந்தது.

இறை கேட்டது: இச்சத்துப் பொருட்களை இவர்கள் எங்கிருந்து பெற்றனர்?

யான் விடுத்தது : இறைவா, இவர்களைச் சூழ்ந்துள்ள பொருள்களிலிருந்து பெற்றுக் கொண்டனர்.

இறை கேட்டது: அப்பொருள்கள் யாவை?

யான் விடுத்தது : இறைவா, அவை தாவரப் பொருள்களும், மிருக இனங்களும், மீன் வகைகளும், பட்சி இனங்களும், தட்ப வெப்பங்களும், காற்று முதலான மற்றுமுள்ளவைகளும்.

இறை கேட்டது: இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

யான் விடுத்தது : இறைவா, இவையெல்லாம் பஞ்ச பூதங்களிலிருந்து வெளியாயின.

இறை கேட்டது: பஞ்ச பூதங்களெல்லாம் எவை?

யான் விடுத்தது : இறைவா, அவையெல்லாம் இயற்கை.

இறை கேட்டது: அப்படியானால் செயற்கை யென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, இயற்கைப் பொருள்களை ஒன்று கூட்டி இயற்றியவைகளே செயற்கை.

இறை கேட்டது: அப்படியாயின் செயற்கையும் இயற்கைதானே?

யான் விடுத்தது : இறைவா, ஆம். செயற்கையும் இயற்கைதான்.

இறை கேட்டது: அவ்வாறாயின் இயற்கை எங்கிருந்து வந்தது?

யான் விடுத்தது : இறைவா, பஞ்ச பூதங்களிலிருந்து இயற்கை வெளியாயிற்று. பஞ்ச பூதங்களும் இயற்கையே.

இறை கேட்டது: இப்பஞ்ச பூதங்களெல்லாம் எங்கிருந்து வந்தவை?

யான் விடுத்தது : இறைவா, இவையெல்லாம் வானின்றிழிந்தவைகளே.

இறை கேட்டது: அப்படியாயின் என்ன?

யான் விடுத்தது : இறைவா, பரந்து விரிந்து நிறைந்து தன்னை வெளிப்படுத்தும் நிலையிலிருந்த அதிலிருந்து வந்தவை. இஃதுமியற்கையே.

இறை கேட்டது: இதற்குமுன் இஃது எங்கிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை யெனவில்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணையில்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளியற்று யாங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்துறைந்த ஒன்றிலிருந்தே வெளியாயது.

இறை கேட்டது: இதற்குமுன் எது இருந்தது?

யான் விடுத்தது : இறைவா, இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றுமிருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.

இறை கேட்டது: நித்திய சத்தியமென்பதென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும், இன்றும், என்றுமே அழிவுமில்லை. மாற்றமுமில்லை, குறைவதுமில்லை, கூடுவதுமில்லை. எல்லாம் பரி பூரணம்.

இறை கேட்டது: அஃறிணைப் பொருளில் அது என்கிறீரே, அது என்ன?

யான் விடுத்தது : இறைவா, அது, இது, அவைகள், இவைகள், அவன், இவன், அவர், இவர், அவள், இவள், இவர்கள், அவர்கள், (இவர்கள்), நான், நாம், நீ, நாங்கள், நீங்கள், முதலான தன்மை, முன்னிலை, படர்க்கை, பன்மைகள் யாவுமற்ற மொழிதற்கியலாத ஒன்றே அந்த தனித்த வொன்று; அதனை அழைக்க எந்த வார்த்தையும் இல்லாத ஒன்றே அதுவான பரிபூரணம்.

இறை கேட்டது: ஒன்று என்பது எது?

யான் விடுத்தது : இறைவா, அதற்குப் பதிலாக அல்லது அதுபோன்ற அல்லது அதுபோன்ற எத்தனையோ இல்லாத, பிறக்காத, பிறப்பிக்காத, அனைத்துமே ஒன்றிலான, அனைத்துமே ஒன்றான அந்த ஒன்றே, அது.

இறை கேட்டது: மேலும் என்னை உம்மால் வருணிக்க முடியுமா?

