(நபியே) உங்கள் நினைவை (புகழை) உங்களுக்காக உயர்த்தினோம்; என அல்லாஹ் தன் அருள்மறையில் அருளினான்.
இங்கு ""உங்கள் புகழை உயர்த்தினோம்'' என்பதற்கு ""திக்ர்'' என்னும் சொல்லை இறைவன் பிரயோகித்திருப்பது சிந்திக்கத்தக்கது. அல்லாஹ் தன்னைப் பற்றி நினைவு கூர வேண்டும் என்பதற்கு பிரயோகிக்கும் ""திக்ர்'' என்னும் சொல்லை பெருமானார் (ஸல்) அவர்களின் புகழுக்கு உபயோகித்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தை எடுத்துக் காண்பிக்கிறது. மேலும் அவர்களுக்கு தன் திருநாமங்களில் உள்ள ரவூப் - ரஹீம் என்ற நாமங்களைச் சூட்டி அழைப்பதும், ""யாஇபாதீ'' ""எனது அடியார்களே!'' என அவர்கள், மக்களை விளிக்குமாறு திருவசனம் அமைத்திருப்பதும் பெருமானார் (ஸல்) அவர்களின் பெருமையை உணர்த்துவதாக நாம் உணரலாம்.
இத்தகைய புகழுக்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் நம்மை நெருங்கிவிட்டது. இந்த மாதம் நபி நேசர்களுக்கு வசந்த காலமாகி பெருமகிழ்வை அளிக்கிறது.
இந்த அருள் மாதத்தில் அவர்களின் சீறா என்னும் சீரிய சரித்திரத்தை, நாமும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். எல்லா முஸ்லிம் மக்களுக்கும் - மாற்றுமத மக்களுக்கும் நினைவுபடுத்த வேண்டும். அதற்காக மீலாது விழாக்களை ஊர்தோறும் - மஹல்லாதோறும் உற்சாகமாக நடத்த வேண்டும்.
இல்லங்கள் தோறும் மெளலிது ஷரீபு ஓதி அவர்களின் புகழ் மழையில் நம் நாவுகள் - நம் செவிகள் - நம் இதயங்கள் நனைய வேண்டும்.
ஒருசிலர்...... ஆண்டு முழுவதும் நாயகம் (ஸல்) அவர்களை நினைத்துக் கொண்டுதானே இருக்கிறோம்.... இந்த மாதத்தில் மட்டும் தனியாக நினைவு கூரவேண்டியது தேவைதானா? என குதர்க்கம் பேசலாம். அவர்களிடத்தில் கூறுங்கள். ஆண்டு முழுக்க, நாள்தோறும், தொழுகை தோறும் குர்ஆன் ஷரீஃபை ஓதி வருகிறோம். ஆனால், ரமளான் மாதத்தில் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீஃப் முழுவதையும் ஒருமுறை ஓதி விடுவதில்லையா? அது, அல்லாஹ்- ஜிப்ரயீல் - பெருமானார் (ஸல்) ஆகியோர் காட்டித் தந்த வழிமுறையல்லவா? அதுபோலத்தான் இது.
ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணலார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று கூறியதற்கொப்ப அழகிய முன்மாதிரியான அண்ணலாரின் வாழ்க்கை சரிதையை நினைவு கூர்வது அழகிய நடைமுறைதானே?
அதி மேதாவிகளான சிலர், அல்லாஹ்வை நினைவு கூரும் பள்ளிவாசலில் அண்ணலாரை நினைவு கூர்வது, அவர்கள் புகழைப்பேசுவது ""ஷிர்க்'' (இணை) என்று அறியாமல் உளறுகின்றனர். தொழுகையில் நாம் ஓதும் குர்ஆன் ஷரீஃப் நெடுகிலும் அண்ணலாரின் புகழை அல்லாஹ் கூறுவதை அவர்கள் மறந்து விட்டனர்.
இன்னொரு வியப்புக்குரிய வியம் என்னவென்றால்,
அண்ணலாரின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்கள் எனும் நபித்தோழர்களின் வரலாறுகளை"ஹயாதுஸ் ஸஹாபா'' எனும்பெயரில் தஃலீமாக வாசிக்கின்றனர். ஆனால், அந்த ஸஹாபாக்களின் உயிர் நாயகராகிய பெருமானார் (ஸல்) அவர்களின் ஸீரத் - வரலாறைப் படிக்க அஞ்சுகின்றனர். அது மார்க்க விரோதமானது என எண்ணுகின்றனர். இறைவன் அவர்களுக்கும் பெருமானாரைப் புகழும் பாக்கியத்தை தரவேண்டும் என நாம் பிரார்த்திப்போம்.
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் ""நமக்கு மொத்தம் மூன்று பெருநாட்கள். ஒன்று ஈதுல்பித்ரு - இரண்டு ஈதுல் அழ்ஹா, மூன்று பெருமானார் பிறந்த 12ஆம் நாள். எனவே இந்த மாதம் முழுவதும் அதைக் கொண்டாடுங்கள்'' என்று கூறியதுபோல, பன்னிரண்டு நாட்கள் மட்டுமல்ல - ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் அண்ணலாரை எண்ணி எண்ணி மகிழ்ந்து கெண்டாடுவோம்.
-மறை ஞானப்பேழை ஆசிரியர் குழு
துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞானசபையில் 3/02/2011 வியாழன் வெள்ளிஇரவு மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் சுபுஹான மௌலிது புதுப்பொலிவுடன் துவங்கியது.இது ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் சபையில் மிகச்சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஓதிவருவது போல இந்த ஆண்டும் சிறப்பான முறையில் துவங்கி உள்ளது.
மௌலுதுக்குப்பின் பிப்ரவரி மாதக்கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்திற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர் கலீபா A.P.சகாபுதீன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக கோட்டக்குப்பம் முஹைதீன் கிராஅத் ஒதினார்.
ஞானப்பாடல் முஹம்மது தாவூதும் நபிப்புகழ் பாடல் அலிஅக்பர் மற்றும் சாகுல்ஹமீதும் பாடினார்கள்.
பேச்சாளர்கள்
கலீபா A.P.சகாபுதீன்
A.N.M.முஹம்மது யுசுப்
அதிரை அப்துல்ரஹ்மான்
அமீர்அலி
கிளியனூர் இஸ்மத்
சையதுஅலி மௌலானா
ஆகியோர் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் பிறந்த தின சிறப்புகளைப் பற்றியும் அமீரகத்தில் நடத்தும் மீலாதுவிழா கேள்வி பதில் போட்டியைப் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக தௌஃபா பைத்துடன் இஃஷா தொழுகை அங்கே நடைப்பெற்று இனிதே இந்நிகழ்வு நிறைவடைந்தது.