Tuesday, December 1, 2009

அரியாசனம் யாருக்கு?

லாயிலாஹா இல்லல்லாஹ_ முஹம்மதுற் றசூலுல்லாஹ் என்ற திருக்கலிமா இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஆணிவேராக இருக்கின்றது.இறைவனைத் தவிர வேறு இறையில்லை.முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் என்பது எல்லா முஸ்லிம்களும் அறிந்த ஒன்று.
இரசூல் (ஸல்) அவர்களைப் பற்றி வரலாற்றிலே நாம் படித்துள்ளோம்.

இஸ்லாத்தை பூரணமாக்கி இகத்தைக் காக்க வந்த ஏந்தல் என்று அறிந்திருக்கிறோம். ஆனால் இறைவன் என்னும் சொல்லைத் தானே கேட்டிருக்கிறோம். அந்த சொல்லுக்குத் தானே அச்சப்படுகிறோம். அப்படி என்றால் இறைவன் யார்? என்ற கேள்வி இதயங்களை குடைந்து கொண்டிருந்தாலும் இதைப்பற்றி ஆராயக் கூடாது என்று சிலர் கூறுவதைக் கேட்டு வெறுமனே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்போர் அனேகர். ஆனால் சிலர் மட்டும் அந்த உண்மையை அறிய ஆவலாகவே உள்ளனர். அதை யாரிடம் கற்பது என்று அறியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த இறை நாடிய சிலருக்கு மட்டும் தன்னை அறிவிக்கக் கூடிய நல்லவர்களைக் காட்டித் தருகிறான்.

இந்த இறைத்தேட்டம் என்னில் எழுந்தபோது தாஹிர் பாவா அவர்களின் “சுயம் பிரகாசம்” எனும் நூல் என் கைக்கு கிடைத்தது. அதில் பத்தாவது ஜபம் என்ற ஒரு தலைப்பில் ஒருபக்கத்தில் சில வரிகள் இருந்தன. அதைப் படித்தபோது அது இறைவனைப் பற்றிய சில உண்மைகளை உணர்த்துவது போல் இருந்தன. ஆனாலும் அதன் முழு உண்மை என்னவென்று அறிய ஆவல் ஏற்பட்டபோது எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் வந்த நம் செய்கு நாயகம் ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் நாயகம் அவர்களின் ஞான வெளிப்பாடான “நான”; எனும் பாடலைப் படிக்கும் பேறு பெற்றேன். அது மெய்யாகவே இறைவனைப் பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை அளிப்பது போலிருந்தது. அவர்களிடமே ஞானத்தை அறிய வேண்டும். அதுவே பரிபூரணமான தெளிவை நமக்கு அளிக்கும் என்னும் எண்ணத்தில் அவர்களின் இந்திய வருகைக்காக காத்து இருந்தேன். அந்த நன்னாள் என் வாழ்வில் நான் மறக்க முடியாத பொன்னாள்.

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் திருச்சியில் யாசீன் மன்ஸிலுக்கு வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டு நானும் என் நண்பர்களும் அங்கு சென்றோம். உள்ளே முரீதீன்கள் கூட்டம் நடக்க காத்திருந்தனர். நாங்கள் கூட்டம் முடிந்ததும் உள்ளே செல்ல எத்தனித்தோம். அப்போது ஒரு ரம்மியமான குரல் யாரிடமோ கூறிக் கொண்டிருந்தது என் காதில் கேட்டது.

ஹக்கை அடைய விரும்புபவர்கள் மட்டும் நம்மிடம் வாருங்கள். வேறு எதையும் நாடி நம்மிடம் வரவேண்டாம். ஹக் நாடினால் அனைத்தையும் தரும். இந்தக் குரல் நமது சங்கைக்குரிய செய்கு பிரான் ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களிடமிருந்து முதல்முதலில் கேட்ட ஞானமொழியே அதுதான்.