யான் விடுத்தது : இறைவா, உன்னை வருணிக்க என் நா எழவில்லை. கடலுக்கும் எல்லையுண்டு. ஆயினும் உனக்கோ, உன் புகழுக்கோ எல்லையில்லை. உன் வருணிப்புக்கும் எல்லையில்லை. முடிவுமில்லை. எங்கும் நீ யாகிய பரிபூரணமே. எங்கு சென்றாலும், நீயாகிய
பரிபூரணமே. பிரபஞ்சம் கூடாது, குறையாது. அதற்கு எல்லையில்லை. அது நிறைகோற்போற் சமமானது. திணையோ, பாலோ, எண்ணோ அற்றவனீ. இடத்தினுக்கு இடனானாய், காலத்திற்குக் காலமானாய்.

இறை கேட்டது: என்னை நீர் புகழ்வதாலும், வருணிப்பதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும், எனக்கு என்ன நன்மையுண்டு?

யான் விடுத்தது : இறைவா, நீ புகழுக்குப் புகழானவன். வருணிப்புக்கு வருணிப்பானவன். மதிப்புக்கு மதிப்பானவன். உன்னை எவன் புகழ்ந்தாலும், அப்புகழுக்கு எல்லையுண்டு. ஆனால், உன் புகழுக்கோ எல்லையில்லை. வருணிப்புக்கும் அவ்வாறே, மதிப்புக்கும் அவ்வாறே. நீ தேவையற்றவன். உனக்கு எதுவும் தேவையேயில்லை. அதனால் உனக்கு எந் நன்மையுமில்லை.

இறை கேட்டது: என்னை நீர் புகழ்வதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும், வருணிப்பதாலும், உமக்கு என்ன நன்மையுண்டு?

யான் விடுத்தது : இறைவா, நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும், வருணிக்கும் பண்புகளும், என்னையே வந்தடைகின்றன. அதுவே, யான் பெறும் நன்மைகள். உன்னை நான் இழிவு படுத்தினால் அதுவும் என்னையே வந்தடையும்.

இறை கேட்டது: என்னை ஒரு கூட்டம் மிகவும் மதித்து நடப்பதுபோலும், மரியாதை கொடுப்பதுபோலும் நடந்து கொள்கிறார்களே, இதன் உண்மையென்ன?

யான் விடுத்தது : இறைவா, உன்னையறிந்தவன் உன்னை மதித்தால் தானே அந்த மதிப்பு சிறப்புடைத்தாகும். அறியாதவன் உன்னை எப்படி மதிப்பான்? அதில் உண்மையில்லையே? உனக்குக் காலும் கையும் முகமும் வைத்து உன்னை இணைவைத்து வணங்குகிறவர்கள் உன்னை எப்படித்தான் அறியப் போகிறார்கள். அவர்கள் வணங்கும் வணக்கமும் வணக்கமல்ல. துதிக்கும் துதியும் துதியல்ல.

இறை கேட்டது: நீர் இப்படியே பரிபூரணமாய் இருக்க விரும்பினீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இப்படியே இருப்பதோடு என்னை வெளிக்கொணரவும் விரும்பினேன்.

இறை கேட்டது: அப்போது பரிபூரணத்திற்கு என்னவாயது?

யான் விடுத்தது : இறைவா, அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று.

இறை கேட்டது: சலனமென்பதென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது தோன்றவிருக்கும் நிலை.

இறை கேட்டது: அது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, அஃது யானென்னவிருந்தது, நாமாகத் தோன்ற இருந்த ஆரம்ப நிலை.

இறை கேட்டது: நான் வெளித்தோன்ற நினைத்தேன் என்கிறீரே அதன் தாற்பரியம் என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானெனக் கூறும் நீ வெளித்தோன்ற நினைத்ததாலேதான் நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்துகொள்ள முடியும்.

இறை கேட்டது: அப்போது என்ன நடந்தது?

யான் விடுத்தது : இறைவா, சிறிது சிறிதாய், முழுமை பிரியத் தொடங்கிற்று.

இறை கேட்டது: நானானது நாமானது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, நான் மிக நுணுக்கமாய்ப் பிரிந்தேன். நுண்ணணுக்களானேன். அப்படிப் பிரிந்த என்னிலிருந்தே, ஐம்பூதங்களும் பிரிந்தன. இதுவே, தான் நானாயிருந்த, நான் நாமானவாறு.

இறை கேட்டது: இஃதெல்லாம் என்ன?

யான் விடுத்தது : இறைவா, இவைகள்தாம் இயலாகத் தாமாயியன்ற இயற்கை.

இறை கேட்டது: இயற்கையென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, செயற்கையும் சேர்ந்த இயற்கையென்றேன்.

