நானல் லாது நீயல்ல
நீயல் லாது அவனல்ல
அவனல் லாது தானல்ல
தானல் லாது வேறல்ல!
நானே மறைந்து நீயானாய்
நீயே மறைந்து அவனானாய்
அவனே மறைந்து தானானாய்
தானே மறைந்து அணுவானாய்!
அணுவா யிருந்து அருவானோம்
அருவா யிருந்து உருவானோம்
உருவா யிருந்து ஒன்றானோம்
ஒன்றா யிருந்து பலவானோம்!
பலவா யிருந்து ஜகமானோம்
ஜகமா யிருந்து ஜடமானோம்
ஜடமா யிருந்து வடிவானோம்
வடிவா யிருந்து பெயரானோம்!
பெயரா யிருந்து மகத்தானோம்
மகத்தா யிருந்து உணர்வானோம்
உணர்வா யிருந்து அறிவானோம்
அறிவா யிருந்து வளமானோம்!
வளமா யிருந்து குணமானோம்
குணமா யிருந்து குணியானோம்
குணியா யிருந்து குறியானோம்
குறியா யிருந்து இனமானோம்!
இனமா யிருந்து குலமானோம்
குலமா யிருந்து யுகமானோம்
யுகமா யிருந்து தொகையானோம்
தொகையா யிருந்து பொருளானோம்!
பொருளாய்த் தற்பதக் கலையானோம்
கலையாய்த் தொம்பதக் கிளையானோம்
கிளையாய் அசிபத நிலையானோம்
நிலையாய் நின்றே மிளிர்வானோம்!
மிளிர்வா யிருந்து தெளிவானோம்
தெளிவா யிருந்து நிறைவானோம்
நிறைவா யிருந்து நிஜமானோம்
நிஜமா யிருந்து நிகரானோம்!
நிகரா யிருந்து சுகமானோம்
சுகமா யிருந்து சுயமானோம்
சுயமா யிருந்து தொடரானோம்
தொடரா யிருந்து தொனியானோம்!
தொனியா யிருந்து மொழியானோம்
மொழியா யிருந்து இயலானோம்
இயலா யிருந்து இசையானோம்
இசையா யிருந்து நடமானோம்!
நடமா யிருந்து உறவானோம்
உறவா யிருந்து கருவானோம்
கருவா யிருந்து வினையானோம்
வினையா யிருந்து வித்தானோம்!
வித்தாய் முளையாய் விளைவானோம்
விளைவிக்கும் பொருள் விரிவானோம்
விரிவாய்க்கொத்தாய்ச் சுவையானோம்
சுவையாய்ப் பயனாய்ச் சத்தானோம்!
சத்தா யிருந்து வானானோம்
வானா யிருந்து வளியானோம்
வளியா யிருந்து கனலானோம்
கனலா யிருந்து புனலானோம்!
புனலா யிருந்து நிலமானோம்
நிலமா யிருந்து பயிரானோம்
பயிரா யிருந்து உயிரானோம்
உயிரா யிருந்து உயர்வானோம்!
உயர்வா யிருந்து ஒளியானோம்
ஒளியா யிருந்து வெளியானோம்
வெளியா யிருந்து உளமானோம்
உளமா யிருந்து மனமானோம்!
மனமா யிருந்து மகிழ்வானோம்
மகிழ்வா யிருந்து நனவானோம்
நனவா யிருந்து கனவானோம்
கனவா யிருந்து நினைவானோம்!
நினைவா யிருந்து மதியானோம்
மதியா யிருந்து வரவானோம்
வரவா யிருந்து விரவானோம்
விரவா யிருந்து திரமானோம்!
திரமா யிருந்து திடமானோம்
திடமா யிருந்து பரிவானோம்
பரிவா யிருந்து அமைவானோம்
அமைவா யிருந்து தரமானோம்!
தரமா யிருந்து லயமானோம்
லயமா யிருந்து பதியானோம்
பதியா யிருந்து பரமானோம்
பரமும் நீ-நான் ஒன்றானோம்!
-சங்கைமிக்க மஹானந்தபாபா