ஒரு செய்கிடம் ஒரு முரீது எதை நாடிச் செல்லவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த ஆன்மீக மொழி அது. பறவையை வேட்டையாடும் வேடனுக்கு அம்பு எய்ய வேண்டிய பறவையுடைய உடலின் அந்தப் பாகம் மட்டும் தெரிய வேண்டும். அதைப்போன்று ஹக்கை அடைதல் ஒன்று மட்டும் முரீதின் இலட்சியமாக இருக்க வெண்டும். அதை நாடிச் சென்றவர்கள் அதைப் பெற்றார்கள். ஹக்கின் நாட்டப்படி பெற வேண்டிய அனைத்தையும் பெற்றார்கள். வேறு விஷயங்களை நாடிச் சென்றவர்கள் அதைப் பெற்றார்கள். எதைப் பெற வேண்டுமோ அதை இழந்தார்கள்.

கடலின் மேற்பரப்பின் அலைகளைக் கண்டு பயந்தவர்களுக்கு கடலின் உள்ளிருக்கும் விலை மதிப்பில்லா பொக்கிஷங்களைப் பெறமுடியாது. சிறிய விஷயங்களை அறிந்து கொண்டு தான் முழுமையும் அறிந்ததாக எண்ணுபவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை அறிய மாட்டார்கள்.

மனதை குரங்கிற்கு ஒப்பிடுவார்கள். மனதை காற்றுக்கும் ஒப்பிடுவார்கள். மனம் அங்கும் இங்கும் அசைந்து கொண்டே இருக்கும். அது தாவிக் கொண்டிருக்கும். தனது இச்சைக்குத் தக்கவாறு ஆடிக் கொண்டிருக்கும் தனது இச்சைகளை எல்லாம் மனசாட்சி எனக் கருதுபவரும் உண்டு. தன் மன இச்சைகளை அவர்கள் மனசாட்சி என எண்ணி அதற்கு மாறாக தான் நடக்கவில்லை என்று ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு தவறான வழிகளில் செல்வதும் உண்டு. ஆனால் தான் சரியாகவே நடப்பதாகவும் தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பதாகவும் எண்ணுவதும் உண்டு. தனது மன இச்சைகளையே மனசாட்சியாக தன் நாயனாக கருதி வாழ்பவர்களும் உண்டு.

ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஸஜ்தா செய்யச் சொல்லும்போது தன் மனசாட்சிப்படி தான் சரியாக நடப்பதாகவே எண்ணி அகம்பாவத்துடன் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்ய அஜாஜீல் (சைத்தான்) மறுக்கிறான். மனசாட்சி மனசாட்சி என தம்பட்டம் அடிப்பவர்கள் அஜாஜீலின் கூற்று சரியானது என்று தானே எண்ணுவார்கள்? அவன் கேட்ட கேள்வியோ அவன் சொன்ன பதிலோ சரியானது போலத்தான் தோன்றும் ? ஏனெனில் இவர்கள் நினைக்கும் அறிவின்படியும் மனசாட்சியின்படியும் அது சரிதானே. பிறகு ஏன் அல்லாஹ் அஜாஜீலை முனிந்தான்- சபித்தான்? அவன் ஈமானை இழந்த காரணத்தால் இறைவனால் சபிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டான். அல்லாஹ்வின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருந்தால் அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்திருப்பானே? அல்லாஹ் எதைக் கூறினாலும் அது உண்மை என்று ஏற்று இருப்பானே? இறைவனைவிட தான் அதிக அறிவு பெற்றிருப்பதாக நினைத்ததால்தானே அவன் இறையுடன் தர்க்கம் செய்தான்? மாறு செய்தான். இறைவனுக்கு எதிராக கியாம பரியந்தம் போரிடத் துணிந்தான் ? இந்த மன இச்சைகளை நீங்கள் உங்கள் நாயகனாக கருதுகிறீர்களா?