இறை கேட்டது: இதற்குமேல் வேறேதுமுண்டா?

யான் விடுத்தது : இறைவா, இல்லையென்றேன்.

இறை கேட்டது: இதனை வேறு என்னவெனக் கூறலாம்?

யான் விடுத்தது : இறைவா, இதனை, ஆரம்பம் முடிவற்ற, எதற்குமிணையற்ற, முழுச்சத்தியமான, பரிபூரணமான, பிரபஞ்சம் எனவும் கூறலாம்.

இறை கேட்டது: அப்படியாயின் என்னிலிருந்து நீர் வெளியாகாமல் இருந்தால் இந்தத் தோற்றமும் பார்வையும் இருந்திருக்கா என்பது உண்மையென்கிறீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். உண்மைதானே. என்னில் உன்னை நான் பார்க்கிறேன். நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய். இதிற்றான் நான், நீ என்னும் பிரிந்த பார்வை வந்தது. அதில் நான், நீ எனப்பாராமலும் முழுமையாகக் காண்பதே முழுமையாகும். நான் நீயாகவும், நீ நானாகவும், பிரிவின்றி எப்போதும் என்னில் உன்னையும், உன்னில் என்னையும், பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான முழுத் தோற்றமாகும். இப்போதும், எப்போதும், யான் உன்னிலிருந்து வெளியான போதும் எல்லாத் தோற்றமும் ஒன்றேயெனக்கொண்டு பரிபூரணத்தில், கடலில் அலை கலப்பது போலக் கலந்து, இலயித்து, நிலைத்து, நிற்பதிலே இன்பம் கண்டிருப்பின், வெளியாகாதிருப்பினும், வெளித்தோன்றியிருப்பினும், இரண்டும் பிரம – இரண்டறக்கலந்த சூனிய அமாவான, அந்தகமான, தத்துவ மசி நிலையாகும். சூனியமாய் எப்படியிருந்தோமோ, அப்படியே இப்போதுமிருக்கிறோம் எனும் நிலை கொள்ளல் வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.

இறை கேட்டது: நான் ஏன் வெளிப்பட விருபினேன்?

யான் விடுத்தது : இறைவா, நீ வெளியானமையால் நாம் அளவுகடந்த நன்மை பெற்றோம். ஊமை போலிருந்த நாம், வெளிப்படையாகப் பேசத் தொடுத்தோம். பார்வையற்றவர்கள் போலிருந்த நாம் வெளிப்படையாய்ப் பார்க்கத் தொடுத்தோம். மறைந்திருந்த செயல்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. பொது வாகவிருந்த நாம் தனித்துச் செயற் படத் தலைப்பட்டோம். கடல் நீர்போன்றிருந்த நாம் உப்பாகி உபயோகமானோம். வித்தாகியிருந்த நாம் ஆல் போல் விரிந்து உபயோகமானோம். மொட்டா யிருந்த நாம், பூவாகி எழிற்றோற்றங் கொண்டோம். வெற்று நிலமாகவிருந்த நாம், பூங்காவானோம். வண்ணத்தோற்றங் கண்டோம். இன்புற்றோம். தங்கத் தகடன்னவிண்தோன்றும் கதிரவனைக் கண்டோம். வெள்ளித்தட்டென விண் மிதக்கும் வண்ணத்தகடான வெண்மதியைக் கண்டோம். விண்ணில் விரித்த நீல நிறப்பந்தரெனத்திகழும் நீல வானில் முத்தங்கள் பதிக்கப்பட்டு மின்னிலங்கும் விண்மீன்களில் வண்ண அழகினைக் கண்டோம். பன்னிறங்கள் தோன்றிச் செக்கர் வானின் இயற்கை என்னும் கைவண்ணம் விளையாடும் திருவிளையாடலைக் கண்டோம். கடலைக் கண்டோம். மலையைக் கண்டோம். விளையக் கண்டோம். பச்சைப் பரமதாணி விரிக்கப்பட்ட தென்னத் தோன்றும் பசும் புற்றரையின் எழிலையும், வயனிலங்களின் வண்ண வடிவங்களையும் கண்ணுற்றோம். கண் குளிர்ந்தோம். பயனடைந்தோம். நாமும் நம்மையறிந்தோம். இவ்வள(வு) மகா சக்தி நம்மில் மறைந்திருந்ததை உணர்ந்தோம். நீயும் நானும் ஒன்றேயெனும் நித்திய நிலை யெய்தினோம். பெறும் பேறு பெற்றோம். இதுவே வெளியானதன் நன்மையெனக்கண்டு உனக்கு சாட்டாங்கம் செய்தோம். நிலை மாறாத இதே நிலையை எமக்கென்றென்றும் தந்தருள் பாலிப்பாயாக எனப்பிரார்த்தித்தோம். யாவும் ஊரே யாவருங்கேளிர் எனும் ஒற்றுமையும், எல்லாம் ஒன்றே எனும் ஒருமைத்துவமும், வேற்றுமையற்ற மனிதநேயமும், என்றென்றும் எங்கணும் மிளிர்க. ஞான மார்க்கம் எங்கணும் பரவ, மானிடவினம் ஒன்றேன ஞாலமெல்லாம் பறைசாற்றி சங்கநாதம் பரப்புவோம். ஞாலமெல்லாம், ஞான ஒளி பரவி , இன வேற்றுமைகளும் பகையும் பொறாமையும், பொய்யும் வேரறுந்து போகத் துணை புரிவோம்.

