சுபாவ குணமே சுபாவ குணமே
நீயோ ஒருவரில் எப்படியோ அமைந்தாய்
நன்மையின் பக்கம் ஒருமுறை செல்வாய்
தீமையின் வாசம் பலமுறை இருப்பாய்
அமைந்த குணமதில் தீமையைக் காண்பாய்
அடடா இவற்றைப் போக்கவே வேண்டும்
நமக்கு இதுவும் வேண்டவே வேண்டாம்
ஒருமுறை நினைப்பாய் மனதுள் கசப்பாய்
நல்லவர் நால்வர் உறையும் இடத்தில்
நயமுடன் சென்றே உரையதைக் கேட்பாய்
உள்ளம் நெகிழ்ந்து உண்மையைத் தொடுவாய்
அவ்விடம் அகன்றால் சுபாவ குணமே
ஏழைகள் வாழும் இடத்தைக் காண்பாய்
வறுமை பயத்தால் ஒடுங்கி நிற்பாய்
பாவம் சுருக்கி நலமதைக் கேட்பாய்
அவ்விடம் அகன்றால் சுபாவ குணமே
நோயுற்ற ஒருவரைக் கண்டே நடப்பாய்
மனமது சோர்ந்து நலமதைக் கேட்பாய்
நமக்கினி வேண்டும் நலமே என்பாய்
அவ்விடம் அகன்றால் சுபாவ குணமே
மரணம் நிகழ்ந்த வீட்டில் செல்வாய்
இனியும் பாவம் செய்தலே வேண்டாம்
மறுமை நினைவால் உறுதியில் நிற்பாய்
அவ்விடம் அகன்றால் சுபாவ குணமே
சேட்டைகள் செய்யும் சுபாவ குணமும்
தீமையை வருத்தும் சுபாவ குணமும்
அறவே ஒழித்து விடவும் இயலா
அதற்கொரு வழியோ அழகா யுண்டு
இன்று செய்து நாளை விடுதல்
என்று செய்து விடுதல் அல்ல
தொடர்ந்து செலுத்தி வெற்றி காண்டல்
எல்லாருக்கும் இயலா தாமே
என்றால் எப்படி நலமே காண்போம்
மனதைத் திருத்தும் குருவழி காண்பாய்
அதனைத் தொடர்ந்து அழகாய் நிற்பாய்
விலகா தென்றும் அவர்பின் செல்வாய்
சகாபாக்களின் சரித்திரம் உண்டு
சாதா மக்களை சான்றோர் ஆக்கி
குணங்கள் மிளிரச் செய்த உண்மை
இதற்கொரு சான்று அதனைப் படிப்பாய்
உடல்பொருள் ஆவியும் அப்படியே தத்தம்
செய்திடும் வரைக்கும் குணத்தினில் மாற்றம்
சுபாவ குணமா தானே செய்யும்
மாற்றம் செய்தது குரு மருந்தாமே
சுபாவ குணமே சுபாவ குணமே
உனையும் சரியாய் செலுத்திடவும் ஓர்
அறிய வாய்ப்பாய் அருகினில் உதயம்
அற்புத ஷெய்கு கலீல்நாதர் அவர்கள்
அவர்கள் உறையும் இடமதைச் சேர்வாய்
அமர்வாய் அவர்களின் மொழிதனைக் கேட்பாய்
பாவம் கரைப்பாய் பலம்தனைச் சேர்ப்பாய்
சரித்திரம் பெறுவாய் சுபாவ குணமே.
--- M.A. சிராஜுதீன். துபை