மனித மனம் என்பது ஓர் இருக்கை போன்றது. அதில் யார் இருக்கிறார்களோ அதைப் பொருத்துத்தான் அந்த மனிதன் இயக்கப்படுகிறான். அதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் “குலூபுல் முஃமினீன அர்ஷ{ல்லாஹ”; விசுவாசிகளின் மனங்களே அல்லாஹ்வின் அர்ஷ் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். மனமென்ற இருக்கையில் ஈமான் முழுமையாக இருந்தால் அது அல்லாஹ்வுடைய இருக்கையாக அமைந்துவிடும். ஒருவன் தன் மனம்போனபடி மனோ இச்சைகளை அதில் வைத்தால் அது ஷைத்தானுடைய இருக்கையாக அமைந்துவிடும் அதனால்தான் அல்லாஹ{ ஹாளிர் அல்லாஹ{ நாளிர் அல்லாஹ{ ஷாஹித் என்று மகான்கள் திக்ரு செய்கின்றனர். மனதில் இறைவன் பிரசன்னமானால் அவனே நோட்டமிடுபவனாகவும் அவனே சாட்சியாளனாகவும் அமைந்து விடுவான். மனதில் ஒருவன் தன்னை அமர்த்திவிட்டால் சுயநல ஆட்டம் அங்கு ஆக்கிரமித்துக் கொள்ளும். அவனுடைய மனோ இச்சைகளே அவனுக்கு நாயனாகத் தோன்றும். சைத்தான் தன் ஆதிக்கத்தை அரசாட்சியைத் தொடங்கி விடுவான்.

காமிலானா செய்கு இல்லாதவனுக்கு சைத்தானே செய்காக இருக்கும் என்று அபாயஜீது பிஸ்தாமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த மொழியிலிருந்து நாம் என்ன விளங்கிக் கொள்கிறோம்? மனமென்னும் இருக்கையில் அல்லாஹ் அமர வேண்டுமென்றால் அதற்கு காமிலான செய்கு அவசியம். இல்லையெனில் சைத்தானே அமருவான். அதேபோல சைத்தானை மனோ இச்சைகளை உங்கள் குருவாகக் கொள்ள நினைக்கிறீர்களா? குரங்கினைப் போல கிளைக்குக் கிளை தாவ நினைக்கிறீர்களா ? அல்லது ஈமானைக் கொண்டு மனதை திடப்படுத்தி மனதை ஒரு நிலைப்படுத்தி வாழ்ந்து அல்லாஹ்வைத் தம் மனதிலே (அர்ஷிலே) வைத்திருக்கக்கூடிய செய்கினைக் கொண்டு (ஈமான்) விசுவாசம் கொண்டு உங்கள் இதயங்களையும் அல்லாஹ்வின் அர்ஷாக்க விரும்புகிறீர்களா?

காமிலான செய்குமார்கள் இறையின் பொருத்தத்தைக் கொண்டவர்கள். ரசூல் (ஸல்) அவர்களுடைய குணங்களைக் கொண்டும் குணம் பெற்றவர்கள். குணங்களின் முழுமையத் தன்னகத்தே கொண்டவர்கள். அவர்கள் அப்படி இருப்பார்கள். இப்படி இருப்பார்கள் என்றும் தங்கள் கற்பனைக்குத் தக்கவாறு அவர்கள் இருக்க வேண்டும் என்றும் எண்ணுபவர்கள் ஒருபொழுதும் செய்கைக் கண்டு கொள்ள முடியாது. அவர்களுடைய குணங்களுக்குத் தக்கவாறு தன்னை தாற்றிக் கொள்பவனே உண்மையான முரீதாவான். காலத்தின் அதிபராக விளங்கிய முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்கள் கோபம் வராதவன் கழுதை கோபத்தை அடக்காதவன் முட்டாள் என்று கூறுகிறார்கள். ஆனால் நம்மில் சிலரோ செய்கு என்றால் கழுதையைப் போன்று பொறுமையாக இருப்பவர்கள் தாம் செய்கு என்று கருதுகிறார்கள். அது அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது.