ஞானம் வாழ்க! வளர்க! மிளிர்க!
(முற்றும்)


தாகி பிரபம்-3
இந்நூல் கூறும் கருத்துக்கள்:


இந்நூலில் செயலற்ற சொல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லையும் விரிக்கின் ஒவ்வொரு பக்கம் எழுதலாம். இடம், காலம் கருதி முக்கியமான சூக்குமக் கருத்தை மட்டும் விளக்கியுள்ளோம்.

இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து இருந்தபோது நான் உன்னுடன்
கலந்திருந்தேன். அப்போது, என்னை யான் கண்டேன். உன்னில் என்னைக் கண்டேன். என்னில் உன்னைக் கண்டேன். உன்னில் யான் பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல் இடைவெளி யின்றிக் கலந்திருந்தேன். அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.

ஏகாந்தம்:

நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.

யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி நிலையான சூனிய நிலையிலிருந்தேன். அப்போது பார்வையிருந்தது; கேட்கும் நிலையிருந்தது; சுவாசிக்க முடிந்தது; உருசிக்க முடிந்தது; உணர முடிந்தது; பரிபூரணமும் கண்ணாயும், செவியாகவும், நாசியாகவும், வாயாகவும், ஆக்கையாகவும் இருந்தது;

பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று பரிபூரணத்தைப் பரிபூரணத்தால்
பரிபூரணமாய்ப் பார்த்தேன்; கேட்டேன்; சுவாசித்தேன்; உருசித்தேன்;
உணர்ந்தேன்;

பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம்.

நானே பரிபூரணமானபோது பரிபூரணமான எனக்கு நானே ஆரம்பமும் முடிவுமானேன்.

நான் எனும் பரிபூரணத்திற்கு உள்ளும் புறமுமிருந்தன; திக்குத்
திசைகளிருந்தன; மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாமிருந்தன; பரிபூரணம் தானே பரிபூரணத்திற்கு உள்ளூம் புறமும், திக்கு திசைகளும், மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாம்;

நானாகிய பரிபூரணம் அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை. கால எல்லை இல்லாதது. முடிவில்லாதது;

பரிபூரண நிலை, நான் இறைவனாகவே நிலை பெற்றிருக்கும் நிலை. அந்த நிலையில், எனக்கும் இறைவனுக்கும் இடையே வித்தியாசங்களும் வேறுபாடுகளுமில்லை.

வானம், பூமி, சூரியன், சந்திரன் முதலியனவையெல்லாம் பூரணமாய்
இறைவனிடமிருந்துதான் வெளியாயின.

இறைவனாகவேயிருந்து, இறைவனிலிருந்து வெளியானவை சிருட்டிகள். சிருட்டிக்குப்பின்னும், இறை முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கும். இறைவனிருந்து, இறையம்சமில்லாத வேறு பொருட்களைச் சிருட்டிக்கின், இறைக்கும் அப்பொருளுக்கு வேறுபாடு உண்டு. அதுதான் இணையென்பது.

