Monday, October 1, 2012

யார்?

அந்தரத் தோரணம் வானவில்
.. அழகை இறைத்தவன் யார்? - பிறைச்
சந்திரன் கூடவே தாரகை
.. சமைத்து மறைத்தவன் யார்?

வண்ணத்துப்  பூச்சிகளில் வரிகளை
.. வகையாய் நெய்தவன் யார்? - எழில்
எண்ணற்றப் பூவினங்கள் மணங்களை
.. எழுப்பச் செய்தவன் யார்?

பகலும் இரவும்  மாறிவர
.. பூமியைச் சுழற்றுபவன் யார்? - வாழ்வில்
சுகமும் துயரும் மாறிவரச்
.. சோதனை வழங்குபவன் யார்?

மாமறையை வழங்கி போதனைக்கு
.. மாநபியைத் தந்தவன் யார்? - அதனை
தேமதுர நடையில் ஓதுவோர்க்குத்
.. தேர்ச்சிகளைத் தந்தவன் யார்?

ஓடை களில்நீர் உருண்டெழுந்தால்
.. ஓசைகளை அமைத்தவன் யார்? - சிறு
காடைக் குருவிச் சிறகடிக்கக்
.. காற்றைச் சமைத்தவன் யார்?

சொற்களிட்  பொருளைப் புகுத்திச்
..  சுவையறிவுப் படைப்பவன் யார்? - பசும்
புற்களில் உறங்கும் பனியை
.. பகலவனால் துடைப்பவன் யார்?

அணிஅணி யாக  மரங்களை
..அழகுற வைத்தவன் யார்? - அவற்றுள்
பிணிகளைப் போக்கும்  மருந்தினைப்
.. பிழையறத் தைத்தவன் யார்?

தூணின்றி வானை உயரத்
...தூக்கி வைத்த இறைவன் - எவனோ
வீணின்றி வாழ்வை உனக்கு
..வாய்ப்பாய்த் தந்த அவன்தான்
-------
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)