தண்டிக்க வேண்டிய விஷயத்தில் மன்னிப்பதும் மன்னிக்க வேண்டிய விஷயத்தில் தண்டிப்பதும் மோசமானது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களின் ஈரலைக் கடித்த ஹிந்தாவை மன்னித்த பெருமானார் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் அனேகர் வேண்டியும் திருடிய ஒரு பெண்ணின் கையைத் துண்டிக்க ஆணையிட்டார்கள். எதை எதை எவ்வாறு கையாளுவது என்பது செய்குமார்கள் நன்கறிவார்கள். நம்முடைய விருப்பத்திற்குத் தக்கவாறு அவர்கள் கையாள வேண்டும் என்று எண்ணுவது அப்துல்லா இப்னு உபை என்ற முனாபிக் பெருமானார் (ஸல்) அவர்கள் தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எண்ணியது போலாகும். எந்த விஷயத்தைப் பற்றியும் ஸஹாபாக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டாலும் இறையால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் ரசூலுமே அறிவார்கள் என்று தான் கூறினார்கள். தவிர தாங்கள் ஏதோ பெரிய அறிவாளிகள் போல தங்கள் விருப்பத்திற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியதுமில்லை. கூறியதுமில்லை. பெருமானாரிடம் ஒரு விஷயத்தில் அல்லாஹ் அறிவான் என்று கூறிய ஸஹாபமக்களையே பெருமானார் (ஸல்) அவர்கள் விலக்கி வைத்த வரலாறும் உண்டு.

தவ்ர் குகையிலே சிலந்தி வலையைக் கொண்டு எதிரிகளை முறியடித்த பெருமானார் (ஸல்) அவர்கள் பதுறு போர்க் களத்திலே ஸஹாபாக்களை ஒன்று கூட்டி இறையைத் துதித்து போரிடுகிறார்கள். அது பெருமானார் (ஸல்) அவர்களின் இயலாமையைக் காட்டவில்லை. அது பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியைக் காட்டுகிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் கரங்களை தன் கரங்களாக இறைவன் கூறுகிறான். அந்தக் கரங்கள் எந்த எதிரிகளையும் வெல்லக் கூடியது. ஆனால் உலக நியதிக்காகவே அவர்கள் போர் வீரர்களையும் போர்க்களத்தையும் நாடினார்கள். இந்த உண்மையை அறிந்தால் பெருமானார் (ஸல்) அவர்களின் வல்லமை நன்கு விளங்கும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் நான் இரண்டினை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன் மற்றொன்று எனது வாரிசுகள் என்றார்கள். அறிவின் கண்ணைக் கொண்டு ஆராய்ந்துப் பார்க்கும் அறிஞர்களுக்கு ஒன்று நன்கு விளங்கும். குர்ஆன் அது அசலிலே பெருமானார் (ஸல்) அவர்களாகவே இருக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்றாலும் அவர்கள் முழுமையாக பெருமானார் (ஸல்) அவர்களின் அம்சங்கள். ஆகவே புற நிலையிலும் இன்று இஸ்லாத்தைக் காத்து நிற்பது பெருமானார் (ஸல்) அவர்கள்தான். பெருமானார் (ஸல்) அவர்களுடைய அத்தனை நிலைகளும் இந்த இரண்டிற்கும் உள்ளன. இறைவனின் கரங்கள் குர்ஆனுக்கும் உண்டு. பெருமானார் (ஸல்) அவர்களின் புனித வாரிசுகளான அஹ்லபைத்துக்களுக்கும் உண்டு. இதை அறியாதவன் செய்கையும் அறிய முடியாது. செய்குடைய வல்லமையையும் அறிய முடியாது.
இவ்வளவு வல்லமை கொண்ட அஹ்லபைத்துக்களை சாராதவன் தன்னை அஹ்லபைத் எனக் கூறும் ஆஷாடபூதி நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தவன் ஆவான். இறையோடும் போரிட நினைக்கும் ஷைத்தானுக்கு ஒப்பாவான். நற்பிறப்பு பிறக்காதவனாயும் நற்குடியைச் சாராதவனாயும் அவன் இருப்பான். ஆகவே இது விஷயங்களில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அறிவுடனும் நடந்துக் கொள்ளவேண்டும்.