இறையிலிருந்தே வெளியான மனித இனம், இறையை மறந்து விட்டது உண்மைதான். வெளியாகும்வரை நானும், இறையும் வேறில்லை. ஒன்றேயென்று கூறிக்கொண்டிருந்த மனித இனமெல்லாம், இப்போது இறையார்? நான்யார்? இறையும் நானும் ஒன்றல்லவே எனக்கூறிக் கொண்டிருக்கின்றன. தாய் தந்தையரை அறியா, தாய் தந்தையர் இல்லா மக்களைப் போன்றுதான் இவர்கள் உள்ளனர்.

மனித இனமல்லாத மற்ற இனங்கள் இறையிடத்தே இறையாகி, இறைக்குள் இருந்து, வணக்கம் செலுத்திக் கொண்டு இருக்கின்றன.

அவை சிருட்டி என அறியாமல் முன்னிருந்த நிலையிலேயே உள்ளன. இறையிலிருந்து இறையாகவே அவை வெளியாகியும், அவை வெளியாகிய தன்மையை அறியவில்லை. அவற்றிற்கு புத்தியில்லையே! (மனிதனைப் போன்று) சிந்தனையுமில்லையே! அதற்கு நல்லது, கெட்டதும் தெரியவில்லையே! இது கூடும், இது கூடாது என்பனவும்
தெரியவில்லையே. அவற்றிற்கு விதிவிலக்குகளும் இல்லையே. கையால் அவைகளின் வணக்கம் தாமே தம்மையறியாத அவையே இறையான நிலையில் வணக்கம் செலுத்துகின்றன.

மனித இனத்தைப் பற்றி :

குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (இறையிலிருந்து)
பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் இறையாகவே யிருந்தது. அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்பும் இருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது இறையிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. இறையில் இறையாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, இறை வேறு எனும்
பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான். இறையிலிருந்து வேறுபட்டுவிட்டான். இதனால், தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலை அடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான். இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.(காபிரானான்)

இறைவனிடமிருந்து எவ்வாறு மாற்றமடைந்து வந்தானோ அந்தப் பாதைதான் வந்த பாதை.

மனிதன், தன்னை யெப்படி அறிதல் வேண்டும்?

மனிதன் தன்னைப்பற்றிச் சிறிதேனும் சிந்திக்கவேண்டும். தான் வயோதிகன் ஆனமையும் அதற்கு முன்னிருந்த குழந்தைப் பருவம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும். மனிதனின் முன் நிலை, சிசுவாகத் தன் தாயின் கருவறையிலிருந்தது. அதற்கு முன் தாயின் கற்பவறையில் சிறு கருவாய்த் தங்கிற்று. இஃது தாயினதும், தந்தையினதும் சத்துப் பொருளில் இருந்து உண்டாயது. இவைகளை இவர்களைச் சூழ்ந்துள்ள பொருள்களிலிருந்து பெற்றுக் கொண்டனர். பஞ்ச பூதங்களிலிருந்து வெளியான அவை தாவரப் பொருள்களும், மிருக இனங்களும், மீன் வகைகளும், பட்சி இனங்களும், தட்ப வெப்பங்களும், காற்று முதலான மற்றுமுள்ளவைகளும். தாயினதும் தந்தையினதும் முதுகந்தண்டிலிருந்தது. தாயும் தந்தையும் கூடினமையால் இவ்வாறு உண்டாயது.

வானின்றிழிந்த பஞ்ச பூதங்களெல்லாம் இயற்கை. இயற்கைப் பொருள்களை ஒன்று கூட்டி இயற்றியவைகளே செயற்கை. செயற்கையும் இயற்கைதான். பஞ்ச பூதங்களெல்லாம், பரந்து விரிந்து நிறைந்து தன்னை வெளிப்படுத்தும் நிலையிலிருந்து வந்தவை. இதற்குமுன் இஃது, அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை என இல்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணை இல்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளி இல்லாமல் எங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்து உறைந்த ஒன்றிலிருந்தே வெளியானது. இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றும் இருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.

நித்திய சத்தியமென்பது, என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும்,
இன்றும், என்றுமே அழிவும் இல்லை. மாற்றமும் இல்லை, குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. எல்லாம் பரி பூரணம்.

ஒன்று என்பது, அதற்குப் பதிலாக அல்லது அதுபோன்ற அல்லது அதுபோன்ற எத்தனையோ இல்லாத, பிறக்காத, பிறப்பிக்காத, அனைத்துமே ஒன்றிலான, அனைத்துமே ஒன்றான அந்த ஒன்றே.


இறைவனை வருணித்தல்:

கடலுக்கும் எல்லையுண்டு. ஆயினும் உனக்கோ, உன் புகழுக்கோ எல்லையில்லை. உன் வருணிப்புக்கும் எல்லையில்லை. முடிவுமில்லை. எங்கும் நீ யாகிய பரிபூரணமே. எங்கு சென்றாலும், நீயாகிய பரிபூரணமே. பிரபஞ்சம் கூடாது, குறையாது. அதற்கு எல்லையில்லை. அது நிறைகோற்போல்(தராசு) சமமானது. திணையோ, பாலோ, எண்ணோ அற்றவன் நீ. இடத்தினுக்கு இடனானாய், காலத்திற்குக் காலமானாய். நீ
புகழுக்குப் புகழானவன். வருணிப்புக்கு வருணிப்பானவன். மதிப்புக்கு
மதிப்பானவன். உன்னை எவன் புகழ்ந்தாலும், அப்புகழுக்கு எல்லையுண்டு. ஆனால், உன் புகழுக்கோ எல்லையில்லை. வருணிப்புக்கும் அவ்வாறே, மதிப்புக்கும் அவ்வாறே. நீ தேவையற்றவன். உனக்கு எதுவும் தேவையே இல்லை. அதனால் உனக்கு எந்த நன்மையுமில்லை. நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும், வருணிக்கும் பண்புகளும், என்னையே வந்தடைகின்றன. அதுவே, யான் பெறும் நன்மைகள். உன்னை நான் இழிவு படுத்தினால் அதுவும் என்னையே வந்தடையும். உன்னை அறிந்தவன் உன்னை மதித்தால் தானே அந்த மதிப்பு சிறப்புடையது ஆகும். அறியாதவன் உன்னை எப்படி மதிப்பான்? அதில் உண்மை இல்லையே? அவர்கள் வணங்கும் வணக்கமும் வணக்கமல்ல. துதிக்கும் துதியும் துதியல்ல.

நான் இப்படியே பரிபூரணமாய் இருப்பதோடு என்னை வெளிக் கொணரவும் விரும்பினேன். அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று. சலனம் தோன்றவிருக்கும் நிலை. அஃது யானென்னும் நிலையிலிருந்து, நாமாகத் தோன்ற இருந்த ஆரம்ப நிலை. நானெனக் கூறும் இறை வெளித்தோன்ற நினைத்ததாலேதான் நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்துகொள்ள முடியும்.

அப்போது, சிறிது சிறிதாய், முழுமை பிரியத் தொடங்கிற்று. நான் மிக
நுணுக்கமாய்ப் பிரிந்தேன். நுண்ணணுக்கள் ஆனேன். அப்படிப் பிரிந்த
என்னிலிருந்தே, ஐம்பூதங்களும் பிரிந்தன. இதுவே, தான் நானாயிருந்த, நான் நாமானவாறு. இதுவே, ஆரம்பம் முடிவற்ற, எதற்குமிணையற்ற, முழு சத்தியமான, பரிபூரணமான, பிரபஞ்சம் எனவும் கூறலாம். அப்படியாயின் இறையிலிருந்து நாம் வெளியாகாமலிருந்தால் இந்தத் தோற்றமும் பார்வையும் இருந்திருக்கா என்பது உண்மைதானே. என்னில் உன்னை நான் பார்க்கிறேன். நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய். இதிற்றான் நான், நீ என்னும் பிரிந்த பார்வை வந்தது. அதில் நான், நீ எனப்பாராமலும் முழுமையாகக் காண்பதே முழுமையாகும். நான் நீயாகவும், நீ நானாகவும், பிரிவு இன்றி எப்போதும் என்னில் உன்னையும், உன்னில் என்னையும், பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான முழுத் தோற்றமாகும். இப்போதும், எப்போதும், யான் உன்னிலிருந்து வெளியான போதும் எல்லாத் தோற்றமும் ஒன்றே எனக்கொண்டு பரிபூரணத்தில், கடலில் அலை கலப்பது போலக் கலந்து, இலயித்து, நிலைத்து, நிற்பதிலே இன்பம் கண்டிருப்பின்,
வெளியாகாதிருப்பினும், வெளித்தோன்றி இருப்பினும், இரண்டும் பிரம – இரண்டறக்கலந்த சூனிய அமாவான, அந்தகமான, தத்துவ மசி நிலையாகும்.