சிறிய விஷயங்களை மிகச் சாதரணமாக விளங்கிக் கொண்டு தன்னை பெரிய ஆலிம் போலவும் ஞான ஆட்சியை விளங்கியது போலவும் பேசுகிறார்கள்.
கொட்டாங்கச்சியின் மூத்திரம் கொசுவிற்கு சமுத்திரம் என்பார்கள். கொசுக்களுக்கு அது சமுத்திரம் தான். ஆனால் ஞானவான்களுக்கு சமுத்திரமே முழங்கால் மட்டம்தான்.


ஞான சமுத்திரமான சங்கைக்குரிய செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஷ{ல் வுஜுது ஜமாலியா செய்யிது கலீல் அவ்ன் நாயகம் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் பரம்பரையிலே உதித்தவர்கள். அவர்களின் விளக்கங்கள் நமக்கு புத்துயிர் ஊட்டின. ஆம்! நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டோம். அவர்களின் விளக்கங்கள் இறைவனை நமக்கு வெளிப்படுத்தின. எம் பெருமானார் (ஸல்) அவர்களின் உண்மையை நாம் அறிய அறிய அவர்கள் மீது நேசமும் பக்தியும் அதிகரித்துக் கொண்டே சென்றன. அந்த அறிவே குருவின் தத்துவத்தை நமக்குக் காட்டியது. சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் வேதத்தால் எழுதப்பட்ட இலக்கியம் அண்ணல் நபியின் உயிர் பெற்ற கன்னல் யாஸீனின் குலக்கொழுந்து. அவர்களின் பாதம் தொட்டவர் வேதம் கொண்டார் அவர்களின் பார்வையைப் பெற்றவர் பர நிலை பெற்றார். அவர்கள் காலத்தைக் காட்டிடும் கண்ணாடி. இந்த ஞாலத்தை இயக்கிடும் முன்N;னாடி. அருட்கொடையாய் வந்த அண்ணல் அவரின் அருந்தவத் தூது.

“அண்ட கோடிகளும் ஓர் பந்தெனக் கைக்குள் அடக்கி விளையாட வல்லீர் “என்ற குணங்குடி மஸ்தான் சாகிபு (ரலி) அவர்களின் குரு தத்வ உண்மைகள் நமக்குத் தெளிவாயின. சாண் தண்ணீரில் நீச்சல் அடிக்க நினைப்பவர்களுக்கு செய்கு நாயகம் அவர்களின் அருமை புரியாது. ஆற்றல் தெரியாது. அர்ஜுனனை வில்லை எடு என்று கிருஷ்ணன் கூறியது அர்ஜுனன் வில் வித்தையில் வல்லவன் தான் ஏதும் அறியாதவன் என்பதற்காக அல்ல. அர்ஜுனனுக்கு வீரன் என்ற பட்டம் கிடைப்பதற்காகத்தான். கடல் அலைகள் அருகில் வரும்போது காலில் படுகிறது என்பதற்காக கடலே தனக்கு அடிமையாகி விட்டது என்று எண்ணி கடலில் இறங்க நினைப்பவன் கதி என்னவாகும் என்பதை குருவை லேசாக கருதுபவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கற்பு நெறி வழுவியவள் வேசி குருநெறி வழுவியவன் நீசன். துன்னுடைய குருவிற்கு துரோகம் செய்பவன் பிரம்ம ராட்சஷன் ஆகிவிடுவான் என இந்துமதம் கூறுகிறது. சிறுசிறு தவறுக்காகவே ரிஷிகளினால் சபிக்கப்பட்டவர்களை இந்து மத நூல்களில் நாம் நிறையக் காணமுடிகிறது. புpராமணன் எனப் பொய் சொல்லி வில ;வித்தைக் கற்றுக் கொண்டதினால் வள்ளலாக விளங்கிய கர்ணன் ஆபத்து சமயத்தில் கற்ற வித்தை மறந்துவிடும். ஏன பரசுராமனால் சபிக்கப்படுகிறார். கர்ணன் செய்த தர்மம் ஆபத்து சமயங்களில் கை கொடுக்கவில்லை. அவருடைய குரு பரசுராமன் கொடுத்த சாபம் தான் கர்ணனின் உயிருக்கு கேடு விளைவித்தது.