ஒன்று மற்றொன்றுடன் சேருவது சங்கற்பம். சேராதது விகற்பம். இப்படி,இரண்டும் அற்ற, 96 தத்துவங்களையும் கடந்த தயாபரனின் கடலாகியதும், நித்திலம் எனும் முத்து (புத்தியில் தெளிவு பெறும் சிறந்த கருத்தான முத்துக்கள்) விளையும் கடலாகவும், நீ வேறு – நான் வேறு என்ற வேற்றுமை நீங்கிய, அழியாத கடலாகவும் உள்ளது நித்தியம். ஆத்துமக் கடல் என்பது எத்து எனும் உபாயங்களின் அறிவால் எட்டப்படுகின்ற அறிவாகும். இது இரண்டற்றது – ஒன்றேயானது – இதை வேதங்கள் அத்துவிதம் என மொழிகின்றன. இந்த இரண்டற்றதுதான் துணையாக நிற்கின்றது.

சூனியமாய் எப்படியிருந்தோமோ, அப்படியே இப்போதுமிருக்கிறோம் எனும் நிலை கொள்ளல் வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.

பற்றிக்கொள்ளும் பற்றில் உலகு எங்கும் பரந்து, விரிந்து, பற்றிக்
கொள்ளாத் தத்துவத்தில் பற்றாது இருந்து ஓங்கி, இப்படிப் பற்றியும்,
பற்றாமலும் இருக்கும் பற்றற்ற இடத்தில் திடமாக இருத்தல் நன்று என்பாம்.

இறைவா, நீ வெளியானமையால் நாம் அளவுகடந்த நன்மை பெற்றோம். ஊமை போலிருந்த நாம், வெளிப்படையாகப் பேசத் தொடுத்தோம். பார்வையற்றவர்கள் போலிருந்த நாம் வெளிப்படையாய்ப் பார்க்கத் தொடுத்தோம். மறைந்திருந்த செயல்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. பொது வாகவிருந்த நாம் தனித்துச் செயற் படத்தலைப்பட்டோம். கடல் நீர்போன்றிருந்த நாம் உப்பாகி உபயோகமானோம். வித்தாகியிருந்த நாம் ஆல் போல் விரிந்து உபயோகமானோம். மொட்டா யிருந்த நாம், பூவாகி எழில் தோற்றம் கொண்டோம். வெற்று நிலமாகவிருந்த நாம், பூங்காவானோம். வண்ணத்தோற்றம் கண்டோம். இன்புற்றோம். தங்கத் தகடன்ன
விண்தோன்றும் கதிரவனைக் கண்டோம். வெள்ளித் தட்டென விண் மிதக்கும் வண்ணத் தகடான வெண்மதியைக் கண்டோம். விண்ணில் விரித்த நீல நிறப் பந்தலெனத்திகழும் நீல வானில் முத்தங்கள் பதிக்கப்பட்டு மின்னிலங்கும் விண்மீன்களில் வண்ண அழகினைக் கண்டோம். பல நிறங்கள் தோன்றிச் செக்கர் வானின் இயற்கையென்னும் கைவண்ணம் விளையாடும் திருவிளையாடலைக் கண்டோம். கடலைக் கண்டோம். மலையைக் கண்டோம். விளையக் கண்டோம். பச்சைப் பரமதாணி விரிக்கப்பட்டதென்னத் தோன்றும் பசும் புற்றரையின் எழிலையும், வயல் நிலங்களின் வண்ண வடிவங்களையும் கண்ணுற்றோம். கண் குளிர்ந்தோம். பயனடைந்தோம். நாமும் நம்மை அறிந்தோம். இவ்வள(வு) மகா சக்தி நம்மில் மறைந்திருந்ததை உணர்ந்தோம். நீயும் நானும் ஒன்றேயெனும் நித்திய நிலை எய்தினோம். பெறும் பேறு பெற்றோம். இதுவே வெளியானதன் நன்மை எனக்கண்டு உனக்கு சாட்டாங்கம் செய்தோம். நிலை மாறாத இதே நிலையை எமக்கு என்றென்றும் தந்தருள் பாலிப்பாயாக எனப்பிரார்த்தித்தோம். யாதும் ஊரே யாவருங்கேளிர் எனும்ஒற்றுமையும், எல்லாம் ஒன்றே எனும் ஒருமைத்துவமும், வேற்றுமையற்றமனிதநேயமும், என்றென்றும் எங்கணும் மிளிர்க. ஞான மார்க்கம் எங்கணும் பரவ, மானிடவினம் ஒன்றேயென ஞாலமெல்லாம் பறைசாற்றி சங்கநாதம் பரப்புவோம். ஞாலமெல்லாம், ஞான ஒளி பரவி, இன வேற்றுமைகளும் பகையும் பொறாமையும், பொய்யும் வேரறுந்து போகத் துணை புரிவோம்.


நாட்டுப் புறத்தில் ஒரு வாக்கியமுண்டு:

“என்னதான் தலைகீழாக நின்றாலும் இக்காரியத்தை முடிக்க முடியாது” என்று கூறுவர்.

இதன் பொருள் என்ன என சிந்தித்திருப்போமா? சிந்திக்காவிடில், இப்பொழுது சிந்திப்போம். இப்பொழுதுமில்லையெனில் நாம் மனுவே இல்லை. ஏனெனில், மனுவுக்குத்தான் சிந்திக்கும் ஆற்றலை இறைவன் தந்திருக்கிறான்.

தலைகீழாக நின்றால் மட்டும் காரியம் முடிந்துவிடுமா? முடியாது.
உட்பொருளைச் சிந்திப்போம். இயற்கையின் இன்னொரு பெயர் இறைவன்.

“என்னதான் இயற்கையொடு ஒன்றினாலும் முடிக்க முடியாது” என்பது பொருள்.

நாம், மேலிருக்கும் வாய்வழி உண்ணுகிறோம். ஆனால், இயற்கையாகிய மரம், செடி முதலியவை கீழிருக்கும் வேர்மூலம் உண்ணுகின்றன.

ஆக, நாம் இயற்கையொடு ஒன்ற, தலைகீழாக மாறவேண்டும். எப்படியெனில், எதை எல்லாம் புறத்தே செய்கிறோமோ அதையெல்லாம் அகத்தே செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, வெளிமூச்சுக்குப் பதில், உள்மூச்சு வாங்க வேண்டும்.

இதே பிரகாரம், நம் தாகி பிரபத்தையணுக:

பரிபூரணத்தில் இருந்தேன். சலனமடைந்து, பரிபூரணத்திலிருந்து, துகள் துகளாய்ப் பிரிந்து வந்தேன். தந்தையின் விந்தால் தாயின் கருப்பத்தில் உதித்துப் பத்து மாதம் கழித்துப் பிரபஞ்சத்தில் விழுந்தேன். அதுவரை, பரிபூரணத்தில் பூரணமாய்க் கலந்திருந்தேன். பின்னர், வளர வளர கதை தலைகீழாயிற்று. பரிபூரணனை மறந்தேன்; இல்லை மறக்கவில்லை; மற்ற இகபர இச்சைகள் முதலியவைக்கு முன்னிடம் கொடுத்தேன். ஆக இறைவனை மறந்தேன். மறுசந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அப்பொழுதாவது திருந்தவேண்டுமே. அதற்கு வழி என்ன? சிந்தித்தேன். நாம் தலைகீழாக மாறவேண்டும். வழி என்ன? நாம் எந்த நிலையிலிருந்து இந்நிலைக்கு வந்தோமோ? அந்நிலைக்குத் திரும்பவேண்டும். அது என்ன நிலை? அதுதான் தாயின் கருப்பத்தில் வசித்தபோது இருந்த நிலை. அப்போது எப்படி இருந்தோம்?

பசியில்லை.
தூக்கமில்லாத் தூக்கம்.
வியர்வை இல்லை.
(அசைவ) உணவில்லை.
மலங்கள் கழிப்பதில்லை.
வெதுவெதுப்பான இளஞ்சூட்டு வெப்பநிலை.
மனத்தில் எண்ணமில்லை;
கருத்தில் சலனமில்லை;
நினைவிலும் சலனமில்லை;
சர்வமும் சூனியம்.
சூனியத்திலும் கன்சூல் மகபியாவெனும் இருள்.

அதற்குள்தானே இறையுள்ளது.
அங்கேயே நாட்டம்.
இதுபோல் இன்னும் பல.

ஆக, இந்நிலைக்கு வர நாம் என்ன செய்யவேண்டும்? என்று சிந்தித்தல் வேண்டும்.

இந்த எண்ண அலைகளைத் தூண்டவே இத் “தாகி பிரபம்”
இது நான் உணர்ந்தவரை.

ஞானம் வாழ்க! வளர்க! மிளிர்க!