குரு துரோகம் குருவின் சாபம் நிச்சயமாக சக்ராத்துடைய காலத்தில் குரு தந்த உண்மைகள் மறந்து செய்த்தானின் ஊசலாட்டத்திற்கு ஆளாகிக் கேடான முடிவையே கொடுக்கும் என்பது அனைத்து சமயங்களின் கூற்று. பட்டத்தின் நூல் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் நூலை விடவிட பட்டம் மேலே பறந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தூரம் நூல் விடப்படுகிறதோ அவ்வளவு உயரப்பட்டம் மேலே பறக்கும். மேலே பறக்கும் பட்டம் தான் மிக உயரத்தில் இருக்கிறோம் என்றும் பட்டம் விடுபவர் கீழே இருக்கிறார் என்றும் இறுமாந்து இருந்தால் நூல் அறுபடும்போது பட்டத்தின் கதி என்னவாகும்? ஊயரத்திற்கு தக்கவாறு சேதாரம் கூடும் என்று பட்டங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

மனைவியும் தானும் ஒரே துணியை மாற்றி மாற்றி தொழும் அளவிற்கு வறுமையில் வாடிய ஸஹாபி ஸஅலபா வுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பெண் ஆட்டினை துவாச் செய்து வழங்கினார்கள். ஆடுகள் பெருகின. மந்தை மந்தையாய்ப் பெருகின. மதீனாவின் எல்லையை விட்டு சென்று ஸஅலபா வெளியில் வசிக்கும் அளவிற்குப் பெருகின. ஜக்காத் முஸ்லிம்களுக்கு விதியானது. ஸஅலபாவிடம் ஜக்காத் கேட்கும் போது ஸஅலபா கொடுக்க மறுத்து தனக்குக் கடமையில்லை என்றார். பெருமானார் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டபோது ஸஅலபாவிற்கு வந்த கேடே ஸஅலாபாவிற்கு வந்த கேடே என்று மூன்று முறை சபித்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஸஅலபா அதைக் கொடுக்க வந்தபோது பின் வந்த கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) கலீபா உமர் (ரலி) அவர்களும் அதைவாங்க மறுத்ததாக வரலாறு கூறுகிறது. ஸஅலபா என்றாலே குள்ள நரி என்றும் பொருள். ஆம் குள்ளநரிகளுக்கு உலகிற்கே அருட்கொடையாய் வந்த சற்குரு நாயகத்தின் ஆற்றல் எப்படி அறிய முடியும்? ஓர் ஆட்டை மந்தையாக மாற்றியவர்களுக்கு மந்தையை மண்மேடாக மாற்ற அதிக காலம் தேவையில்லை. குருவிடம் முழுமையாக திடமாக அசையா நேசத்தில் இருப்பவனே ரசூல் (ஸல்) அவர்களின் மீது முழு நேசத்துடன் இருப்பான்.

ரசூல் (ஸல்) அவர்கள் மீது முழு நேசத்துடன் இருப்பவனே இறைவனின் நேசத்தில் முற்றிலும் முழ்கி இருப்பான் இறையுடன் இருப்பான் நிறைவடைவான்.!

-கலீபா அட்வகேட் A.N.M.லியாகத்அலி B.Sc;B.L மதுக்கூர்

நன்றி- மறைஞானப்பேழை